அரசியல்
Published:Updated:

நாட்டு விடுதலைக்காகவா ஜெயிலுக்குப் போனார் சசிகலா?

முத்தரசன்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்தரசன்

- ‘சுரீர்’ முத்தரசன்

2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், புதிய வேளாண் சட்டங்கள், பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், கூட்டணி நிலவரங்கள்... என ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’யின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் பேசினேன்...

“புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மாநிலம் தவிர வேறு எங்குமே தீவிர போராட்டம் நடைபெறவில்லையே... இது விவசாயிகள் தரப்பிலான ஆதரவைத்தானே வெளிக்காட்டுகிறது?’’

“பஞ்சாபில், ‘போராடுபவர்கள் மீது வழக்கு தொடுக்க மாட்டோம்’ என்று அந்த மாநில அரசே அறிவித்திருக்கிறது. மற்றபடி ஹரியானாவிலும் தீவிர போராட்டம் நடைபெறுகிறது... டிராக்டரைக் கொளுத்துகிறார்கள். நாடு முழுவதுமுள்ள 55 விவசாயிகள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து போராடிவருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம். ஆனால், மத்திய, மாநில அரசுகள் இந்த ஜனநாயகப் போராட்டங்களை மதிக்கத் தவறுவதால், ‘போராட்டமே இல்லை’ என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன. எனவே, விவசாயிகளின் மனக்குமுறல்கள் அனைத்தும் தேர்தலின்போது வெளிப்படும்!’’

“ ‘சசிகலா ஒரு குற்றவாளி; அவர் வெளியில் வந்தாலும் அரசியல் மாற்றம் எதுவும் இருக்காது’ என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசியிருக்கிறீர்கள்?’’

“சசிகலா எதற்காக ஜெயிலுக்குப் போனார்... வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமான வழியில் சொத்து சேர்த்திருக்கிறார் என்று கூறித்தானே அவருக்கான தண்டனையை வழங்கியது நீதிமன்றம்? ஆக, சட்ட விரோத காரியங்களுக்காக ஜெயிலுக்குள் சென்ற சசிகலா, விடுதலையாகி வெளியே வந்தால், அவரது ஆதரவாளர்கள் வேண்டுமானால் கோஷம் எழுப்பலாமே தவிர... இது ஒரு பெரிய அரசியல் விளைவையெல்லாம் ஏற்படுத்தாது. விடுதலைப் போராட் டத்தில் பங்கேற்று, ஜெயிலுக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிறாரா என்ன... அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு?’’

முத்தரசன்
முத்தரசன்

“சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க அமைச்சர்கள் பேசிவருகின்றனர். முதல்வரோ, சசிகலா குறித்த பேச்சுகளையே மிக கவனமாகத் தவிர்த்துவருகிறார். ஆக, அரசியலில் சசிகலாவின் தாக்கம் இருக்கிறதுதானே?’’

“எடப்பாடி பழனிசாமி, கூவத்தூரில் சசிகலாவின் பாதங்களை எப்படித் தவழ்ந்துபோய் தொட்டு ஆசிபெற்றார், முதல்வர் ஆனார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இன்றைய சூழலில், சசிகலா வெளியே வரும்போது அ.தி.மு.க-வில் பலரும் அவரை ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம்... அது அவர்களது உட்கட்சிப் பிரச்னை.’’

“பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட வழக்குகளில், நீதிமன்றத்தின் அண்மைக்கால தீர்ப்புகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள், சசிகலா விவகாரத்தில் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறீர்களே... எப்படி?’’

“மிக முக்கியமான, சரியான கேள்வி இது... ‘பாபர் மசூதி இடிப்பு’ச் சம்பவம் என்பது மிக பகிரங்கமாக நடத்தப்பட்ட நிகழ்வு. உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி தோளில் ஏறிக்கொண்டு கூத்தாடியது உள்ளிட்ட செய்திகள், படங்கள், காணொளி காட்சிகள் ஆகியவை அப்போது ஊடகத்திலும் வெளியாகின. இது மட்டுமல்ல... ‘பாபர் மசூதி இடிப்பு ஒரு சட்டவிரோதச் செயல்’ என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் இது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தநிலையில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ‘இவர்கள் யாருமே குற்றவாளிகள் இல்லை’ என்று தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, அவநம்பிக்கையாக மாறுகிறது. எனவே, இந்த வழக்கையும் சசிகலா தண்டிக்கப்பட்ட வழக்கையும் ஒன்றாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை!’’

“ ‘ஆதி திராவிடராய் ஒன்றிணைவோம்’ என்ற வி.சி.க-வின் குரல், அதன் சாதி ஒழிப்புப் பயணத்திலிருந்து விலகுவதாக விமர்சிக்கப்படுகிறதே..?’’

“ `பட்டியல் இனத்திலிருந்து விலக்கி ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று எங்களை அறிவிக்க வேண்டும்’ என்றொரு விவாதம் ஏற்கெனவே இருந்துவருகிறது. இப்போது, ‘ஆதி திராவிடராய் ஒன்றிணைவோம்’ என்றொரு விவாதம். இவற்றில் எதைச் செய்தால், சம்பந்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது விவாதத்துக்குரிய பிரச்னை. எனவே, நிராகரிக்க வேண்டிய தேவையில்லை.’’

“அண்மையில், கூட்டணிக் கட்சிகள் குறித்து துரைமுருகன் ஒருமையில் பேசியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எந்தவித எதிர்ப்பும் வெளிவரவில்லையே..?’’

“ஒருமையில் யாருமே பேசக் கூடாது. அது அரசியல் நாகரிகமும் அல்ல. ‘செய்தியாளர்கள் மத்தியில் தான் பேசிய பேச்சு, யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று துரைமுருகன் கூறிவிட்டார். எனவே, மீண்டும் இது குறித்து நாம் பேச வேண்டாம்!’’

“மத்தியில் பா.ஜ.க மிக வலுவாக இருந்துவரும் இந்தச் சூழலில், எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 10 ஆண்டுக்கால அரசியலில் எடுத்த காத்திரமான நடவடிக்கைகள்தான் என்னென்ன?’’

“மத்தியில் பா.ஜ.க மிக வலுவாக அமர்ந்திருப்பதும், தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெறும் ஐந்து எம்.பி-க்கள் என்ற எண்ணிக்கையோடு மிக மோசமான அளவில் பலவீனம் அடைந்திருப்பதும் உண்மைதான். அதேநேரம் இந்த எண்ணிக்கை மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது. மத்திய அரசு நிறைவேற்றிவரும் மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடிவருகிறது. மக்களின் பக்கம் நின்று தொடர்ந்து போராடுவோம்.”

“நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் எனப் புதிய கட்சிகளும்கூட தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் காட்டிவரும் சூழலில், நீண்ட நெடிய வரலாறுகொண்ட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இருப்பைத் தக்கவைப்பதற்கே போராட வேண்டியதிருக்கிறதே...’’

“அரசியலில், புதிய கட்சிகள் வருவதென்பது வரவேற்கத்தக்க அம்சம்தான். அதேசமயம், மக்களுக்கான களப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பங்களிப்பும், அதற்கான மக்கள் ஆதரவும் பெருகிக்கொண்டே தான் வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரு இயக்கங்களும் இணைந்து ஒரே இயக்கமாகப் பயணிக்கும்போது இன்னும் வலுவானதொரு மக்கள் இயக்கமாகப் பரிணமிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!’’