Published:Updated:

குமரி: `தி.மு.க கூட்டணியில் இப்போதிருக்கும் கட்சிகளே போதும்!’ - சொல்கிறார் பாலகிருஷ்ணன்

`கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், புதிய கட்சி கூட்டணிக்கு வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் இந்தக் கூட்டணி போதும் என ஸ்டாலின் மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்’ என்றார் பாலகிருஷ்ணன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``மத்திய அரசு வேளாண் சட்டத்தை வாபஸ் பெறாததால், டெல்லியில் போராடும் விவசாயிகள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இது ஜனநாயகப் படுகொலை. விவசாயிகளுக்கு ஆதரவாக மற்ற கட்சிகளுடன் பேசி, போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். நாளை ஸ்டாலினைச் சந்தித்து அடுத்தகட்ட முயற்சி குறித்துப் பேசவிருக்கிறோம். வேளாண் சட்டம் என்பது விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் திட்டம். அதனால்தான் மோடி இந்தச் சட்டத்தை திரும்பப் பெறாமல் இருக்கிறார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தி, அப்பாவி விவசாயிகளின் போராட்டத்தை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் சரியான வழிகாட்டுதலைக் கூறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் ஒப்படைத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு அதிகாரம் இல்லை; குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் என்கிறார் கவர்னர். இந்த விஷயத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசுகள் ஃபுட்பால் விளையாட்டு போன்று நாடகம் ஆடுகிறார்கள். எழு பேர் விடுதலையில் பா.ஜ.க-வுக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் கவர்னரைவைத்து இப்படி நாடகம் நடத்துகிறார்கள். அதையே அ.தி.மு.க அரசும் செய்கிறது.

12,000 கோடி ரூபாக்கு பயிர்கடனை தள்ளுபடி செய்ததாக முதல்வர் சொல்கிறார். ஆனால், இப்போதுதான் கடன் பற்றிக் கணக்கு எடுக்கிறார்கள். நான்கில் ஒரு விவசாயிதான் கூட்டுறவு வங்கியில் கடன் எடுக்கிறார். மற்ற விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் கடன் வாங்கியிருக்கிறார்கள். தனியாரிடம் பயிர்க்கடன் வாங்கும் விவசாயிகளையும், கடன் கொடுத்தவரையும் அழைத்து தனியார் கடன்களுக்கு கேரள அரசு நிவாரணம் வழங்கியிருக்கிறது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் விவசாய, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் விவசாயக் கடன்களை மார்ச் 31-க்குள் கடனைக் கட்டுங்கள் என இப்போதுதான் பணம் கட்ட வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு கடன் தள்ளுபடி என அறிவித்திருக்கிறார்கள்.

பாலகிருஷ்ணன் பேட்டி
பாலகிருஷ்ணன் பேட்டி

அ.தி.மு.க - பா.ஜ.க மதவாதக் கூட்டணியை முறியடிக்க தி.மு.க கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறோம். வரும் 20-ம் தேதியிலிருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறோம். வரும் 28-ம் தேதி பிருந்தா காரத் நாகர்கோவிலில் பேசுகிறார். கேரள பினராயி விஜயனை தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்திருக்கிறோம். வலுவான தி.மு.க கூட்டணியை ரஜினியைவைத்து முறியடிக்கலாம் எனப் பார்த்தார்கள். ஆனால், அது முடியாததால் பிற கட்சிகளை ஒருங்கிணைக்க முயல்கிறார்கள். அ.தி.மு.க எப்படி கூட்டணிவைத்து நின்றாலும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. சசிகலாவால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. அ.தி.மு.க-வுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால்தான் எடப்பாடி பதறுகிறார். போலீஸ் பாதுகாப்புடன்தான் அமைச்சர்கள் வெளியே வருகிறார்கள்.

சசிகலா வருகை: ஓ.பி.எஸ். தொடர் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி டென்ஷன்

கூட்டணிக்குத் தலைமை தாங்கும் ஸ்டாலின் புதிய கட்சி கூட்டணிக்கு வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் இந்தக் கூட்டணி போதும் என ஸ்டாலின் மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார். தி.மு.க கூட்டணியில் இப்போது இருக்கும் கட்சிகளே போதுமானதாக உள்ளன. மக்கள் தரும் கோரிக்கைகளை மனுகொடுத்தால் தனித்துறை உருவாக்கி, நூறு நாள்களில் செயல்படுத்துவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். சில வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட ஆரம்பிக்கின்றன. சில நேரங்களில் செய்ய முடியாமல் போய்விடுகிறது. ஆனால், ஸ்டாலின் கூறியது போன்று தனி அதிகாரிகளை நியமித்து அடிப்படைப் பிரச்னைகளை சரிசெய்ய முடியும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு