Published:Updated:

தமிழக அரசுக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளோம்! - சமாளிக்கிறார் தோழர் கே.பாலகிருஷ்ணன்...

ஜனநாயக நாட்டில், ‘ஓர் அரசியல் கட்சியின் கொடியை ஏற்றக் கூடாது’ என்று சொல்பவர்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர.... ‘கொடியே ஏற்றக் கூடாது’ என்று சொல்லக் கூடாது

பிரீமியம் ஸ்டோரி

‘புதிய வேளாண் சட்டம்’, ‘நீட் தேர்வு’, ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு...’ என மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தி.மு.க-வுடன் கைகோத்துப் போராடிவருகின்றனர் கம்யூனிஸ்ட் தோழர்கள். மறுபுறம் தி.மு.க அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். இவற்றில் தேவையான விஷயத்தில்கூட தி.மு.க அரசை கம்யூனிஸ்ட்டுகள் கேள்வி கேட்பதில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படியான அரசியல் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம்...

“பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால் விலை குறைந்துவிடும் என்று கம்யூனிஸ்ட்டுகள்தான் ஆலோசனை கூறிவந்தார்கள்... ஆனால், அவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தி.மு.க அரசை மட்டும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லையே... ஏன்?

“பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்திருக்கும் பல்வேறு வகையிலான வரி விதிப்புகளால்தான் அவற்றின் விலை உச்சத்தைத் தொட்டுவருகிறது. அதனால்தான், ‘பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்துவிட்டால், அதிகபட்சமாக 28 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்க முடியும்’ என்று கடந்த காலங்களில் ஆலோசனை சொன்னோம். ஆனால், எந்தக் காரணத்தைக்கொண்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. எனவேதான், ‘வரியைக் குறைக்காத வரை பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரத் தேவையில்லை’ என்கிறது தி.மு.க அரசு.’’

“ஆனால், ‘பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவருவதற்கு தி.மு.க-தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது’ என்று பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகிறார்களே?’’

“இந்த விஷயத்தில் பா.ஜ.க அரசியல் செய்கிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால், அதிலிருந்து வரி வருவாயாகக் கிடைக்கக்கூடிய மொத்தத் தொகையில் 40 சதவிகிதம் மத்திய அரசுக்கும், அதில் சுமார் பாதியளவான 21 சதவிகிதம் மட்டுமே மாநில அரசுக்கும் கிடைக்கும். எனவேதான், மாநில அரசுகள் இதை எதிர்க்கின்றன. அதிலும்கூட தற்போது தமிழக அரசு, ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டுமானால், இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறது. அதாவது, ‘ஜி.எஸ்.டி-யில் பெட்ரோலுக்கு அதிகபட்சமாக 28 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு வரி விதிக்க வேண்டும். தற்போது பெட்ரோல் மீது மத்திய அரசு விதித்துவரும் செஸ், சர்சார்ஜ் வரி விதிப்புகளை ரத்து செய்ய வேண்டும்’ என்பதுதான் அந்த நிபந்தனைகள். இதற்கு மத்திய பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கத் தயாரா?’’

“சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக்கம்பம் நடுவதில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, தமிழக காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுக்கவில்லையே ஏன்?’’

“ஜனநாயக நாட்டில், ‘ஓர் அரசியல் கட்சியின் கொடியை ஏற்றக் கூடாது’ என்று சொல்பவர்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர.... ‘கொடியே ஏற்றக் கூடாது’ என்று சொல்லக் கூடாது. அந்தவகையில், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுவாக, நாங்கள் நடத்துகிற எல்லாப் போராட்டங்களிலும் வி.சி.க கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல், வி.சி.க நடத்துகிற போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்களும் எதிர்பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில், ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் தனியாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். சேர்ந்து போராடுவதற்கு எங்களையும் அழைத்தால், நாங்களும் போராடத் தயாராகவே இருக்கிறோம்.’’

தமிழக அரசுக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளோம்! - சமாளிக்கிறார் தோழர் கே.பாலகிருஷ்ணன்...

“கூவம் கரையோர குடிசைவாசிகளை அப்புறப்படுத்தும் விவகாரத்திலும்கூட, அ.தி.மு.க அரசுக்கு எதிராகக் காத்திரமான போராட்டங்களைச் செய்துவந்த கம்யூனிஸ்ட்டுகள், தற்போதைய தி.மு.க அரசுக்கு எதிராக அப்படிப் போராடுவதில்லையே?’’

“சமீபத்தில் அரும்பாக்கம் பகுதியில் குடிசைகள் அகற்றப்பட்டபோதும்கூட அந்த மக்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்காக குடிசை மாற்று வாரிய உயரதிகாரிகளை நானே நேரில் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். குடிசைவாழ் மக்கள், எந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கபலமாக நாங்கள் நிற்போம். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரச்சொல்லி ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துவோம். முதல்வர் தொகுதியிலேயேகூட இது போன்று குடிசைகள் அகற்றப்பட்டபோதும் எங்கள் கட்சி சார்பில், போராட்டம் நடத்தினோம். ஆனால், எங்கள் தரப்பு செய்திகளை வெளியிடுகிற ஊடக பலம் குறைவாக இருப்பதையே இந்தக் கேள்வி உணர்த்துகிறது.’’

“ஸ்வாதி படுகொலையில் கைதான ராம்குமார், ‘மின்சார வயரைக் கடித்து இறக்கவில்லை’ என்ற உண்மை தெரியவந்த பிறகும்கூட, தமிழக காவல்துறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லையே?’’

“தற்போது வெளியாகியுள்ள ராம்குமார் பிரதே பரிசோதனை அறிக்கை முடிவுகள், ஸ்வாதி படுகொலையில் ராம்குமாருக்குத் தொடர்பு இருக்கிறதா என்கிற சந்தேகத்தில் ஆரம்பித்து, ராம்குமார் மரணம் வரை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, இது குறித்த ‘உண்மைகளைக் கண்டறியும்விதமாக உயர்மட்டக்குழு ஒன்றை தமிழக அரசு உடனடியாக அமைத்து, மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும்’ என்று ட்விட்டர் வழியே ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், தமிழக அரசு இது குறித்து இன்னும் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை. எனவே, விரைவில் இது குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு