Published:Updated:

``இந்திய வரலாற்றிலேயே வேறெந்த ஓர் ஆளுநரும் செய்யாத மோசமான நடவடிக்கை இது" - சி.பி.எம் பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

"தேசியகீதம் பாடும் முன்னரே ஆளுநர் வெளிநடப்பு செய்கிறாரே... அதை எப்படி எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்கிறார்" - சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

``இந்திய வரலாற்றிலேயே வேறெந்த ஓர் ஆளுநரும் செய்யாத மோசமான நடவடிக்கை இது" - சி.பி.எம் பாலகிருஷ்ணன்

"தேசியகீதம் பாடும் முன்னரே ஆளுநர் வெளிநடப்பு செய்கிறாரே... அதை எப்படி எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்கிறார்" - சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

Published:Updated:
பாலகிருஷ்ணன்

2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநரின் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களுடைய கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்று (09.01.2023) மாலை விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். அப்போது அவர், "தமிழ்நாட்டுடைய ஆளுநரை உடனடியாக வெளியேறவேண்டி வற்புறுத்தியும், அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்யவேண்டி வலியுறுத்தியும் சி.பி.எம் கட்சியின் சார்பில் வருகின்ற 20-ம் தேதி ஆளுநர் மாளிகை முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். கடந்த சில மாதங்களாகவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாகவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமாகவும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானப் போக்கிலும் ஆளுநர் பலவிதமான கருத்துகளை தெரிவிப்பதுமாக இருந்தார். 

ஆளுநர் வெளிநடப்பு
ஆளுநர் வெளிநடப்பு

ஒரு ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிமட்ட தொண்டனைப்போல அவரின் கருத்துகளை தெரிவித்துவருகிறார். இன்று (9.1.2023) அவர் சட்டமன்றத்தில் நடந்துகொண்டமுறை இந்திய சட்டமன்ற வரலாற்றிலேயே வேறெந்த ஓர் ஆளுநரும் செய்யாத மோசமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். மாநில அரசு ஏற்கெனவே அறிக்கையைத் தயாரித்து, அவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளபோது, அதையெல்லாம் அவர் கணக்கில் கொண்டுதான் இன்று அவைக்கு வந்தார். ஆனால், அந்த அறிக்கையை முழுமையாகப் படிப்பதற்கு மாறாக, சில விஷயங்களைப் படிக்காமல் விட்டுவிட்டார். குறிப்பாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் எனும் வரலாற்று ஆளுமைகளுடைய பெயர்களைக்கூட படிக்காமல் தவிர்த்திருக்கிறார். தமிழ்நாடு என்பதை தமிழகம் எனவும்; சமூக நீதி, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் படிக்காமல் நழுவிச் சென்றிருக்கிறார். ஒரு மாநில ஆளுநர், அவருக்கு வழங்கப்படாத, அதிகாரம் இல்லாத முறையில் அறிக்கையை மாற்றிப் படிப்பது என்கிற மோசமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. 

ஒரு மாநில ஆளுநர், அந்த மாநில அமைச்சர்களின் கூட்டு முடிவுக்குக் கட்டுப்பட்டவர். அதை நிறைவேற்றுவது என்பதுதான் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம். ஆனால், அதையெல்லாம் மீறி இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. அதேபோல் இந்திய வரலாற்றிலேயே ஓர் ஆளுநரின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் என நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஆளுநர், வார்த்தைகளைத் தவிர்த்துப் பேசிய பேச்சுக்கள் அவைக்குறிப்பிலே இடம்பெறக் கூடாது என முதலமைச்சர் அறிவித்தவுடனே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியேறிச் செல்கிறார் ஆளுநர். முதல்வரின் இந்தச் செயல், ஆளுநருக்கு நல்ல பதிலடியாக அமைந்திருக்கிறது. மேலும், ஆளுநரைக் கண்டித்து அவரைப் பணிநீக்கம் செய்யக்கோரி கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்துவது மட்டுமின்றி... அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மகத்தான போராட்டத்தை நடத்துவதற்கான வழிகள் பற்றி ஆலோசிக்க இருக்கிறோம். 

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

அதிமுக-வின் பாரம்பரியத்தின்படி பார்த்தால், எடப்பாடி பழனிசாமி ஆளுநரின் போக்கைத்தான் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதைக் கண்டிக்க திராணியில்லாமல் திமுக-வை கண்டிப்பது எதைக் காட்டுகிறது..? மாநில உரிமை எது போனாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டுக்கு எந்த அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்பதையே காட்டுகிறது. தேசியகீதம் பாடும் முன்னரே ஆளுநர் வெளிநடப்பு செய்கிறாரே அதை எப்படி பழனிசாமி ஏற்றுக்கொள்கிறார். ஓர் ஆளுநரே இப்படிப் போகலாமா. இது, மோடி அரசுக்கு அடிபணிந்த கட்சியாக அதிமுக உள்ளது என்பதையே காட்டுகிறது. 

சென்ற வருடம் பொங்கலின்போது குட்டைக் கரும்பு கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்ததால் இம்முறை 'ஆறு அடி கரும்பு' என அரசு அறிவித்தது. எல்லா இடத்திலும் ஆறு அடி உயர கரும்பு கிடைக்குமா எனச் சொல்ல முடியாது. எனவே, தேவைக்கு ஏற்ப சற்றுக் குறைவான உயரக் கரும்பையும் வாங்கிப் பயன்படுத்தலாம் என்பதைதான் சொல்ல விரும்புகிறோம். நாங்கள் மட்டும்தான் மக்கள் பிரச்னையைப் பேசுவோம் என்பதுபோல அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஊழல் இருக்கிறது எனச் சொல்ல முடியுமா..? ஒன்றிய அரசு ஆளும் மற்ற மாநிலங்களில் ஊழலே இல்லையா? அந்த வாட்ச் விவரத்தையே ஏன் வெளியில் சொல்ல மாட்டேங்கிறார் அண்ணாமலை?

சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ஊழல் நடக்கிறது என்றால் அது திமுக அரசு என்றாலும் கட்டாயம் நாங்கள் கண்டிப்போம். ஆனால், ஊழலைப் பற்றி அண்ணாமலை பேசுவதுதான் வேடிக்கை. நெய்வேலியில் புதிதாக நிலம் கொடுப்பதற்கு விவசாயிகள் யோசிப்பதற்குக் காரணம் முழுக்க முழுக்க நெய்வேலி நிர்வாகம்தான். கடந்த காலங்களில் கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கான போதிய நிவாரணங்களை நிர்வாகம் வழங்கவில்லை. எனவேதான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர் நிலங்களைக் கையகப்படுத்துங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்" என்றார்.