Published:Updated:

`மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல்?’ - சரத் பவார் வீட்டுக்கே சென்று சமாதானம் பேசிய உத்தவ்!

உத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார்

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடியில் விரிசல் ஏற்படும் அபாயத்தைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே, சரத்பவார் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று பேசினார்.

Published:Updated:

`மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல்?’ - சரத் பவார் வீட்டுக்கே சென்று சமாதானம் பேசிய உத்தவ்!

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடியில் விரிசல் ஏற்படும் அபாயத்தைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே, சரத்பவார் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று பேசினார்.

உத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து 2019-ம் ஆண்டு மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணி இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. தற்போது இந்தக் கூட்டணியில் மூன்று கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. சாவர்க்கர் விவகாரத்தில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தால் உத்தவ் தாக்கரே காங்கிரஸ்மீது கடும் அதிருப்தியில் இருந்தார். அதே போன்று அதானி விவகாரத்தில் சரத் பவார் தெரிவித்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியை அதிருப்தியடைய வைத்தது. இதற்கிடையே, முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) `மின்னணு வாக்கு இயந்திரத்தில் யாரும் எந்தவித மோசடியும் செய்ய முடியாது’ என்று தெரிவித்தார். இதுவும் உத்தவ் தாக்கரேவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

`மகா விகாஸ் அகாடி கூட்டணியில் விரிசல்?’ - சரத் பவார் வீட்டுக்கே சென்று சமாதானம் பேசிய உத்தவ்!

அதோடு உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியிலிருந்து விலகும் முன்பு மகா விகாஸ் அகாடி கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சரத் பவார் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக சரத் பவார் தனியார் டி.வி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``முதல்வரை மூன்று கட்சிகளும் இணைந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தன. அப்படியிருக்கும்போது மூன்று கட்சித் தலைவர்களிடமும் கலந்து ஆலோசிக்காமல் எப்படி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம்?” என்று சரத் பவார் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சியுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்திருப்பது சரத் பவாருக்குப் பிடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இது போன்ற காரணங்களால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் விலகுவது குறித்து ஆலோசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மாநகராட்சி தேர்தல் வரக்கூடிய நேரத்தில் சரத் பவார் கட்சி கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றால் அதோடு காங்கிரஸ் கட்சியும் சென்றுவிடும். அதன் பிறகு மகா விகாஸ் அகாடி என்ற ஒன்றே இருக்காது. இது போன்ற காரணங்களால் உத்தவ் தாக்கரே நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் உடனிருந்தார்.

சரத் பவார் - உத்தவ் தாக்கரே
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

மூன்று தலைவர்களும் வரும் தேர்தலை எப்படி இணைந்து எதிர்கொள்வது என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர். இதற்கிடையே, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேருவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித் பவார் சில தினங்கள் யாரையும் தொடர்புகொள்ளாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.