Published:Updated:

க்ரைம் டேப்ஸ்: `கடத்திய 13-ல், 9 குழந்தைகள் கொடூரக் கொலை!’ - உலகை உறையவைத்த தாய், மகள்கள் | பகுதி 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
க்ரைம் டேப்ஸ்: குழந்தைகள் கடத்தல்
க்ரைம் டேப்ஸ்: குழந்தைகள் கடத்தல்

இவர்கள் கடத்தியது 13 குழந்தைகள். அவற்றில் 9 குழந்தைகளைக் கொலை செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆறு குழந்தைகளைக் கொலை செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, இப்போது மூன்று பெண்களும் சிறையில் இருக்கிறார்கள்.

அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்து, தியேட்டருக்கு வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் `டாக்டர்.’ இந்தப் படத்தின் மையக் கரு பெண் குழந்தைக் கடத்தல். ஒரு பெரும் கும்பல், பெண் குழந்தைகளைக் கடத்தி, பாலியல் தொழில் செய்யும் புரோக்கருக்கு விற்பதுதான் கதை. இதைப் படத்தின் நாயகன் கண்டுபிடித்து, குழந்தைக் கடத்தல் கும்பலை தண்டிப்பதுபோல திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

டாக்டர் படம்
டாக்டர் படம்

பாலியல் தொழிலுக்காக சர்வதேச அளவில் குழந்தைகள் கடத்தப்படுவது உண்மைதான். ஆனால், குழந்தைகளைப் பெரிய பெரிய கும்பல்கள் பயங்கரத் திட்டம் போட்டு கடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துவிட முடியாது. நம்மூர் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தையை கடத்துவதும், தெருவோரங்களில் வசிக்கும் பிளாட்பாரவாசிகளின் குழந்தைகள் கடத்தப்படுவதும் அன்றாடம் நாம் கேள்விப்படும் செய்திகள். இதில் ஆண், பெண் வித்தியாசம் இன்றி புதிதாகப் பிறந்த குழந்தைகளிலிருந்து கைக்குழந்தைகள் வரை கடத்தப்படுவது அதிகரித்துள்ளன. இப்படிக் கடத்தப்படும் குழந்தைகள், குழந்தை பாக்கியம் இல்லாத உள்நாட்டு, வெளிநாட்டு தம்பதிகளுக்குத் தத்துக் கொடுக்கப்படுவதாக பொதுவாகச் சொல்லப்படுகின்றன.

ஆனால், மும்பை கோலாப்பூர் நகரில் கொலை செய்த குற்றத்துக்காக சீமா, ரேணுகா, அவர்களின் தாய் அஞ்சனா ஆகிய மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது இந்த உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோனது. அவர்கள் கொலை செய்தது குழந்தைகளை. அதுவும் குழந்தைகளைக் கடத்தி வந்து, ஈவு இரக்கமே இன்றிக் கொலை செய்திருக்கிறார்கள்.

பெண்கள், அதுவும் தாய், மகள்கள் மூன்று பேரும் சேர்ந்து இதைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் அணு அணுவாகச் சித்ரவதை செய்து கொலை செய்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை ஆறு!

இவர்கள் ஏன் குழந்தைகளைக் கடத்தி, இரக்கமின்றி கொலை செய்தார்கள் என்று பார்ப்போம்.

தயவு செய்து இதயம் பலவீனமானவர்களும், பெண்களும் இதற்கு மேல் இந்தக் கட்டுரையை படிக்காமல் இருப்பது நல்லது.

மும்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில், கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களில் அஞ்சனா, தன் இரு மகள்கள், தன் மருமகன் துணையோடு ஆஜராகிவிடுவாள். கூட்டத்தில் பெண்கள் அசந்த நேரமாகப் பார்த்து அவர்கள் கழுத்திலுள்ள நகைகளைத் திருடிவிடுவார்கள். ஆண்கள் அசந்த நேரமாகப் பார்த்து அவர்களின் பேன்ட் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை அபகரித்துவிடுவார்கள். ஒருமுறை ரேணுகா, தன் கைக்குழந்தையுடன் ஒருவரின் பர்ஸை பிக்பாக்கெட் அடிக்க முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாள். அப்போது பர்ஸைப் பறி கொடுக்க இருந்தவன், `திருடி... திருடி...’ எனக் கூக்குரலிட்டான். உடனே சுதாரித்துக்கொண்ட ரேணுகா, அங்கே திரண்டு வந்த மக்களிடம் குழந்தையுடன் நிற்கும் என் கையைப் பிடித்து இழுத்தான் என்று பழி போட்டுவிட்டாள். அவள் கையிலிருந்த குழந்தையைப் பார்த்த கூட்டம் அவள் சொன்னதை அப்படியே நம்பிவிட்டது. அவளை நிரபராதி எனக் கருதி பாதுகாப்பாக அனுப்பிவைத்தது. பர்ஸைப் பறிகொடுக்கவிருந்த அப்பாவி, குற்றவாளியாகக் கருதப்பட்டு எச்சரிக்கப்பட்டான்.

க்ரைம் டேப்ஸ்:  உயிர் நண்பனை கொன்ற வழக்கு... தொழிலதிபரை ஜெயிலுக்கு தள்ளிய கல்லூரி காதல் | பகுதி 9

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கையில் இருந்த குழந்தையால்தான் சொன்ன பொய்யை மக்கள் நம்பினார்கள், நாம் தப்பித்தோம்’ என்பதை தாயும் மகள்களும் திடமாக நம்பினார்கள். அதன் பிறகு திருட்டுகளில் ஈடுபடும்போது பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவும், மாட்டிக்கொண்டால் தப்பித்துக்கொள்ளவும் குழந்தைகளைக் கேடயமாகப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

அதற்காகக் குழந்தைகளை கடத்தத் தொடங்கினர். பெரும்பாலும் இவர்கள் இலக்கு யாசகம் எடுக்கும் பெண்களின் கையிலுள்ள பச்சிளம் குழந்தைகள். அவர்களிடமிருக்கும் குழந்தைகளை திருடினால் போலீஸ் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன? அப்படித் தூக்கிவரும் குழந்தைகளைப் பயன்படுத்தி திருட ஆரம்பித்தார்கள். குழந்தைகள் வளரத் தொடங்கினால் அவர்களைத் தூக்கிச் செல்வது சிரமம் என்பதால், கொஞ்ச நாளில் அந்தக் குழந்தைகளை அடித்துக் கொலை செய்து குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். சில குழந்தைகள் இவர்களிடம் அழுது அடம்பிடித்தால் திருட்டுத் தொழிலுக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று கருணையே இல்லாமல் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள்.

குழந்தை - க்ரைம் டேப்ஸ்
குழந்தை - க்ரைம் டேப்ஸ்

இப்படி இவர்கள் கடத்தியது 13 குழந்தைகள். அவற்றில் ஒன்பது குழந்தைகளைக் கொலை செய்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆறு குழந்தைகளைக் கொலை செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, இப்போது மூன்று பெண்களும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு உடந்தையாக இருந்த ரேணுகாவின் கணவன் அப்ரூவராக மாறி, தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டான்.

சென்னை: தாயுடன் படுத்திருந்த 3 மாத குழந்தை கடத்தல்! - அலட்சியமாகச் செயல்பட்ட எஸ்.ஐ-க்கு மெமோ

ஒருமுறை குழந்தையுடன் சென்று, திருடிவிட்டு வரும்வழியில் மக்களின் பார்வையிலிருந்து தப்பிக்க ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டார்கள் அப்போது கையிலிருந்த குழந்தை அழத் தொடங்கியிருக்கிறது. எங்கே நாம் மாட்டிக்கொள்வோமா என்ற பயத்தில் அந்தக் குழந்தையை அங்கிருந்த இரும்புக்கம்பியால் அடித்து கொன்றிருக்கிறார்கள். பிறகு அந்தக் குழந்தையின் சடலத்தை அங்கேயே குப்பையில் போட்டுவிட்டு எதுவும் நடக்காதவர்கள்போலத் திரும்பி வந்துவிட்டார்கள். அந்தக் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில்தான் அஞ்சனாவும், அவளுடைய மகள்கள் சீமாவும் ரேணுகாவும் மாட்டிக்கொண்டார்கள்.

க்ரைம் - கொலை
க்ரைம் - கொலை

தூக்குத் தண்டனை பெற்ற இரு சகோதரிகளும் இப்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் சிறையில் இருக்கிறார்கள். சமகாலத்தில் நடந்த இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோத கும்பல் நமக்குள் ஒருவராக எந்தச் சந்தேகமும் இன்றி நடமாடிக்கொண்டிருக்கலாம். நாம்தான் அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். நம் குழந்தைகளைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருக்கிறது. குழந்தைகள் நம்மை நம்பி இருக்கின்றன. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!

(க்ரைம் டேப் சுழலும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு