Published:Updated:

உறுமும் அ.தி.மு.க... உஷ்ணத்தில் பா.ம.க... உள்ளடி பா.ஜ.க - முக்கோண யுத்தம்!

எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அண்ணாமலை

எங்கள் செயல்பாட்டைப் பற்றி துரைசாமி அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது

உறுமும் அ.தி.மு.க... உஷ்ணத்தில் பா.ம.க... உள்ளடி பா.ஜ.க - முக்கோண யுத்தம்!

எங்கள் செயல்பாட்டைப் பற்றி துரைசாமி அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அண்ணாமலை

‘இடத்தைக் கொடுத்தால், மடத்தைக் கேட்பார்கள்’ என கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அ.தி.மு.க., பா.ம.க கட்சியினரிடையே பா.ஜ.க-வை முன்வைத்த விமர்சனங்களில் அதிகமும் இந்தப் பழமொழியைக் கேட்க முடிகிறது. இந்த விமர்சனக் குரல் கூட்டணிக்குள் சர்ச்சை, சலசலப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செல்லூர் ராஜூ என அடுத்தடுத்து பா.ஜ.க-வுக்கு எதிராக அ.தி.மு.க தலைவர்கள் இடியாக முழங்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே, “பா.ஜ.க-வில் எந்த வன்னியர் இளைஞரும் இணையக் கூடாது” எனக் கட்டளை பிறப்பித்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளெல்லாம் இணைந்துதான் கூட்டணி சமைத்தன. அந்தக் கூட்டணியில் தற்போது ஓட்டை விழ ஆரம்பித்திருக்கிறது. “இந்தச் சூழல் நீடித்தால் என்னவாகும்?” என்கிற கேள்வியுடன் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க வட்டாரங்களில் விசாரித்தோம்!

“நாங்கள் காக்கா கூட்டமல்ல...” - வெடித்த வார்த்தைப் போர்!

சமீபத்தில், எம்.ஜி.ஆர் மாளிகையில் நடந்த அ.தி.மு.க கூட்டமொன்றில் பேசிய பொன்னையன், “எதிர்க்கட்சி அந்தஸ்தை பா.ஜ.க பிடிக்கப் பார்க்கிறது. தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. நம்முடைய இடத்தை ஒருபோதும் பா.ஜ.க-வுக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது” என்றிருக்கிறார். இதைத் தொடர்ந்துதான், பா.ஜ.க - அ.தி.மு.க வார்த்தை மோதல் விஸ்வரூபமடைந்தது. பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “மாநிலங்களவை எம்.பி சீட் கிடைக்காத விரக்தியில் பேசுகிறார் பொன்னையன். 65 எம்.எல்.ஏ-க்கள் உள்ள அ.தி.மு.க., சட்டசபையில் என்ன செய்கிறது? ஊழலைப் பற்றி அவர்கள் பேசியதற்கு உதாரணம் சொல்ல முடியுமா... ரெய்டுக்கு பயந்துகொண்டு அவர்கள் பேசவில்லை” என்று திரியைக் கொளுத்தவும், கூட்டணிக்குள் வெடிச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. போதாத குறைக்கு, “பா.ஜ.க விமர்சித்தால் அதை அ.தி.மு.க தாங்கிக்கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதும் சத்தத்தை அதிகரிக்கச் செய்தது.

துரைசாமியின் குத்தலான பேச்சுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியே டென்ஷனாகிவிட்டார். “எங்கள் செயல்பாட்டைப் பற்றி துரைசாமி அறிவுரை சொல்லவேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது” என்று சீறினார் எடப்பாடி. இந்த வார்த்தைப் போரின் தொடர்ச்சியாகத்தான் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடமிருந்தும் அனல் தெறித்தது. “அ.தி.மு.க-வை பா.ஜ.க துரும்பு அளவு விமர்சித்தால், நாங்கள் தூண் அளவுக்கு பதிலடி கொடுப்போம். பா.ஜ.க-வைப்போல நாங்கள் காக்கா கூட்டமல்ல. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தான் எதிர்க்கட்சி. தனித்தே போட்டி என நாங்கள் சொல்லத் தயார். மற்ற கட்சியினர் தயாரா?” என்று செல்லூர் ராஜூ வெடித்தது கூட்டணிச் சலசலப்பின் உச்சம்.

விவகாரம் ரொம்பவே சூடானதால், அ.தி.மு.க குறித்து விமர்சிப்பதற்கு பா.ஜ.க நிர்வாகிகளுக்குத் தடைபோட்டிருக்கிறார் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. எடப்பாடி தரப்பிலிருந்தும் இப்படியொரு தடை உத்தரவு அ.தி.மு.க நிர்வாகிகளுக்குச் சென்றிருக்கிறது. ஆனாலும், சூடு குறையவில்லை. “பா.ஜ.க-வைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிட வேண்டும்” என்கிற கோஷத்தை அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களெல்லாம் வலுவாக வைக்கத் தொடங்கிவிட்டனர்.

உறுமும் அ.தி.மு.க... உஷ்ணத்தில் பா.ம.க... உள்ளடி பா.ஜ.க - முக்கோண யுத்தம்!

“குனிந்தது போதும்...” -உறுமும் அ.தி.மு.க நிர்வாகிகள்!

அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “அ.தி.மு.க-வின் அடிநாதமே எம்.ஜி.ஆர்-தான். அவரையே கபளீகரம் செய்வதற்கு, பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்தபோது முயற்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர் மீது காவித்துண்டு போர்த்துவது, தங்களுடைய தேர்தல் பிரசாரப் பாடல்களில் எம்.ஜி.ஆரைக் காட்டுவது என அ.தி.மு.க-வின் அடிமடியிலேயே கைவைக்கப் பார்த்தது பா.ஜ.க. அ.தி.மு.க-வின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரான சோழவந்தான் மாணிக்கத்தை பா.ஜ.க-வில் இணைத்தனர். இதுதான் கூட்டணி தர்மமா... பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் யதேச்சதிகாரப் போக்கால், அதிருப்தி அடைந்திருக்கும் மாவட்டத் தலைவர்களை அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவர எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்... கூட்டணிக் கட்சி என்கிற மரியாதையோடு அவர்களை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால், எங்களை அழித்துவிட்டு அந்த இடத்தில் தாங்கள் வளர பா.ஜ.க திட்டமிடுவது சரியல்ல.

சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் சென்று சந்தித்தனர். இவர்களுக்கெல்லாம் இந்த தி.மு.க ஆட்சியால் சிக்கல் இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர்கள்மீது புகார்கள் இருக்கின்றன. அதற்காக, அவர்கள் வேண்டுமானால் மத்திய அரசின் தயவை நம்பியிருக்கலாம்.

அ.தி.மு.க என்கிற பேரியக்கம் யார் முன்பும் குனிய வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதா என்கிற ஆளுமை மறைந்த பிறகு, கழகத்துக்குள் இரு வேறு அணிகள் சண்டையிட்டபோதும்கூட, 33 சதவிகித வாக்குகளை 2021 சட்டமன்றத் தேர்தலில் பெற்றிருக்கிறது அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் எங்களின் தயவில், 2.6 சதவிகித வாக்குகளையும், நான்கு எம்.எல்.ஏ-க்களையும் பெற்ற பா.ஜ.க., எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உரிமை கொண்டாடுவது நியாயமா... எங்களின் தோள்மீது ஏறி நின்றுகொண்டு நாங்கள்தான் உயரம் உயரம் என்று கூச்சல் போடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய வேடிக்கை.ஒவ்வொரு மாவட்டத்திலும், அ.தி.மு.க-வில் அதிருப்தியிலிருப்பவர்களை ஆசைவார்த்தை காட்டி வளைக்கிறது பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு அவர்கள் ஆடும் இரட்டை நாடகம்தான், அ.தி.மு.க-வினரைக் கோபப்படுத்தியிருக்கிறது.

ஜூன் 28-ம் தேதி, அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூடவிருக்கிறது. பொதுக்குழுவில், பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டுமென கழக நிர்வாகிகள் பேசவிருக்கிறோம். இதைக் கட்சித் தலைமை ஏற்குமா, மறுக்குமா என்பதெல்லாம் தெரியவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், டெல்லி பஞ்சாயத்து நடத்தியபோதும்கூட, பா.ஜ.க-வுக்கு ஐந்து சீட்டுகளை மட்டுமே ஒதுக்கினார் எடப்பாடி. அதே எண்ணிக்கையில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வை அடக்குவதற்கு அவர் திட்டமிடுகிறார். இப்போது நடைபெறும் பா.ஜ.க - அ.தி.மு.க மோதலை, இந்த சீட் ஒதுக்கீட்டு பஞ்சாயத்துக்குப் பயன்படுத்தப் பார்க்கிறார். ஆனால், இந்த அரசியலைத் தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை என்பதே உண்மை. ஒரு சிலரின் சுயலாபத்துக்காக, அவர்களின் பாதுகாப்புக்காகக் கட்சியை அடகுவைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், ‘மோடியா... லேடியா?’ எனக் கேட்ட ஜெயலலிதாவின் வழியில், யாரிடமும் குனிந்து போகாத அரசியலைத்தான் கட்சியினர் விரும்புகிறார்கள்” என்றனர் தெளிவாக.

“பா.ஜ.க-வில் சேரக் கூடாது...” - உஷ்ணத்தில் பா.ம.க!

அ.தி.மு.க ஒருபக்கம் உறுமிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிப்படையாகவே பா.ஜ.க-வுக்கு எதிராக வெடிகுண்டு வீசியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். சமீபத்தில், அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் கோ.க.மணிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய ராமதாஸ், “பா.ஜ.க-வில் வன்னியர் இளைஞர்கள் யாரும் இணையக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வில் இளைஞர்கள் சேர்வதைத் தடுக்க பா.ம.க நிர்வாகிகள் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார். இந்தத் தாக்குதல் அன்புமணி வரை தொடர்கிறது. சேலத்தில் சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் அன்புமணி, “நடந்து முடிந்த நகர்ப்புறத் தேர்தலில் கன்னியாகுமரி தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பா.ஜ.க வெற்றிபெறவில்லை. தி.மு.க-வுக்கு பா.ஜ.க எதிர்க்கட்சி இல்லை. நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி” என்றிருக்கிறார். அன்புமணியின் இந்த வார்த்தைத் தாக்குதலுக்கு, அண்ணாமலையின் ‘பா.ஜ.க-தான் மூன்றாவது பெரிய கட்சி’ என்கிற வார்த்தைப் பிரயோகம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள் தைலாபுர விசுவாசிகள்.

நம்மிடம் பேசிய பா.ம.க மூத்த நிர்வாகிகள் சிலர், “தேர்தல்களில் சரியாக வேலை செய்யாத கட்சி நிர்வாகிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்துவந்த மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பதவி இரண்டையும் நீக்கினார் ராமதாஸ். அதனால், கட்சியில் பலருக்கு அதிருப்தி உருவாகியிருக்கும் நேரத்தில், அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையைச் செய்கிறது பா.ஜ.க. இதில் டென்ஷனான ராமதாஸ், ‘பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி நம்ம கட்சி ஆட்களைப் பிடிக்க ஒருத்தன் இங்க சுத்திட்டு இருக்கான். அவனுக்கு இங்க என்ன வேலை?’ எனக் கடுமையாகப் பேசினார். ஆனால், தொடர்ந்து பா.ஜ.க-வினர் அதைத்தான் செய்கிறார்கள்.

எங்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் செந்தில் முதலியார், திண்டுக்கல் முன்னாள் மா.செ ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை பா.ஜ.க-வினர் இழுத்துவிட்டார்கள். எங்கள் கட்சியில் தீவிர ஆன்மிகவாதிகள் வட்டமும் இருக்கிறது. மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனைப் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கட்டம்கட்டி தூக்கப் பார்க்கிறார்கள். ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமிக்கு என, தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் மத்தியில் ஒரு பெரும் கூட்டம் இருந்தது. இன்று அந்தக் கூட்டத்தில் பெரும்பகுதியினர் பா.ஜ.க ஆதரவாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதுபோல, ‘தன்னுடைய வாக்கு வங்கிக்கும் ஆபத்து வந்து விடுமோ?’ என ராமதாஸ் கலங்குகிறார். அதனால்தான், மற்ற கட்சிகளில் சேருவதைவிட பா.ஜ.க-வில் சேருவது ஆபத்து என வெளிப்படையாகவே பேசிவருகிறார். மக்கள் பணி எதுவுமே செய்யாமல், தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிரான கொள்கைகளை வைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சியினரைச் சூழ்ச்சி செய்து இழுப்பது தரமற்ற ஓர் அரசியலாக இருக்கிறது’’ எனக் கொந்தளித்தார்கள்.

உள்ளடி அரசியல்... உச்சத்தில் முக்கோண யுத்தம்!

இந்தக் கூட்டணிக் களேபரங்களையெல்லாம், ஒரு பொருட்டாக பா.ஜ.க எடுத்துக்கொள்ளவில்லை. நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஒருவர், “எந்த வகையிலாவது கட்சியைத் தமிழகத்தில் காலூன்றவைத்துவிட வேண்டுமென்பதில் டெல்லி தீர்மானமாக இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு எங்களுக்கு மிக முக்கியமான இடம். தமிழ்நாட்டில்தான், காங்கிரஸ் - தி.மு.க இணைந்திருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த அடையாளத்தை வைத்து, தனக்குப் பெரிய பிம்பம் இருப்பதாக, தேசிய அளவில் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது காங்கிரஸ். அதை உடைப்பதற்கு, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு வலுவான கூட்டணி அவசியம். அதேநேரம், சரிசமமான சீட்டுகளை அ.தி.மு.க-விடம் எதிர்பார்க்கிறது. வலுவான அடித்தளம், வாக்குவங்கி இல்லையென்றால், எதிர்பார்த்த எண்ணிக்கையில் அ.தி.மு.க சீட் தராது. அதற்காகத்தான், அடித்தளம் அமைப்பதற்கு எல்லாக் கட்சியிலிருந்தும் ஆட்களை எடுக்கிறோம்.

‘சசிகலா பா.ஜ.க-வுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம்’ என நயினார் நாகேந்திரன் கூறியது விளையாட்டு வார்த்தைகள் அல்ல. நாங்கள் வளர்வதற்கு வலுவான தலைவர்கள், களப் பணியாளர்கள் தேவை. மாற்றுக் கட்சியில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாதவர்கள், பா.ஜ.க-விடம் அதை எதிர்பார்த்து வந்தால், அதை எப்படி நாங்கள் புறக்கணிக்க முடியும்... ஒவ்வொரு கட்சியும் தங்களை வளர்த்துக்கொள்வதற்கு உரிமை இருக்கிறது. இதை உள்ளடி அரசியலாகப் பார்த்தால், அதற்கு பா.ஜ.க பொறுப்பேற்காது” என்றார்.

உறுமும் அ.தி.மு.க... உஷ்ணத்தில் பா.ம.க... உள்ளடி பா.ஜ.க - முக்கோண யுத்தம்!

“ ‘நாங்களாக யாரையும் அழைக்கவில்லை. அவர்களாக வருகிறார்கள்’ என்கிறரீதியிலான விளக்கம் பா.ஜ.க-விடமிருந்து வந்தாலும், கூட்டணியிலிருப்பவர்கள் அதை ரசிக்கவில்லை என்பதே நிதர்சனம். இளைஞர்களைக் கட்சிக்குள் ஈர்ப்பதற்கு, அ.தி.மு.க-வில் தகவல் தொழில்நுட்ப அணிக் கூட்டங்கள், அம்மா பேரவைக் கூட்டங்கள் தொடங்கியிருக்கின்றன. அதேபோல, பா.ம.க-விலும் அன்புமணி ராமதாஸ் சுற்றிச் சுழல ஆரம்பித்திருக்கிறார். ஒன்றிய, நகர அளவில் போராட்டங்கள், மக்கள்நலன் சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி, கட்சியை வலுப்படுத்துவதற்கு உண்டான வேலைகளில் தீவிரமாகியிருக்கின்றன இந்தக் கட்சிகள். ஆனால், அடிப்படைக் கட்டமைப்போ சொல்லிக்கொள்ளும்படியான வாக்குவங்கியோ இல்லாத பா.ஜ.க., வெறும் சமூக ஊடகச் ‘சத்த அரசியலை’ மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு, ‘நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி. நாங்கள்தான் எதிர்க்கட்சி’ எனக் கூப்பாடு போடுகிறது. இதுதான் பெரும் பிரச்னையாகியிருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த விவகாரத்தில் தி.மு.க தரப்பு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. “யார் உண்மையான எதிர்க்கட்சி என அவர்களுக்குள் அடித்துக்கொள்ளட்டும். நம் பக்கம் வராமல் இருந்தால் சரி” என்கிற முடிவுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். சத்தமில்லாமல் உதயநிதியை வலுப்படுத்தும்விதமாக, இளைஞரணி சார்பில் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகள்’ தொடங்கப்பட்டுள்ளன.

இறுதியாக, அ.தி.மு.க-வின் மிக முக்கியத் தலைவர் ஒருவரிடம் பேசினோம். “அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க என முக்கோணமாகத் தொடங்கியிருக்கும் இந்த மோதல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும். இந்தச் சச்சரவுகளால் கூட்டணி முறிய வாய்ப்பில்லை. தேர்தல் சமயத்தில், மூவருக்குமே பரஸ்பரம் அனுசரணை தேவை. இப்படியான மோதல்களும் கூடல்களும் அரசியலில் புதிதல்ல. ஆனால், மனக்கசப்புகள் அதிகரித்துக்கொண்டேபோவது நல்லதல்ல. இப்போதைக்கு, யாரை அழித்தாவது தங்களை நிலைநிறுத்திக்கொள்வது என்கிற வழியை பா.ஜ.க பின்பற்றுகிறது. இது ஆரோக்கியமான கூட்டணி அரசியலுக்கு நல்லதல்ல” என்றார்.

முக்கோண யுத்தத்தில் யார் கை ஓங்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism