Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

தனி மரமான சரவணன்!

பா.ஜ.க மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மதுரை வடக்குத் தொகுதியில் களமிறங்க கடந்த நான்கு மாதங்களாகவே காய்நகர்த்திவந்தார். ஆனால், சீட் கிடைக்காத கோபத்தில் தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வுக்குத் தாவிய நான்கே மணி நேரத்தில் டாக்டர் சரவணன் அந்தத் தொகுதியை தட்டிப் பறித்துவிட்டார். ஆத்திரமடைந்த மதுரை மாவட்ட பா.ஜ.க-வினர் போராட்டமெல்லாம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். இதனால், சரவணனுக்குத் தொகுதியில் பா.ஜ.க-வினரின் ஒத்துழைப்பு துளியும் இல்லை என்கிறார்கள். இவர்கள் இப்படியென்றால், இன்னொரு பக்கம் அ.தி.மு.க-வினரோ, ‘‘அ.தி.மு.க கோட்டையான திருப்பரங்குன்றம் தொகுதியை இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாகக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், ‘ஜெயலலிதாவின் கைரேகையில் மர்மம் உள்ளது’ என்று அ.தி.மு.க அரசுக்கு எதிராக வழக்கு போட்ட டாக்டர் சரவணனுக்கு உண்மையான அ.தி.மு.க-காரன் ஓட்டுப்போட மாட்டான்’’ என்று சரவணனுக்கு எதிராகச் சலம்பிவருகிறார்கள். இதனால், தனிமரமான சரவணன், ‘அவசரப்பட்டுவிட்டோமா?’ என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்!

விழிபிதுங்கும் விஜயபாஸ்கர்!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குட்கா உள்ளிட்ட விவகாரங்களைக் கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகள் தனலெட்சுமி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பிய மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் நெவளிநாதன், ‘‘சாதிய சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கும் விஜயபாஸ்கர், 2015-ல் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இழிவாகப் பேசினார். இதனால், 2016 சட்டமன்றத் தேர்தலில் முத்தரையர் செல்வாக்கு அதிகமுள்ள மூன்று தொகுதிகளில் கழகம் வெற்றிவாய்ப்பை இழந்தது. இப்போதும் அதே போக்கைக் கடைப்பிடிக்கும் விஜயபாஸ்கர், கட்சியில் சேர்ந்து இரண்டு மாதம்கூட ஆகாதவருக்கெல்லாம் சீட் பெற்றுக் கொடுத்திருக்கிறார். மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் எங்கள் சமுதாயத்தினர் யாருக்கும் சீட் கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்’’ என்று சீறிவிட்டு, அமைச்சருக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஒருவழியாக விஜயபாஸ்கர் தரப்பு நெவளிநாதனைப் பிடித்து சமாதானம் செய்ததால், மார்ச் 22-ம் தேதி அவர் வாபஸ் வாங்கிவிட்டார்.

தனலட்சுமியோ, ‘‘விஜயபாஸ்கருக்கு விசுவாசமாக இருந்தோம். ஆனால், எங்கள் சமுதாயத்தை அவர் இழிவாக நினைக்கிறார். அதனால், விராலிமலையில் இம்முறை விஜயபாஸ்கருக்குத் தக்க பாடம் புகட்டுவோம்’’ என்று வெடிக்கிறார். ஏற்கெனவே, தொகுதிக்குள் அ.ம.மு.க ஒருபக்கம் வாக்குகளைப் பிரிக்கும் நிலையில், முத்தரையர் வாக்கு வங்கியும் அடிவாங்கினால் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கிறார் விஜயபாஸ்கர்.

கரைவேட்டி டாட் காம்

‘‘சொன்னது ஒரு குத்தமா?’’

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் நடந்த தி.மு.க கூட்டணிச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார், ‘‘திருவள்ளூர் எம்.பி-யாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்னை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதன் மூலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குவங்கி பலமாக இருக்கிறது என்பது உறுதியானது. நான் நினைத்திருந்தால் என்னுடைய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு கேட்டிருப்பேன். நான் கேட்டிருந்தால் தி.மு.க தலைமை கண்டிப்பாகத் தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கியிருக்கும்’’ என்றார். எம்.பி-யின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தி.மு.க-வினர், ‘‘உங்க கட்சிக்கு 25 இடம் கொடுத்ததே அதிகம். ஒழுங்கா போயிடுங்க’’ என்று என எம்.பி-யை பகிரங்கமாகவே மிரட்ட... அங்கு வந்திருந்த கதர்ச் சட்டைகள் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மோதல் முற்றி, கைகலப்பாக மாறி மண்டபத்திலிருந்த சேர்கள் பறந்தன. ‘மனசுல இருந்ததைச் சொன்னது ஒரு குத்தமா!’ என்று முனகியபடியே கூட்டத்திலிருந்து எஸ்கேப் ஆனார் ஜெயக்குமார்.

கரைவேட்டி டாட் காம்

‘‘போட்டோவுக்கே ஓட்டு!’’

சமீபத்தில் தஞ்சாவூர் வந்திருந்த சசிகலா, தன் கணவர் ம.நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமத்திலுள்ள குலதெய்வக் கோயிலில் வழிபட்டதுடன் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி, பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில்களுக்கும் சென்று பரிகாரம் செய்தார். தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்த சசிகலாவை அ.ம.மு.க வேட்பாளர்கள் சிலர் சந்தித்து வாழ்த்து பெற்று படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது தொண்டர் ஒருவர், ‘‘சின்னம்மா வாய்ஸ்தான் கொடுக்கலை... ஆனா, போட்டோ எடுக்க ஒத்துக்கிட்டாங்க. இந்த போட்டோக்களைக் காட்டியே ஓட்டு வாங்கிடுங்க” என கமென்ட் அடிக்க... சசிகலா உட்பட அனைவருமே குபீரென்று சிரித்துவிட்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism