Published:Updated:

பீகாரில் ஆளும் கூட்டணி முறிகிறதா? - முட்டி மோதும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க

நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா

ஐக்கிய ஜனதா தளத்தை அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிட்ட லோக் ஜன் சக்தி, பா.ஜ.க-வை வெறும் மூன்று இடங்களில் மட்டுமே எதிர்த்து நின்றது.

பீகாரில் ஆளும் கூட்டணி முறிகிறதா? - முட்டி மோதும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க

ஐக்கிய ஜனதா தளத்தை அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிட்ட லோக் ஜன் சக்தி, பா.ஜ.க-வை வெறும் மூன்று இடங்களில் மட்டுமே எதிர்த்து நின்றது.

Published:Updated:
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா

பல மாநிலங்களில் ஆளும் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கி, ஆட்சியைப் பிடிப்பதை வழக்கமாகவைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், பீகார் மாநிலத்தின் கதை வேறாக இருக்கிறது. அங்கு, கூட்டணியில் இருந்துகொண்டே முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோடு வெளிப்படையாக மோதிக் கொண்டிருக்கின்றனர் பா.ஜ.க-வினர். பதிலுக்கு நிதிஷ் குமார் உட்பட அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பா.ஜ.க-வைப் போட்டுத் தாக்குகிறார்கள். பீகார் அரசியலில் நடப்பது என்ன?

தேர்தலால் உண்டான புகைச்சல்!

2020 பீகார் சட்டமன்றத் தேர்தலை, ஒன்றிணைந்து சந்தித்தது ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி. அதேசமயம், மத்தியில், பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன் சக்தி, பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.

ஐக்கிய ஜனதா தளத்தை அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிட்ட லோக் ஜன் சக்தி, பா.ஜ.க-வை வெறும் மூன்று இடங்களில் மட்டுமே எதிர்த்து நின்றது. இதனால், ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்குகள் பல தொகுதிகளில் சிதறின. இதனால் சில இடங்களில் குறுகிய வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது அந்தக் கட்சி. இந்தச் செய்திகள் வெளியானதும் ஐக்கிய ஜனதா தளத்தின் தொண்டர்கள், பா.ஜ.க-வுக்கு எதிராகத் திரும்பி னர். அப்போதிலிருந்தே இரு கட்சிகளுக்குமிடையே புகைச்சல் உண்டாகத் தொடங்கியது.

பீகாரில் ஆளும் கூட்டணி முறிகிறதா? - முட்டி மோதும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க

மொத்தம் 115 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே வெற்றிகண்டது. 110 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க 74 இடங்களைக் கைப் பற்றியது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பீகாரின் முதல்வரானார் நிதிஷ் குமார். இருந்தும், குறைந்த இடங்களில் வென்றதால், முக்கிய அமைச்சரவை இலாகாக்கள், சபாநாயகர் உள்ளிட்ட பதவிகள் பா.ஜ.க வசம் சென்றன. இதனால் ஆரம்பம் முதலே தான் நினைத்ததைச் செய்ய முடியாமல் திணறினார் நிதிஷ்.

தேர்தலில் மோதல்... சட்டமன்றத்தில் சண்டை!

2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பிய நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, கூட்டணியில் இடமளிக்க மறுத்தது பா.ஜ.க. பா.ஜ.க-வை எதிர்த்து 51 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டார் நிதிஷ் குமார். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தார் யோகி. அந்தச் சமயத்தில் பீகார் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள், ``பீகாரில் அதிகரிக்கும் குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டுவர, யோகியின் `புல்டோசர் மாடலை’ இங்கேயும் பின்பற்ற வேண்டும்’’ என்றனர். இதனால் கோபமடைந்த ஐக்கிய ஜனதா தளத்தினர், ``பீகாரில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது. நிதிஷ் குமார் மாடலே சிறப்பானது. யாரும் எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம்’’ எனக் கொந்தளித்தனர்.

கடந்த மார்ச் மாதத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சபாநாயகர் விஜய் சின்ஹாவின் ஆதரவாளர்கள் இரண்டு பேரைக் கைதுசெய்தது பீகார் காவல் துறை. அவர்களைக் கைதுசெய்த காவல் அதிகாரியை இடமாற்றம் செய்ய பா.ஜ.க-வினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக சட்டமன்றக் கூட்டத்திலேயே, முதல்வரும் சபாநாயகரும் காரசாரமாக மோதிக்கொண்டது பரபரப்பைக் கிளப்பியது. கடந்த ஜூன் 28 அன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் யாருமே கலந்துகொள்ளாததால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. பீகார் அரசியல் வரலாற்றில், ஓர் ஆளுங்கட்சி சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தது இதுவே முதன்முறை!

ஆளும் கூட்டணி உடையுமா?

`இது யதார்த்தமாக நடந்தது’ என ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்கள் சிலர் சமாளித் தாலும், உண்மை அதுவல்ல என்கின்றனர் பீகார் அரசியல் நோக்கர்கள். ``பா.ஜ.க-வினர் `சிறந்த எம்.எல்.ஏ’ பற்றி விவாதிக்க வேண்டுமெனச் சபாநாயகரிடம் கோரிக்கைவைத்தனர். நிதிஷ் குமாரோ, `விவாதம் தேவையில்லை; சிறந்த எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுக்க கமிட்டி அமைக்கலாம்’ என்றார். அவரையும் மீறி இந்த விவாதத்துக்கு ஒப்புதல் வழங்கினார் சபாநாயகர். இதனால்தான், அந்த விவாதம் நடைபெறவிருந்த அன்று ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்கள் அவை யைப் புறக்கணித்தனர். மேலும் எதிர்க்கட்சிகள், `அக்னிபத்’ திட்டம் குறித்து விவாதிக்க வேண்டி னர். நிதிஷ் குமாரும் அது குறித்து விவாதிக்கவே நினைத்தார். ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். அதுவும் எம்.எல்.ஏ-க்கள் புறக்கணிப்புக்கு ஒரு காரணம்’’ என்கின்றனர்.

பீகாரில் ஆளும் கூட்டணி முறிகிறதா? - முட்டி மோதும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க

எதிர்க்கட்சியினரோ, ``பீகாரில் பா.ஜ.க-தான் ஆட்சி செய்கிறது. நாற்காலியைத் தக்க வைப்பதற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருக்கிறார் நிதிஷ். கூடிய விரைவில் இந்தக் கூட்டணி ஆட்சி கவிழும்’’ என்கின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு அழைப்பு விடுத்த மூன்று நிகழ்ச்சிகளைப் புறக்கணித்திருக்கிறார் நிதிஷ். ஜூலை 17-ல், அமித் ஷா தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு தனக்கு பதிலாக வேறொரு பிரதிநிதியை அனுப்பிவைத்தார் அவர். இதைத் தொடர்ந்து நடந்த ராம்நாத் கோவிந்த்தின் பிரியாவிடை, திரெளபதி முர்முவின் பதவியேற்பு ஆகிய நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. ``பீகாரில், ஆளும் கூட்டணி முறிவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்கின்றன. பா.ஜ.க., முதல்வர் பதவியைக் கைப்பற்ற முயன்றுவருகிறது. நிதிஷ், வேறு வழியில்லாமல்தான் இந்தக் கூட்டணியில் தொடர்கிறார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்தால், அவர்கள் பக்கம் சாய நிதிஷ் தயாராக இருக்கிறார். ஆனால், முதல்வர் பதவியை நிதிஷுக்கு விட்டுத்தர தேஜஸ்வி தயாராக இல்லை’’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பீகாரில் ஆளும் கூட்டணி உடையுமா... அப்படி உடைந்தால், அது 2024 மக்களவைத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உற்று நோக்குகிறது தேசம்!