Published:Updated:

தப்புமா சிவசேனா ஆட்சி?

உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
உத்தவ் தாக்கரே

துணை முதல்வர் மீது இறுகும் அமலாக்கப்பிரிவு விசாரணை... காங்கிரஸில் கிளம்பிய கோஷ்டி மோதல்...

தப்புமா சிவசேனா ஆட்சி?

துணை முதல்வர் மீது இறுகும் அமலாக்கப்பிரிவு விசாரணை... காங்கிரஸில் கிளம்பிய கோஷ்டி மோதல்...

Published:Updated:
உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று பா.ஜ.க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. சமீபத்திய முயற்சியாக அமலாக்கத்துறையை வைத்து சிவசேனா கூட்டணியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மீதான பிடியை பா.ஜ.க இறுக்கியிருக்கும் நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் கோஷ்டிப்பூசலும் பா.ஜ.க-வுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது!

2019 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க 102 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், 56 இடங்களை மட்டுமே கைப்பற்றிய சிவசேனா, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியைக் கேட்டு அடம்பிடித்தது. இதையொட்டி ஏற்பட்ட பிரச்னையில் சிவசேனா - பா.ஜ.க கூட்டணி முறிந்தது. தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியைக் கைப்பற்றினார். இதனால் அதிர்ச்சியடைந்த பா.ஜ.க கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிவசேனா கூட்டணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.

அனில் தேஷ்முக், ஏக்நாத் கட்சே, அனில் தேஷ்முக், பிரதாப் சர்நாயக்
அனில் தேஷ்முக், ஏக்நாத் கட்சே, அனில் தேஷ்முக், பிரதாப் சர்நாயக்

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக், முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே ஆகியோரை அமலாக்கப்பிரிவு மோசடி வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தது. இவர்களில் ஏக்நாத் ஜாமீனில் வந்துவிட்டார். இந்த நிலையில்தான் தற்போது சிவசேனா கட்சியின் அமைச்சர் அனில் பரப், எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக், மும்பை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் யஷ்வந்த் ஜாதவ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று நோக்குபவர்கள். தவிர, துணை முதல்வர் அஜித் பவாரையும் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கும் அமலாக்கப்பிரிவு, அவரது இரண்டு சர்க்கரை ஆலைகளையும் முடக்கியிருக்கிறது. தொடர்ந்து சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சவ் ராவத் மீதான பழைய நில மோசடி வழக்கு ஒன்றைத் தோண்டியெடுத்த அமலாக்கத்துறை, ஏப்ரல் 5-ம் தேதி அவரது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்திருக்கிறது.

இந்தச் சூழலில்தான், காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சிக் களேபரங்களும் பா.ஜ.க-வுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றன. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 12 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக 27 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சோனியா காந்திக்குப் புகார் மனு அனுப்பியதுடன், ஏப்ரல் 5-ம் தேதி அவரை நேரில் சந்தித்தும் முறையிட்டிருக்கிறார்கள். காங்கிரஸில் அப்படி என்னதான் பிரச்னை என்று அமைச்சர்களுக்கு எதிரான எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான விகாஷ் தாக்கரேவிடம் பேசினோம்... ‘‘தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவார் அடிக்கடி தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார். அவரிடம் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பிரச்னைகளைச் சொல்ல முடிகிறது. ஆனால், எங்கள் கட்சியின் அமைச்சர்களை நாங்களே சந்திக்க முடிவதில்லை. எங்கள் தொகுதி வளர்ச்சிக்காக ஏதாவது கோரிக்கை வைத்தால், அதையும் அவர்கள் செய்துகொடுப்பதில்லை. இப்படியே போனால், மற்ற மாநிலங்களைப்போல் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிடும்’’ என்றார் ஆதங்கத்துடன்!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ-வான குணால் பாட்டீல் நம்மிடம், ‘‘மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு காங்கிரஸ் அமைச்சரும் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்குப் பொறுப்பேற்று, அவர்களின் தொகுதி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், ஆட்சி அமைந்து இரண்டரை வருடங்களுக்குப் பிறகுதான் இந்தத் தகவலே எங்களுக்குத் தெரியவந்திருக்கிறது. அந்த அளவுக்குச் சொந்தக் கட்சி அமைச்சர்களே எங்களைப் புறக்கணித்தால், நாங்கள் என்னதான் செய்வது? அதனால்தான் இந்தப் பிரச்னைகளையெல்லாம் கட்சித் தலைமையிடம் முறையிட்டோம்’’ என்றார் ஆத்திரத்துடன். மேற்கண்ட பிரச்னைகள் தவிர, அரசு வாரியங்களில் தலைவர் பொறுப்புகளை காங்கிரஸ் கட்சியினருக்கு வாங்கித் தரவில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலேவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.

யஷ்வந்த் ஜாதவ்,அஜித் பவார்
யஷ்வந்த் ஜாதவ்,அஜித் பவார்

காங்கிரஸ் கட்சியில் நிலவும் இந்த அதிருப்திகளை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள காய்நகர்த்திவருகிறது பா.ஜ.க. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைத் தொடர்புகொண்ட பா.ஜ.க-வின் முக்கியப் புள்ளிகள் சிலர், ஆட்சியைக் கவிழ்க்க உதவினால் கோடிக்கணக்கில் பணமும், அமைச்சர் பொறுப்பும் கொடுப்பதாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்று தகவல்கள் கசிகின்றன. இதையடுத்து மத்தியப்பிரதேசம் போல மகாராஷ்டிராவிலும் குறுக்குவழியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்கிற கலக்கம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைப்பதற்காக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் வைத்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு டின்னர் பார்ட்டியை நடத்தினார். இதிலும் பெரிதாகத் தீர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தப் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலேவிடம் பேசினோம்... ‘‘எங்கள் எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தலைவர் சோனியாவைச் சந்தித்ததில் தவறு ஒன்றும் கிடையாது. இதை பா.ஜ.க-வினர் பெரிதுபடுத்தியதுடன், ‘கூட்டணி அரசுக்கு ஆபத்து’ என்று வதந்தியைப் பரப்புகிறார்கள். மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்ற பா.ஜ.க-வின் கனவு ஒருபோதும் பலிக்காது’’ என்றார்.

விகாஷ் தாக்கரே, குணால் பாட்டீல், நானா பட்டோலே
விகாஷ் தாக்கரே, குணால் பாட்டீல், நானா பட்டோலே

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணிக்குள் நிகழும் குழப்பங்கள் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism