Published:Updated:

ராணுவத்தோடு மோதல்... நம்பிக்கையில்லா தீர்மானம்... தப்புவாரா இம்ரான் கான்?

இம்ரான் கான்
பிரீமியம் ஸ்டோரி
இம்ரான் கான்

சரியான நேரம் பார்த்துக் காத்திருந்த எதிர்க்கட்சிகள், 2021 இறுதியிலிருந்தே இம்ரானுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தன.

ராணுவத்தோடு மோதல்... நம்பிக்கையில்லா தீர்மானம்... தப்புவாரா இம்ரான் கான்?

சரியான நேரம் பார்த்துக் காத்திருந்த எதிர்க்கட்சிகள், 2021 இறுதியிலிருந்தே இம்ரானுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தன.

Published:Updated:
இம்ரான் கான்
பிரீமியம் ஸ்டோரி
இம்ரான் கான்

1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உலகக் கோப்பையை வென்று, அந்நாட்டு மக்கள் மனதில் இடம்பிடித்த இம்ரான் கான், 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையை வென்று பிரதமராகப் பொறுப்பேற்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் கடும் பொருளாதார நெருக்கடியால், இம்ரான் கான் அரசு மீதிருந்த நம்பிக்கை சரிய, எதிர்க்கட்சிகள் அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கின்றன. இதையடுத்து, பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது... என்ன நடக்கிறது அங்கே?

1996-ம் ஆண்டில், `பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்’ (பி.டி.ஐ) என்ற கட்சியைத் தொடங்கினார் இம்ரான் கான். 1997-லிருந்தே தேர்தல்களில் போட்டியிட்டாலும், 2013 பொதுத் தேர்தலில்தான், பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது பி.டி.ஐ. பாப்புலிசக் கொள்கைகளைக்கொண்ட இம்ரான் கான், 2018 பொதுத் தேர்தலில் மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்தார். இதனால், அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 342 தொகுதிகளில், 149 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பி.டி.ஐ. தேர்தலுக்குப் பிறகான கட்சித் தாவல்களால் நாடாளுமன்றத்தில் 155 உறுப்பினர்களாக உயர்ந்தது பி.டி.ஐ கட்சியின் பலம். பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், சிறு சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் 176 உறுப்பினர்கள் பலத்தோடு பாகிஸ்தானின் பிரதமரானார் இம்ரான்.

ராணுவத்தோடு மோதல்... நம்பிக்கையில்லா தீர்மானம்... தப்புவாரா இம்ரான் கான்?

எங்கே தொடங்கியது சரிவு?

இம்ரான் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வகைதொகையில்லாமல் பல நாடுகளிடம் கடன் பெற்றது பாகிஸ்தான் அரசு. குறிப்பாக சீனாவிடமிருந்து அதிக அளவில் கடன் பெற்றது. இது குறித்து, கடந்த ஆண்டு இறுதியில் அறிக்கை வெளியிட்ட `தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ அமைப்பு, `2020-21 நிதியாண்டில் மட்டும் 15.32 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடனாகப் பெற்றிருக்கிறது பாகிஸ்தான். தற்போதைய பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில், அந்நாட்டின் கடன் மதிப்பு இரு மடங்காக அதிகரித்துவிட்டது’ என்று குண்டைத் தூக்கிப் போட்டது. கூடவே, கொரோனா பெருந்தொற்றால், பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவே திணறியது இம்ரான் அரசாங்கம். அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 30 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சியைச் சந்தித்தது. காய்கறி, பழங்கள் தொடங்கி அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்தது.

ராணுவத்துடன் மோதல்!

சரியான நேரம் பார்த்துக் காத்திருந்த எதிர்க்கட்சிகள், 2021 இறுதியிலிருந்தே இம்ரானுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தன. எப்படியோ சமாளித்து நான்கைந்து மாதங்களைக் கடத்தியவர், இப்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அதுவும், எதிர்க்கட்சி எம்.பி-க்களோடு, சொந்தக் கட்சி எம்.பி-க்கள் சிலரும் கைகோத்திருப்பதால், பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார் இம்ரான்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பணவீக்கம் ஒருபுறமிருக்க, ராணுவத்தோடும் அவருக்கு மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, ராணுவத்தால் பரிந்துரைக்கப்பட்ட பின்னரும், ஐ.எஸ்.ஐ-ன் டைரக்டர் ஜெனரலாக நதீம் அஞ்சுமை நியமிப்பதை தாமதப்படுத்தினார் இம்ரான். இதனால், ராணுவத்துடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. `இம்ரான் கான், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று ராணுவம் மிரட்டல் விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சியைக் கவிழ்க்கும் முனைப்பிலிருக்கின்றன எதிர்க்கட்சிகள். `நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் தள்ளிய ஊழல் அரசான இம்ரான் கான் அரசை ஆட்சியிலிருந்து நீக்குவோம்’ என்று எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் பேரணி நடத்தி முழங்கிவருகின்றன.

மார்ச் 28-ம் தேதியன்று, பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) உட்பட பல கட்சிகள் இணைந்து உருவாக்கிய `பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ கூட்டணி, இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை 161 எம்.பி-க்களின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், தீர்மானத்தை நிறைவேற்ற 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை... இதனால், பி.டி.ஐ கட்சியுடன் கூட்டணியிலிருந்துகொண்டு கடந்த காலங்களில் இம்ரானை விமர்சித்த பி.எம்.எல்-க்யூ, எம்.க்யூ.எம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடின எதிர்க்கட்சிகள். விளைவாக, எம்.க்யூ.எம் கட்சி எதிர்க்கட்சிகளின் பக்கம் சென்றிருக்கிறது. இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் தலைமையிலான கூட்டணியின் பலம் 164-ஆகக் குறைந்திருக்கிறது.

ராணுவத்தோடு மோதல்... நம்பிக்கையில்லா தீர்மானம்... தப்புவாரா இம்ரான் கான்?

என்ன சொல்கிறார் இம்ரான் கான்?

பாகிஸ்தானின் சட்டத்துறை அமைச்சர் ஃபவாத் செளத்ரி, ``அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எடுக்கும் 13-வது முயற்சி இது. இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம்’’ என்று சொல்லியிருந்தார். இப்படிச் சொன்னாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் இம்ரான், மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். பணவீக்கத்தால் தவித்துவரும் மக்களுக்கான நிவாரணத் திட்டம், பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எரிபொருள், மின்சாரத்தின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. மார்ச் 27 அன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் லட்சக்கணக்கான பி.டி.ஐ தொண்டர்களைக் களமிறக்கி, தனது செல்வாக்கையும் காட்டியிருக்கிறார். ``சில அந்நிய நாடுகளின் உதவியோடு எதிர்க்கட்சிகள் எனது ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபடுகின்றன. என்ன நடந்தாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். சண்டையின்றி சரணடைய மாட்டேன். வஞ்சகர்களின் அழுத்தத்துக்காக நான் ஏன் பதவி விலக வேண்டும்?’’ என்று கொதித்திருக்கிறார் இம்ரான்.

தப்புவாரா, கவிழ்வாரா?

பாகிஸ்தான் அரசியலைக் கூர்ந்து நோக்கும் அரசியல் ஆய்வாளர்கள், ``பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழுமையாக ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ததில்லை. அதிகபட்சமாக, பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் நான்கு ஆண்டுகள், 63 நாள்கள் பதவியில் இருந்தார். பிரதமராக மூன்றரை ஆண்டுகளைக் கடந்திருக்கும் இம்ரான், பதவிக்காலம் முழுவதும் பிரதமராக இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அதற்குச் சவால்விடும் வகையில் அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டிருக்கிறது; ஏப்ரல் 3-ம் தேதி அதற்கான வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ராணுவமும் இம்ரானுக்கு எதிராக நிற்பதால், அவரது அரசாங்கம் தப்பிக்குமா என்பது சந்தேகமே. இருந்தும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் கணிக்க முடியாத அளவிலேயே இருக்கிறது பாகிஸ்தான் அரசியல் களம்’’ என்கிறார்கள்.

இம்ரான் தனது வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸான அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிகளை சிக்ஸர்களாக அடித்து நொறுக்குவாரா... இல்லை க்ளீன் போல்டு ஆவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!