Published:Updated:

இன்னும் முடியவில்லை புதுச்சேரி களேபரம்!

பா.ஜ.க அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பா.ஜ.க அலுவலகம்

அடித்து நொறுக்கப்பட்ட பா.ஜ.க அலுவலகம்... அருள்வாக்கு கேட்கும் ரங்கசாமி...

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிட்ட நிலையில், இன்னும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. ஒருவழியாக 50 நாள்களைக் கடந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு அமைச்சர் பதவிகளுக்கான பங்கீடு முடிவுக்கு வந்தது. இப்போதாவது அமைச்சரவை அமைக்கப்பட்டு, மக்கள் பணிகளைத் தொடங்குவார்கள் என்று பார்த்தால், யார் அமைச்சர் என்ற விவகாரத்தில் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள்!

இன்னும் முடியவில்லை புதுச்சேரி களேபரம்!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆறு இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., சபாநாயகர், துணை முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகளைக் கேட்டு முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது. அதை ஏற்க மறுத்த ரங்கசாமி, ஒருகட்டத்தில் சபாநாயகரையும் இரண்டு அமைச்சர் பதவிகளையும் பா.ஜ.க-வுக்குக் கொடுத்தார். அதனால், 50 நாள்களைக் கடந்து அந்த இழுபறி முடிவுக்கு வந்தது. பா.ஜ.க-வின் முதல் சபாநாயகராக மணவெளி தொகுதியின் எம்.எல்.ஏ செல்வம் பதவியேற்றார். அதேபோல, முதன்முறையாக அமைச்சரவையிலும் இடம்பெறவிருக்கிறது அந்தக் கட்சி. ஆனால், அந்த இரண்டு அமைச்சர் பதவிகளைக் கைப்பற்றும் விவகாரத்தில் பா.ஜ.க-வில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சிப் பூசல், அந்தக் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது.

கடந்த தேர்தலுக்கு முன்பாகவே பா.ஜ.க வளைத்துப்போட்ட எம்.எல்.ஏ-களில் ஒருவர், ஜான்குமார். அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தவரை அதே ‘அமைச்சர் பதவி’ என்கிற தூண்டிலைப் போட்டு இழுத்தது பா.ஜ.க. அதன்படி தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் அரசு கவிழ்வதற்குக் காரணமானார் ஜான்குமார். தொடர்ந்து கடந்த தேர்தலில் காமராஜர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றதுடன், தன் மகன் ரிச்சர்டையும் நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றிபெறவைத்தார்.

இன்னும் முடியவில்லை புதுச்சேரி களேபரம்!

சிறுபான்மையினர், தனது தனிப்பட்ட செல்வாக்கால் இரண்டு எம்.எல்.ஏ-க்களைக் கொடுத்தவர் என்ற அடிப்படையில் பா.ஜ.க-வும் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவியை ‘டிக்’ அடித்தது. ஆனால், ‘‘இரண்டு அமைச்சர் பதவிகளையுமே காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டால் சொந்தக் கட்சியினர் அதிருப்தி அடைவார்கள். தவிர, ஜான்குமார் மீது வருமான வரித்துறை வழக்கு நிலுவையில் இருக்கிறது. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸில் அவர் போட்டியிட்டபோது, பிரமாண பத்திரத்தில் உண்மைத் தகவல்களைத் தெரிவிக்காததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு சர்ச்சைகளுடன் இருப்பவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், எதிர்க்கட்சிகளால் சிக்கல் ஏற்படலாம். அதனால், நமது கட்சியின் சீனியர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் கட்சியாவது வளரும்’’ என்று பா.ஜ.க-வைத் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர் தலைமைக்குத் தகவல் அனுப்பினார்.

ஜான்குமார்
ஜான்குமார்

அதையடுத்து, சொல்லிவைத்ததுபோல, ‘எனக்காக அமைச்சர் பதவி கேட்டு 5,000 பேர் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட வேண்டாம்’ என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான ஊசுடு தொகுதியின் எம்.எல்.ஏ சாய்.ஜெ.சரவணகுமார் பேசும் வீடியோ காட்சியும், ‘சரவணகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வேன்’ என்று சிரித்துக்கொண்டே ‘குடிமகன்’ ஒருவர் பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகின. சரவணகுமார்தான் அமைச்சர் என்ற தகவலையும் கசியவிட்டது பா.ஜ.க தரப்பு. இன்னொரு பக்கம், ‘சிறுபான்மையினரான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கிய பா.ஜ.க தலைமைக்கு நன்றி’ என்று எம்.எல்.ஏ ஜான்குமாரே வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட, ‘ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்’ என்று பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள், அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கே இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்க... அமைதியாக டெல்லியில் முகாமிட்டு லாபி செய்துகொண்டிருக்கிறார் ஜான்குமார். அவர் நம்மிடம், ‘‘அப்பாவும் மகனும் வெற்றிபெற்றிருப்பதால், ‘கண்டிப்பாக உங்களுக்கு அமைச்சர் பதவி தருவோம்’ என்று ஒரு மாதத்துக்கு முன்பே கூறியிருந்தார்கள். இப்போது, ‘உங்களைக் கைவிட மாட்டோம். ஒரு வருடம் காத்திருங்கள். சுழற்சிமுறையில் அமைச்சர் பதவியை வழங்குவோம்’ என்று கூறுகிறார்கள்’’ என்றார் வருத்தத்துடன்!

சரவணகுமார்
சரவணகுமார்

“இந்த விவகாரத்தில் வருத்தம்தான்; அதிருப்தி இல்லை” என்று ஜான்குமார் தெரிவித்தாலும், “பா.ஜ.க தனது சிறுபான்மையின வெறுப்பு அரசியலைத் தொடங்கிவிட்டது” என்று கொந்தளிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஏற்கெனவே பழைய பா.ஜ.க, புதிய பா.ஜ.க என இரு அணிகளாக இருந்த அந்தக் கட்சி, இந்தப் பிரச்னையால் மூன்றாகப் பிரிந்திருக்கிறது என்று கூறும் அரசியல் பார்வையாளர்கள், ‘‘சுழற்சி முறையில் அமைச்சர் பதவி என்று பா.ஜ.க கூறுவதெல்லாம், ஒரு வருடத்துக்குப் பிறகு அவர்கள் நிகழ்த்தப்போகும் ஆபரேஷனை மனதில்வைத்துதான்!’’ என்று கண்சிமிட்டுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, ரங்கசாமியிடம் இருக்கும் மூன்று அமைச்சர் பதவிகளுக்கு லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், ராஜவேலு, காரைக்கால் மாவட்டத்துக்கு ஒரு பிரதிநிதி என்று நான்கு பெயர்கள் வரிசையில் இருக்கின்றன. ஆனால், வழக்கம்போல இவர்களில் யாருக்கு பதவி கொடுக்கலாம் என்று அப்பா பைத்தியம் சாமி கோயிலில் அருள்வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறாராம் முதல்வர் ரங்கசாமி.

பதவிகள்மீது காட்டும் அக்கறையில் சிறிதேனும் மக்கள்மீது காட்டுவார்களா ஆட்சியாளர்கள்?