Published:Updated:

அன்புள்ள ரஜினிகாந்த் 2020 - கதை, திரைக்கதை, இயக்கம்: அமித் ஷா

ரஜினிகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினிகாந்த்

சமீபத்தில் சென்னைக்கு வந்து சென்ற மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவைச் சந்திக்க மறுத்துவிட்டார் ரஜினி.

மீண்டுமொரு முறை, “எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்!” என்று ‘சுருக்’கென்று சொல்லிவிட்டு, விருட்டென்று வீட்டுக்குள் புகுந்துகொண்டார் ரஜினி. போயஸ் கார்டனின் கதவுகள் இறுகச் சாத்தப்பட்டுவிட்டன. திரும்பவும் அவை எப்போது திறக்கும் என்பது ரஜினி மட்டுமே அறிந்த ரகசியம். ``ரஜினி அரசியலுக்கு வரட்டும்... இல்லை, வராமல் போகட்டும். அவர் ஏன் இவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும்?’’ என்பதுதான் மக்கள் மனதில் எழுந்திருக்கும் சலிப்பூட்டும் கேள்விகளில் ஒன்று.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த 2017, டிசம்பர் மாதம் ``நான் அரசியலுக்கு வருவது உறுதி; அது காலத்தின் கட்டாயம்’’ என்று கூறி சுமார் கால் நூற்றாண்டு காலம் ‘முட்டி வலிக்க’ காத்திருந்த தனது ரசிகர்களுக்குச் சற்றே ஆசுவாசம் அளித்தார் ரஜினி. உச்சிகுளிர்ந்த ரசிகர்கள், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தடபுடலாக ரஜினி வந்துவிடுவார் என்று நம்பினார்கள். ஆனால், தாறுமாறாக ‘தர்பார்’-ல் வந்த ரஜினி ‘நான் ஒரிஜினலாவே வில்லன்மா’ என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ஆனாலும் மனம் தளராத தமிழருவி மணியன் உள்ளிட்ட சிலர், ‘ரஜினி அரசியலுக்கு வந்தே தீருவார்’ என்று ரசிகர்களைச் சுருதி குறையாமலே வைத்திருந்தார்கள். ஆனால், ரஜினி களத்துக்கு வரவேயில்லை. மாறாக, சில அரசியல் பார்வையாளர்களை அழைத்து வந்து, கருத்து களைக் கேட்டுவந்தார். இந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு அவரது அரசியல் வருகையை உறுதிசெய்யும் வகையில், “எனக்குப் பணம், புகழ்மீது ஆசையில்லை; என்னை இந்த அளவுக்கு உயர்த்திய தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வருகிறேன்” என்கிறரீதியில் உருக்கமான அறிக்கை ஒன்று ரஜினி தரப்பில் தயாரிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் திடீரென்று கொரோனாவை முன்னிட்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டார் என்று அறிக்கை ஒன்று கசிந்தது. அந்த அறிக்கை தனது தரப்பி லிருந்து வெளியாகவில்லை என்று ரஜினி மறுத்தாலும், அதில் உடல்நிலை பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் உண்மைதான் என்று விளக்கம் அளித்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த் 2020 - கதை, திரைக்கதை, இயக்கம்: அமித் ஷா

ஏற்கெனவே இவ்வளவு குழப்பங்கள்... இந்தநிலையில்தான் நவம்பர் 30-ம் தேதி மீண்டும் தனது மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கேட்டிருக்கிறார் ரஜினி. இதை முன்வைத்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்திருக்கின்றன. இது குறித்துப் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “சமீபத்தில் சென்னைக்கு வந்து சென்ற மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவைச் சந்திக்க மறுத்துவிட்டார் ரஜினி. ஏற்கெனவே, ‘என்மீது காவிச் சாயம் பூச வேண்டாம்’ என்று ரஜினி சொல்லிவந்த நிலையில், ரஜினி இந்தச் சந்திப்புக்கு மறுத்திருக்கலாம். ஒருவேளை பா.ஜ.க-வுடன் கூட்டணிவைக்க ரஜினி விரும்பினாலும், தற்போது அந்தக் கட்சி அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருப்பதால் காவிச் சாயத்துடன், அ.தி.மு.க-வின் ஊழல் கறையையும் ஏன் சுமக்க வேண்டும் என்பதும் ரஜினியின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால், ரஜினியால் இவற்றையெல்லாம் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. அவரைப் பேச விடாமல் பின்னிருந்து தடுக்கும் சக்தி எது என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால், அவர் எந்தக் கட்சியின் ஓட்டுகளைப் பெரும் பான்மையாகப் பிரிப்பார் என்பது இன்னொரு மிகப்பெரிய கேள்வி. ஆரம்பம் முதலே, தன்னை ஆன்மிகவாதியாகவே வெளிப்படுத்திவந்தார் ரஜினி. அரசியல் பேச்சு எழுந்தபோதும் ஆன்மிக அரசியலையே முன்வைத்தார். 2020, ஜனவரி மாதம் ‘துக்ளக்’ பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி, ‘பெரியார் தலைமையிலான பேரணியில் ராமர், சீதை ஆகியோரின் புகைப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து அழைத்துச் சென்றனர்’ என்று திராவிடத்தின் ஆணிவேரான பெரியார் மீதே போர் தொடுத்தார். இப்படியாக, தனது பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இன்னொரு பக்கம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மக்கள் போராட்டங்களில் போலீஸாருக்கு ஆதரவு தெரிவித்தது என்று தன்னை மத்திய அரசு சார்புடையவராகவும் வெளிப்படுத்திக்கொண்டார். இதையெல்லாம் பார்த்து உற்சாகமடைந்த பா.ஜ.க., ‘ரஜினி விரைவில் கட்சியைத் தொடங்கி பா.ஜ.க-வுடன் கூட்டணிவைப்பார். ரஜினியைவைத்தே தமிழகத்தில் காலூன்றிவிடலாம்’ என்று கணக்கு போட்டது.

அன்புள்ள ரஜினிகாந்த் 2020 - கதை, திரைக்கதை, இயக்கம்: அமித் ஷா

இந்தநிலையில்தான் ரஜினியுடன் இருக்கும் சிலர், ‘பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு வேண்டாம்; பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருக்கும் ஊழல் கட்சியான அ.தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். தனிக்கட்சி தொடங்கினால், அ.தி.மு.க., பா.ஜ.க அல்லாமல் தனித்து நின்றோ அல்லது வேறு சில கட்சிகளுடன் கூட்டணி வைத்தோ ஆட்சியைப் பிடிக்கலாம்’ என்று ரஜினிக்கு ஆலோசனை கொடுக்க... லேசாக ரூட் மாறினார் ரஜினி. இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி சொல்லியிருந்தாலும்... மக்கள் நீதி மய்யம், பா.ம.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் என்று ரஜினியின் முகாமில் புதுக்கணக்கு போடப்பட்டது.

ஒருவேளை ரஜினி மேற்கண்ட ரூட்டில் பயணித்தால், ஆன்மிக அரசியல்வாதியான அவர் தனது முகாமின் ஓட்டுகளையே பெரும்பாலும் பிரிப்பார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டது பா.ஜ.க. அதாவது, தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு இருப்பதாகக் கருதப்படும் சுமார் ஐந்து சதவிகித ஓட்டுகளையும் ரஜினி பங்கிட்டுக்கொண்டால், தங்கள் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதுதான் பா.ஜ.க-வின் அச்சம். ஏற்கெனவே கடவுள் மறுப்பு, ஊழல் ஒழிப்பு என்று பேசிவரும் கமல்ஹாசனின் கட்சியே கூட கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-வின் ஓட்டுகளை அறுவடை செய்திருந்ததும், பா.ஜ.க-வின் ரஜினி மீதான அச்சத்துக்குக் கூடுதல் காரண மாகிப்போனது” என்றவர்கள் இது தொடர்பிலான பா.ஜ.க-வின் சமீபத்திய காய்நகர்த்தல்களை விவரித்தார்கள்.

“ரஜினியை எப்படியேனும் தனது கூட்டணியில் இழுத்துக்கொள்ள வேண்டும் என்று தனது கடைசி அஸ்திரமாகத்தான் அமித் ஷாவை சென்னைக்கு அனுப்பிவைத்தது பா.ஜ.க. ஆனாலும் அவரைச் சந்திப்பதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டார் ரஜினி. டெல்லிக்குத் திரும்பிய அமித் ஷாவுடன் பிரதமர் மோடி, அந்தக் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்துதான், டெல்லியிலிருந்து வந்த அழுத்தத்தைத் தொடர்ந்தே இப்படியோர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் ரஜினி என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். அதாவது, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்காத பட்சத்தில், தனது அரசியல் வருகை முடிவு குறித்து ரஜினி எந்தவொரு நிலைப்பாட்டையும் தெரிவித்துவிடக் கூடாது என்பதே டெல்லியின் நோக்கம்.

அன்புள்ள ரஜினிகாந்த் 2020 - கதை, திரைக்கதை, இயக்கம்: அமித் ஷா

இப்படி ரஜினியை எந்த முடிவையும் எடுக்க விடாமல், அதன் மூலம் தமிழகத்தின் பிற கட்சி களையும் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கவிடாமல் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும். தேர்தல் இறுதி நேரம் வரை இப்படியொரு சூழலை உருவாக்கி, கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதே பா.ஜ.க-வின் நோக்கம். அதேசமயம், இப்படியொரு குழப்பமான சூழலை ஏற்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராகவோ, தி.மு.க-வுக்கு ஆதரவாகவோ பெரிய அலை எதுவும் ஏற்படாது என்பதும் அந்தக் கட்சியின் கணக்கு. அதைத்தான் நவம்பர் 30-ம் தேதி ரஜினி செய்திருக்கிறார்” என்ற வர்கள், கடைசியாகக் கூட்டத்தில் நடந்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்...

“அன்றைய தினம் கொரோனா காலகட்டத்தில் தனது உடல்நிலையை மேற்கோள் காட்டிப் பேசிய ரஜினி, அது குறித்த தனது கவலையையும் தெரிவித் திருக்கிறார். அதைக் கேட்ட நிர்வாகிகள் சிலர், ‘ஆமாங்க, உங்க உடம்புதான் முக்கியம் தலைவரே...’ என்று உச்சு கொட்டியிருக்கிறார்கள். அதாவது, ரஜினி தான் சொல்ல விரும்பியதை நிர்வாகிகள் வாயிலிருந்தே வரவழைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து ரஜினி தரப்பில், ‘நாம அரசியல் பண்ணணும்னா பி.ஜே.பி-யோட போகணும். ஆனா, நீங்களோ தமிழக மக்களோ அதை விரும்ப மாட்டீங்க. இந்த நிலைமையில என்னதான் முடிவெடுக்குறது?’ என்று குழப்பமாகவே பேசப்பட்டிருக்கிறது. இதை முன்வைத்து, கூட்டத்தில் பலரும் ‘ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டார்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். விரைவில் ரஜினியிடமிருந்து அறிக்கை ஒன்று வரலாம். அநேகமாக இறுதி விடையை அது தரலாம்” என்றார்கள் விரிவாக!

டியர் ரஜினி... முதல்ல சொல்லுங்க, அப்புறம் நில்லுங்க!