Published:Updated:

“பா.ஜ.க-வில் சேர்ந்தால், கைது நடவடிக்கை இருக்காதா?” - தகிக்கும் மேற்கு வங்கம்...

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து பிரசாரம் செய்தும் வெற்றிபெற முடியாமல் போனதை பா.ஜ.க-வால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

“பா.ஜ.க-வில் சேர்ந்தால், கைது நடவடிக்கை இருக்காதா?” - தகிக்கும் மேற்கு வங்கம்...

அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து பிரசாரம் செய்தும் வெற்றிபெற முடியாமல் போனதை பா.ஜ.க-வால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

Published:Updated:
மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க அரசியல் சமீபகாலமாக தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய சில தினங்களுக்குள், அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஃபிர்ஹத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ மதன் மித்ரா, முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை கைது செய்த சி.பி.ஐ போலீஸார், இதே வழக்கில் கையும் களவுமாக பிடிபட்டு, பிறகு பா.ஜ.க கட்சிக்குத் தாவிய சுவேந்து அதிகாரி மற்றும் இந்த வழக்கில் ஏ-1 ஆக இருக்கும் முகுல் ராய் ஆகிய இருவர்மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் சி.பி.ஐ பாரபட்சம் காட்டுவது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

“பா.ஜ.க-வில் சேர்ந்தால், கைது நடவடிக்கை இருக்காதா?” - தகிக்கும் மேற்கு வங்கம்...

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று பா.ஜ.க பெரிதும் எதிர்பார்த்தது. தேர்தல் வெற்றிக்காக, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கொரோனா தொற்று குறித்துக் கவலைப்படாமல், மேற்கு வங்கத்தில் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தார்கள். அவர்களின் வலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, காலில் ஏற்பட்ட காயத்தைப் பிரச்னையாக்கிய மம்தா பானர்ஜி, கட்டுப்போட்டுக்கொண்டு சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்தார். எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையைக் காரணம் காட்டி, ஏதாவது உள்ளடி வேலையில் பா.ஜ.க ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, வாக்கு எண்ணிக்கை முடிந்த ஓரிரு நாள்களில் அவசர அவசரமாக முதல்வராகப் பதவியேற்றும் கொண்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்களைப் பிரித்ததோடு மட்டுமல்லாது, இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற பா.ஜ.க-வின் நோக்கம் நிறைவேறவில்லை. அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து பிரசாரம் செய்தும் வெற்றிபெற முடியாமல் போனதை பா.ஜ.க-வால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதோடு, தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் மாநில அரசு பெரிய அளவில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்துதான், மம்தா பானர்ஜிக்கு எதிராக, மத்திய அரசு ‘நாரதா லஞ்ச வீடியோ வழக்கு’ அஸ்திரத்தைக் கையிலெடுத்தது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ‘நாரதா நியூஸ்’ இணையதளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்பட பணம் பெறுவது போன்ற வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களைச் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் 2014-ம் ஆண்டில் எடுக்கப்பட்டவை.

‘தெஹல்கா’ இணையதளத்தில் நிர்வாக ஆசிரியராக இருந்த மேத்யூ சாமுவேல், இந்த ஆபரேஷனுக்காக ‘இம்பெக்ஸ் கன்சல்டன்சி சொல்யூஷன்’ என்ற போலி நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் செயல்பட லஞ்சம் பெறுவது போன்ற வீடியோக்கள் எடுப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். மொத்தம் 52 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை சாமுவேலும் அவரின் நண்பர் ஏஞ்சல் ஆபிரஹாமும் சேர்ந்து எடுத்தனர். இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள் முகுல் ராய், சுவேந்து அதிகாரி, சவுகதா ராய், ககோலி கோஷ், பிரசுன் பானர்ஜி, அபருபா போதார், மாநில அமைச்சர்கள் மதன்மித்ரா, சுப்ரதா முகர்ஜி, ஃபிர்ஹத் ஹகிம், இக்பால் அகமத் ஆகியோர் மேத்யூ சாமுவேல், ஏஞ்சல் ஆபிரஹாம் இருவரிடமும் பணம் வாங்குவது போன்ற வீடியோவில் சிக்கிக்கொண்டார்கள். இவைதான் ‘நாரதா நியூஸ்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

நாரதா ஆபரேஷன் அணி பதிவுசெய்த வீடியோவில், சுவேந்து அதிகாரி 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியிருந்தார். முகுல் ராய் பணத்தைக் கையில் வாங்காமல், தனது அலுவலகத்தில் இருப்பவரிடம் கொடுத்துவிடும்படி தெரிவித்திருந்தார். வீடியோ வெளியான சில நால்களில், அதாவது 2017-ம் ஆண்டே முகுல் ராய் பா.ஜ.க-வில் இணைந்து, அதன் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுவேந்து அதிகாரியை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பாக அவர் நந்திகிராமில் போட்டியிட்டு, மம்தா பானர்ஜியைத் தோற்கடித்தார்.

ஃபிர்ஹத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி, சுவேந்து அதிகாரி
ஃபிர்ஹத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி, சுவேந்து அதிகாரி

லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோக்கள் வெளியானவுடன், அதைத் தயாரித்த சாமுவேலுக்கு எதிரான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால், 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. 2017-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி, ‘அரசியல்வாதிகள் சாமுவேலிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக சி.பி.ஐ ஆரம்பகட்ட விசாரணை நடத்தலாம்; தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்யலாம்’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ., இதில் தொடர்புடைய 12 திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருந்ததால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க லோக்சபா சபாநாயகரிடம் சி.பி.ஐ அனுமதி கேட்டிருந்தது. ஆனால், சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்காமல் இருந்துவந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எப்படியாவது செக் வைக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலுக்கு முன்பே, அதாவது கடந்த ஜனவரி மாதமே ஃபிர்ஹத் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, சோவன் சாட்டர்ஜி, மதன் மித்ரா ஆகியோர் மீது வழக்கு தொடர, மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கரிடம் சி.பி.ஐ அனுமதி கேட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், முகுல் ராய் மீது வழக்கு தொடர சி.பி.ஐ அனுமதி கேட்கவில்லை. ஆனால், இவர்தான் சி.பி.ஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘‘நாரதா ஆபரேஷனின்போது, சுவேந்து அதிகாரி மக்களவை உறுப்பினராக இருந்தார். அவர்மீது வழக்கு தொடர சபாநாயகரிடம் கேட்ட அனுமதி இன்னும் நிலுவையில் இருக்கிறது. எனவேதான் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறது சி.பி.ஐ. ‘‘அப்படியென்றால், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த நடைமுறையை சி.பி.ஐ ஏன் கடைப்பிடிக்கவில்லை’’ என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.

நாரதா வீடியோ ஆபரேஷனை நடத்திய மேத்யூ சாமுவேல், ‘‘சுவேந்து அதிகாரி பணம் வாங்குவது போன்ற வீடியோவை நான்தான் படம் பிடித்து சி.பி.ஐ-யிடம் கொடுத்தேன். அப்படி இருக்கும்போது அவரை மட்டும் கைது செய்யாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. பா.ஜ.க-வில் சேர்ந்தால், கைது நடவடிக்கை இருக்காதா? நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்’’ என்கிறார்.

“பா.ஜ.க-வில் சேர்ந்தால், கைது நடவடிக்கை இருக்காதா?” - தகிக்கும் மேற்கு வங்கம்...

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாள்களில், அதாவது மே 9-ம் தேதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார். அப்படியிருந்தும் உடனே காரியத்தில் இறங்காத சி.பி.ஐ., மம்தா பானர்ஜி பதவியேற்ற இரண்டு வாரங்கள் கழித்து தன் வேலையைக் காட்டியிருக்கிறது. தேர்தலில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களைக் கைதுசெய்தால், பழிவாங்கும் அரசியல் செய்வதாகக் கூற வாய்ப்பு இருப்பதால், நாரதா லஞ்ச வீடியோ வழக்கைக் காரணம் காட்டி கைதுசெய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தக் கைதுகளை அடுத்து ‘‘என்னையும் கைது செய்யுங்கள்’’ என்று கூறி சி.பி.ஐ அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளுடன் ஆறு மணி நேரம் வாக்குவாதம் செய்தார் மம்தா பானர்ஜி. ‘‘கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யுங்கள்’’ என்று சி.பி.ஐ கூறவே, ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமீன் கொடுத்தது. ஆனால், கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, கொல்கத்தா உயர் நீதிமன்றம் மூலம் ஜாமீனுக்கு சி.பி.ஐ முட்டுக்கட்டை போட்டுவிட்டதால் கடுப்பில் இருக்கிறார் மம்தா.

இப்போதைக்கு ஓயாது மேற்கு வங்கத்தின் தகிப்பு!