Published:Updated:

வேகமெடுக்கும் புதுச்சேரி அரசியல்... மழை நிவாரண நிதி ரூ.5,000... என்ன சொல்லவருகிறது பா.ஜ.க?

தமிழிசை - ரங்கசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழிசை - ரங்கசாமி

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அதற்கான பேச்சுவார்த்தையில், ‘தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும்’ என்று ரங்கசாமி நிபந்தனை விதித்தார்

‘‘மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் நமக்கு தாராளமாக நிதி கிடைக்கும்; வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடியும்’’ - புதுச்சேரியில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், ஆட்சியைப் பிடித்து ஆறு மாதங்களைக் கடந்தும், தான் அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாமல், விரக்தியுடன் வலம்வந்துகொண்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கப் பெறாமல் ஏராளமான கோப்புகள் தேங்கிக்கிடக்க, கிடப்பிலிருந்த மழை வெள்ள நிவாரண நிதி ஃபைலை மட்டும் திடீரென்று ஓகே செய்தது டெல்லி. மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற பா.ஜ.க-வின் இந்தத் திடீர் பரிவில் இரண்டு முக்கிய அரசியல் கணக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் புதுச்சேரி அரசியலாளர்கள்!

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க., தொடர்ந்து வந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டு அமைச்சர்கள், ஒரு சபாநாயகர், மூன்று நியமன எம்.எல்.ஏ-க்கள் பதவிகளையும் வசப்படுத்திக் கொண்டது. ரங்கசாமியும், ‘ஐந்து வருடங்கள் பிரச்னை இல்லாமல் ஓட்டினால் போதும்’ என்று அனைத்துக்கும் தலையாட்டினார். ஆனால், அவர் போட்ட அனைத்து அரசியல் கணக்குகளும் தவிடுபொடியாகின. காரணம், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கிரண் பேடி கோப்புகளைத் திருப்பி அனுப்பியதுபோலவே, இந்த ஆட்சியிலும் இவர் கோப்புகளை திருப்பி அனுப்பினார். இதனால் நொந்துபோன ரங்கசாமி, ‘‘நாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசு நமக்கு வழங்கும் நிதியும் குறைந்துகொண்டே போகிறது’’ என்று ஆட்சிக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே, புலம்ப ஆரம்பித்தார். ஆனால், அதுகுறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க., ராஜ்ய சபா எம்.பி சீட்டை விட்டுக்கொடுத்தால் அனைத்தையும் சரிசெய்துவிடலாம் என்று அடுத்த தூண்டிலை வீசியது.

வேகமெடுக்கும் புதுச்சேரி அரசியல்... மழை நிவாரண நிதி ரூ.5,000... என்ன சொல்லவருகிறது பா.ஜ.க?

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அதற்கான பேச்சுவார்த்தையில், ‘தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும்’ என்று ரங்கசாமி நிபந்தனை விதித்தார். அப்போது ‘சரி’யென்று தலையசைத்த மத்திய அரசு, ராஜ்ய சபா சீட்டைப் பெற்றுக்கொண்டதும் வழக்கம்போல இந்த விவகாரத்தை அந்தரத்தில் தொங்கவிட்டது. எரிச்சலுடன் பஞ்சாயத்துக்கு வந்த ரங்கசாமியிடம், ‘பிரதமரைச் சந்தியுங்கள்’ என்று கைகாட்டியது ஆளுநர் மாளிகை. ஆனால், டெல்லி என்றாலே பாலில் பல்லி விழுந்ததைப்போல முகம் சுளிக்கும் முதல்வர் ரங்கசாமி, திருப்பதியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் அமித் ஷாவைச் சந்தித்து தலைமைச் செயலாளர் மாற்றம் குறித்துப் பேச முற்பட்டிருக்கிறார். ஆனால், அமித் ஷா எடுத்த எடுப்பிலேயே, ‘‘டெல்லிக்கு வந்து பிரதமரைச் சந்தியுங்கள்’’ என்று கூலாகக் கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்!

பொங்கலே வரப்போகிறது... ஆனால், தீபாவளிக்காக அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, சர்க்கரையே இன்னும் மக்களுக்கு அளிக்கப்பட வில்லை. அதற்கான ‘கொள்முதல் விலை சந்தையைவிட அதிகமாக இருக்கிறது’ என்று சுட்டிக்காட்டும் தலைமைச் செயலகம், காலியாக இருக்கும் 10,000 அரசுப் பணியிடங்களை நிரப்பும் கோப்புக்கும் ‘ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியவில்லை’ என்று கைவிரித்துவிட்டது. நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பஞ்சராகிக் கிடக்கின்றன. அதற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. அதேசமயம், ‘‘போதுமான நிதி இல்லையென்று தெரிந்தும், எங்களைக் கலந்தாலோசிக்காமல் இலவசங்களை அறிவித்துவிட்டு அனுமதி கேட்டால் எப்படி?’’ என்று கேள்வி எழுப்புகிறது தலைமைச் செயலகம். ‘‘இதற்காகவா அடித்தளமில்லாத உங்களுடன் கூட்டணி வைத்தோம்?’’ என்று புழுங்குகிறது முதல்வர் தரப்பு.

இந்த நிலையில்தான், ‘மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 5,000 ரூபாய்’ என்ற அறிவிப்பு கோப்பும் கடந்த சில வாரங்களாக தலைமைச் செயலகத்தில் முடங்கிக் கிடந்தது. கடந்த வாரம், ‘‘மழை நிவாரணம் எப்போது கிடைக்கும்?’’ என்று தன்னிடம் செல்போனில் கேட்ட ஒருவரிடம், ‘‘நான் ராஜா இல்லப்பா. எனக்குக் கீழேயும் மேலேயும் நிறைய பேர் இருக்காங்க” என்று விரக்தியோடு பதிலளித்தார் ரங்கசாமி. அவர் பேசிய அந்த ஆடியோ, புதுச்சேரி அரசியலில் சூறாவளியாகச் சுழல, சுதாரித்துக்கொண்ட ஆளுநர் மாளிகை, டெல்லி ஒப்புதலுடன் திடீரென்று அந்தக் கோப்புக்கு அனுமதி கொடுத்துவிட்டது.

அஸ்வனிகுமார்
அஸ்வனிகுமார்

இதை ரங்கசாமியே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஷாக்காக அவரையே திட்டத்தை ஆரம்பித்துவைக்கச் சொல்லி டிசம்பர் 21-ம் தேதி சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு தலா 5,000 ரூபாயும், மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு தலா 4,500 ரூபாயும் நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே பணம் பட்டுவாடா செய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதைப் பற்றிப் பேசும் அரசியல் பார்வையாளர்களோ, “கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பணியையும் நிதி நிலைமையைக் காரணம் காட்டியே கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, இப்போது திடீரென்று ஒரு ரேஷன் கார்டுக்கு சுளையாக 5,000 ரூபாயை தூக்கிக் கொடுக்கிறது என்றால் சும்மா இல்லை... இதன் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. சமீபத்தில் மழை வெள்ள நிவாரணமாகத் தமிழக அரசு 4,625 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டது. அதற்கு இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. அதேசமயம், புதுச்சேரியில் இவ்வளவு பெரிய தொகையைப் பயனாளிகளுக்கு வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கும் மறைமுகமாக நெருக்கடி கொடுத்திருக்கிறது பா.ஜ.க. அதேசமயம், புதுச்சேரியிலும் பா.ஜ.க நினைத்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது நடக்கும் என்கிறரீதியிலும் அந்தக் கட்சி ஷோலோவாக அரசியல் செய்யும் பாணியைக் கையிலெடுத்துள்ளது. ரங்கசாமி அறிவித்த திட்டப்பணிகள் எதுவும் தொடங்காத நிலையில், பா.ஜ.க மட்டுமே மக்களுக்கு நிவாரணம் தருகிறது என்கிற இமேஜையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதைதான் இது!” என்றார்கள் விவரமாக!

குறுக்குவழியில் அரசியல் செய்வதை விடுத்து, மக்கள்நலப் பணிகளில் உண்மையாகவே அக்கறை காட்டினால், இதைவிட கட்சியை நன்றாகவே வளர்க்கலாம். இது அத்தனை கட்சிகளுக்கும் பொருந்தும்!