Published:Updated:

ராஜஸ்தான்... வலுப்பெற்ற பாலைவன அரசியல் புயல்!

கவர்னருடன் அசோக் கெலாட்
பிரீமியம் ஸ்டோரி
News
கவர்னருடன் அசோக் கெலாட்

- டெல்லி பாலா

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தலைமையிலான 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தூக்கியுள்ள போர்க்கொடி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அது முதல்வர் அசோக் கெலாட் - ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இடையிலான மோதலாக வலுத்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சபாநாயகர் சி.பி.ஜோஷி கொடுத்த தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய சச்சின் தரப்பு இடைக்காலத் தடை வாங்கியது. அதை எதிர்த்து சபாநாயகர் உச்ச நீதிமன்றம் சென்றார். ஒரு நாள் விசாரணைக்குப் பின்னர், ‘உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தீர்ப்பு வெளியிட உயர் நீதிமன்றம் கூடிய நிலையில் புதிய திருப்பம்.

‘இந்த விவகாரம் அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணை தொடர்பானது என்பதால், மத்திய அரசின் கருத்தையும் கேட்ட பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று சச்சின் தரப்பு ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தது. ‘தீர்ப்பு வழங்கும் நேரத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்வது நீதிமன்ற நடைமுறைக்கு எதிரானது. அதை ஏற்கக் கூடாது’ என்று சபாநாயகர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தாலும், உயர் நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை ஏற்கெனவே விதித்திருந்த இடைக்கால தடையையும் உயர் நீதிமன்றம் நீட்டித்தது.

புல்வெளியில் எம்.எல்.ஏ-க்கள்...
புல்வெளியில் எம்.எல்.ஏ-க்கள்...

இந்தத் தீர்ப்புக்கு முந்தைய தினம், ‘சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும்’ என்று முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற விவகாரமும் தங்களுக்கு எதிராகச் சென்றதால், கெலாட் பொங்கியெழுந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் ஜூலை 24-ம் தேதி சட்டமன்ற கட்சிக் கூட்டத்தை நடத்தினார். பின்னர் 2:00 மணியளவில் நான்கு பேருந்துகளில் எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநர் மாளிகை நோக்கிப் புறப்பட்டார்.

அங்கு சென்ற பிறகு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ‘சமூக இடைவெளி’யுடன் புல்வெளியில் உட்காரவைக்கப்பட்டனர். முதல்வர்-ஆளுநர் சந்திப்பு நடந்துகொண்டிருக்கும்போதே, ‘அரசியல் சாசனத்தைக் காக்க வேண்டும்’ என்ற கோஷங்களை வெளியே எம்.எல்.ஏ-க்கள் எழுப்பினர். சந்திப்பு முடிந்த பின்னர் ஆளுநரும் வெளியே வந்து, ‘அரசின் கோரிக்கையை ஆய்வு செய்கிறேன்’ என்று எம்.எல்.ஏ-க்களிடம் கூறினார். கெலாட் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், இரவு 8:30 மணி வரை எம்.எல்.ஏ-க்கள் அங்கேயே உட்கார்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பிறகு இரவில் ஆளுநர் மாளிகை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், ‘சட்டமன்றத்தைக் கூட்டுவதை, கொரோனா காலத்தையும் கருத்தில் கொண்டுதான் முடிவு செய்ய முடியும்’ என்று கூறப்பட்டிருந்தது. அதோடு, ‘அரசுக்குப் பெரும்பான்மை இருக்கும்போது ஏன் சட்டமன்றத்தில் அதை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பது வேலைக்கு ஆகாது’ என்கிற ஆளுநரின் ரியாக்‌ஷன் செய்தியாளர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மறுநாள் மீண்டும் அமைச்சரவையைக் கூட்டிய கெலாட், ‘ஜூலை 31-ம் தேதிக்குள் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். ஆறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. கொரோனா நிலைமை குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது’ என்று ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினார்.

அதோடு, ‘மத்திய அரசின் அழுத்தத்துக்கு ஆளுநர் பணிந்து செல்கிறார். சட்டமன்றம் கூட்டப்படவில்லையென்றால், பிரதமர் வீட்டை முற்றுகையிடப் போகிறோம்’ என்று கெலாட் ஆவேசப் பேட்டிகளைக் கொடுத்துவருகிறார். ஆளுநர் மற்றும் மத்திய பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி நடத்தியிருக்கிறது.

கவர்னருடன் அசோக் கெலாட்
கவர்னருடன் அசோக் கெலாட்

இன்னொரு விவகாரமும் அங்கு கிளம்பியிருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெற்றி பெற்ற ஆறு எம்.எல்.ஏ-க்களை கடந்த செப்டம்பர் மாதம் கெலாட் தன்வசம் இழுத்துக்கொண்டார். அவர்கள் ஆறு பேருமே காங்கிரஸ் கட்சியின் ‘ஒருங்கிணைந்த குழு’ என்று சபாநாயகர் சி.பி.ஜோஷியும் ஏற்றுக்கொண்டார். அதை எதிர்த்து பா.ஜ.க தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதற்கிடையே, ‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்’ என்று பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா அந்த ஆறு எம்.எல்.ஏ-க்களுக்கும் ஒரு ‘கொறடா நோட்டீஸ்’ அனுப்பியிருக்கிறார். ‘தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் எந்தக் கட்சியுடனும் இணையாதபோது, ராஜஸ்தானில் கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியோடு சேர முடியாது’ என்று அந்த கொறடா நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் மாயாவதியும், ‘ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகிறார்.

மத்தியப்பிரதேசத்தில் பிரச்னை வெடித்த இரண்டே வாரங்களில் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ராஜஸ்தானில் ஜூலை 12-ம் தேதி தொடங்கிய பிரச்னை மூன்றாம் வாரத்திலும் நீடித்துவருகிறது. ஆட்சிக் கவிழ்ப்பு தொற்றிலிருந்து கெலாட் மீண்டுவருவாரா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறார்கள்!