Published:Updated:

பார்க்க சொர்க்கம்... உள்ளே நரகம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றித் தெரியுமா? #PoK

காஷ்மீரைப் போலவே இங்கும் அழகு கொட்டிக்கிடக்கிறது. ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதலால், தீவிரவாதத்தின் வேராக மாறியுள்ளது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்.

Muzaffarabad
Muzaffarabad

"ஸ்ரீநகரைப் பிரிக்க நினைத்தோம்... இப்போது, முசாஃபராபாத்தை எப்படிக் காப்பாற்றப்போகிறோம்?''

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரிதான் இப்படிப் புலம்பியிருக்கிறார்.

"காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, இனிமேல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இலக்கு" என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கூறியிருந்தனர். தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி. அதுவும் ஒருநாள் இந்தியாவின் அதிகார வரம்புக்குள் இருக்கும்" என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பது பாகிஸ்தான் அரசியல்வாதிகள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

PoK
PoK

ஜெய்சங்கரின் பேச்சுக்கு, அடுத்த நிமிடமே பாகிஸ்தானில் இருந்து கூப்பாடு எழுந்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, பதறியபடியே ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் போர்க்குணத்தையும் காஷ்மீர் மீது காட்டும் இந்தியாவின் அதிகாரத் தோரணையையும் உலக நாடுகளே அறிந்துகொள்ளுங்கள்' என்று பாகிஸ்தான் அதில் தெரிவித்தது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னரே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தீவிரவாதிகளின் பிடியிலிருந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தனிப் பாசம் ஏற்பட்டுள்ளது. அதனால், சுதந்திர தினத்தைக் கொண்டாட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தை நோக்கி ஓடினார். ஆகஸ்ட் 14- ம் தேதி, சட்டமன்றத்தில் உரையாற்றவும் செய்தார். இப்போதெல்லாம் இம்ரான் கானை அடிக்கடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பார்க்க முடிகிறது. கூட்டங்கள், ஊர்வலங்கள், சலுகைகள் என்று அங்கே அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கிறார். கிழக்குப் பாகிஸ்தானை இழந்ததுபோல முசாஃபராபாத்தையும் இழந்தால், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அவமானமாகிப் போய்விடும் என்பதை இம்ரான் கான் உணர்ந்திருக்கிறார். இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது எப்படி?

Kashmir's Last king  Hari Singh
Kashmir's Last king Hari Singh

கடந்த 1947-ம் ஆண்டு, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. அப்போது, காஷ்மீர் மன்னராக ஹரிசிங் இருந்தார். காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்குமாறு மன்னர் ஹரிசிங்கை பாகிஸ்தான் வற்புறுத்தியது. ஹரிசிங் மறுக்கவே, கோபமடைந்த பாகிஸ்தான், பஸ்துன் இன மக்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தத் தூண்டிவிட்டது. இந்தத் தருணத்தில், ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில், 1947- ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அவர் கையொப்பமிட்டார். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 26 -ம் தேதி, ஜம்மு - காஷ்மீரில் பொது விடுமுறை ஆகும். இந்த நாளை, சுதந்திர தினம் போல மக்கள் கொண்டாடுவார்கள். ஒரு வழியாக, பாகிஸ்தான் விரட்டியடிக்கப்பட்டு, காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது

இந்தத் தருணத்தில், காஷ்மீரின் மேற்குப் பகுதியில், சுமார் 13,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியை பாகிஸ்தான் பிடித்தது. இதற்கு, 'ஆஸாத் ஜம்மு - காஷ்மீர்' என்று பாகிஸ்தான் பெயர் சூட்டிக்கொண்டது . மேற்கு லடாக் பகுதியைப் பிடித்த பாகிஸ்தான், அதற்கு 'கில்ஜித்' எனப் பெயர் சூட்டியது. நம்மைப் பொறுத்தவரை, இவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர். இதன் தலைநகரம்தான் முசாஃபராபாத். 1971-ம் ஆண்டு போருக்குப் பிறகு, இந்தியா ஒருமுறைகூட பாகிஸ்தானுக்குள் புகுந்து விமானத் தாக்குதல் நடத்தியது கிடையாது.

Pashtuns
Pashtuns

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிராஜ்-2000 ரக விமானங்கள் குண்டு வீசிய பாலகோட்டுக்கு, முசாஃபராபாத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அதிபர், பிரதமர், சட்டமன்றம் எல்லாம் உண்டு. தற்போதைய அதிபர், சர்தார் மசூத்கான். பிரதமரின் பெயர், ராஜா முகமது ஃபாருக் ஹைதர்கான். ஆனால், எந்தவொரு உரிமையும் கிடையாது. சிறு விஷயத்துக்குக்கூட பாகிஸ்தானைக் கேட்டே முடிவெடுக்க வேண்டும்.

1963- ம் ஆண்டில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான், சீனாவுக்கு தாரைவார்த்த கதையும் நடந்துள்ளது. நீலம், முசாஃபராபாத், மிர்பூர், பூஞ்ச், சுத்னா, கோட்லி, பிம்பர், பாக் ஆகிய 8 மாவட்டங்கள் இங்குள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், வட மேற்கில் ஆப்கானிஸ்தானின் வாகன் பகுதி, சீனாவின் ஜின்ஜியாங் பகுதிகளுடன் எல்லைகளை POK (Pakistan Occupied Kashmir)ப் பகிர்ந்துகொள்கிறது. மக்கள்தொகை 45 லட்சம்தான். காஷ்மீரைப்போலவே இங்கும் அழகு கொட்டிக்கிடக்கிறது. சோளம், கோதுமை, ஆப்பிள் ஆகியவற்றை இங்கு விளைவிக்கின்றனர்.

POK
POK

காஷ்மீர் போல இங்கு சுற்றுலாத் தொழில் பெரிய அளவில் வளரவில்லை. வெளிநாட்டவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. மரப்பொருள்கள் தயாரிப்பு, ஜவுளி உற்பத்தி மற்றும் தரைவிரிப்புகள் தயாரிப்பு போன்ற தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இங்கு, 72 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். ஆனால், தரமான கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் கிடையாது. பஸ்டோ, உருது, காஷ்மீரி, பஞ்சாபி போன்ற மொழிகளை மக்கள் பேசுகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனியாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளன. 2011- ம் ஆண்டு கணக்கின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 பில்லியன். அதாவது, கிட்டத்தட்ட ரூ. 20,000 கோடி அமெரிக்க டாலர்கள்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், இந்த காஷ்மீரைக் கண்டுகொள்வது கிடையாது. பெரிய அளவில் வளர்ச்சியும் இல்லை. இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இளைஞர்களைத் தீவிரவாத இயக்கங்கள் எளிதாக மூளைச்சலவை செய்துவிடுகின்றன. தெற்காசியாவின் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ-தொய்பாவின் பல முகாம்கள் இங்கே உள்ளன. மும்பை நகரில் 26/11 தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கஸாப், பயிற்சி பெற்றது முசாஃபராபாத்தில்தான். மீடியாக்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். கருத்துச் சுதந்திரம் என்றால், விலை என்னவென்று கேட்பார்கள். ஆஸாத் காஷ்மீர் ரேடியோ என்கிற ஒரேயொரு வானொலி நிலையம் மட்டுமே இங்கு செயல்படுகிறது.

பார்க்க சொர்க்கம்போல காணப்படும். ஆனால், உள்ளே நரகம் என்றே சொல்லலாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது என்பது பெரும் சவாலே!