Published:Updated:

`பா.ஜ.க உடனான கூட்டணியே, அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்!' - சி.வி.சண்முகம் அதிரடி

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன். )

`நம் கூட்டணி கணக்கு சரியில்லை. பா.ஜ.க-வுடன் நாம் கூட்டணிவைத்த காரணத்தால்தான் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக இழந்துவிட்டோம்' - சி.வி.சண்முகம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அதன்படி, நேற்று வானூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சி.வி.சண்முகம், ``அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால்... அதாவது, பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்த காரணத்தால்தான் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக நாம் இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் 14,000 வாக்குகளில்தான் தி.மு.க ஜெயிக்கிறது. அங்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிட்டத்தட்ட 20,000 உள்ளது. அதில் 18,000 சிறுபான்மையினரின் வாக்குகள் விழுப்புரம் நகராட்சியில் மட்டுமே இருக்கின்றன. விழுப்புரம் நகராட்சியில் மட்டும் நமக்கு 16,000 வாக்குகள் குறைந்துள்ளது. ஆனால், தி.மு.க 14,000 வாக்குகளில்தான் வெற்றிபெற்றது. ஆக, இது ஓர் உதாரணம்.

வானூர் ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம்.
வானூர் ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம்.
அ.தி.மு.க மீதோ... அ.தி.மு.க-வின் ஆட்சியின் மீதோ சிறுபான்மையினருக்குக் கோபம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் அ.தி.மு.க மீது நல்ல பெயர் இருந்தது. அ.தி.மு.க ஆட்சிதான் வர வேண்டும் என மக்கள் தயாராக இருந்தனர். ஆனால், நம் கூட்டணிக் கணக்கு சரியில்லை.
- சி.வி.சண்முகம்

சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அப்படி இல்லையென்றால்... இன்றைக்கு திமுக ஆட்சியிலேயே இல்லை. அப்படியே அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சியைத்தான் அமைத்திருக்க முடியும்.

ஆகவே, இதில் நம்மிடத்தில் குறையும் இருக்கிறது. 'அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். தி.மு.க-வுக்கு மக்கள் அமோகமாக ஆதரவு அளித்துவிட்டார்கள்' என யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் இன்றும் தயாராக உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆட்சியை அமைப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.

Vikatan

ஆனால், முதலில் நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார் கட்சி நிர்வாகிகளிடம்.

அடுத்த கட்டுரைக்கு