Published:Updated:

“உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்!”- இடைத்தேர்தல் வேகத்தில் சி.வி.சண்முகம்

பொன்முடி மீது கிராவல் மணல் அள்ளிய வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சட்ட அமைச்சரின் இந்தப் பேச்சு பொன்முடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க ஒருபுறம், அ.தி.மு.க மறுபுறம் எனத் தேர்தல் களத்தில் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அ.தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய பேச்சு அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

விக்கிரவாண்டி அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்தும், தேர்தல் செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரமாண்ட முறையில் விக்கிரவாண்டியில் நடத்தினார். பத்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அமைச்சர் சண்முகம் தி.மு.க மாவட்டச் செயலாளர் பொன்முடிக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார். அவர் பேசியபோது, “கிராமங்கள் நிறைந்த தொகுதியாக இந்த விக்கிரவாண்டி தொகுதி இருக்கிறது. நாம் கிராமப் பகுதிகளுக்குக் கொண்டுவந்த திட்டங்களை மக்களிடம் விளக்கினாலே நமது வெற்றி உறுதியாகிவிடும். இந்தத் தொகுதியைப், புதிய தாலுக்காவாக அறிவித்தது நமது ஆட்சியில்தான். பொன்முடி அமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரி கொண்டுவந்ததாகச் சொல்கிறார். அவர் கல்லூரி வளர வேண்டும் என்பதற்காக மெடிக்கல் காலேஜ் கொண்டுவந்தார். விக்கிரவாண்டி நகரில் நீதிமன்றம் திறந்ததற்கு ஏன், இப்போது திறந்தார்கள்? என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாங்கள் நன்றி சொல்லி போஸ்டர் ஒட்டியுள்ளோம் என்று அவர் சொல்லியுள்ளார். நாங்கள் கொண்டுவந்த திட்டத்திற்கு நாங்கள் நன்றி சொல்லாமல் யார் நன்றி சொல்ல முடியும்? உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள். உன்மீது உள்ள வழக்கு விவரம் எங்களுக்குத் தெரியாதா? எங்களுக்கும் வழக்குப்போட தெரியும்” என்று பொன்முடியை எச்சரிக்கை செய்யும் விதத்தில் பேசியுள்ளார், சி.வி.சண்முகம். பொன்முடி மீது கிராவல் மணல் அள்ளிய வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சட்ட அமைச்சரின் இந்தப் பேச்சு பொன்முடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் விக்கரவாண்டியில் பொன்முடியின் வேகம் அமைச்சரின் வேகத்திற்கு ஈடாக இருக்காது என்று அ.தி.மு.க தரப்பில் சொல்கிறார்கள்.

சி.வி.சண்முகம் பேச்சு
சி.வி.சண்முகம் பேச்சு

அதேநேரம், தி.மு.க தரப்பிலோ நம் கைவசம் இருந்த தொகுதியை ஆளும்கட்சியிடம் இழந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொன்முடி ஒருபுறம் நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் பணியாற்றிவருகிறார். மற்றொரு பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் குறிப்பிட்ட சமூக வாக்குகளைக் கவரும் வேலையில் இறங்கியுள்ளார்.

இதற்காக விக்கரவாண்டி தொகுதியில் உள்ள அந்த சமூகப் பிரதிநிதிகளை வீடுதோறும் சென்று சந்தித்து திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். “இடஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றபோது அதிக உயிர் இழப்பும், அதிக கைதும் இந்த விக்கிரவாண்டி பகுதியில் மட்டுமே நடந்துள்ளது. இதனால் அந்த சமூக மக்கள் இங்கு சமூகரீதியாகவே பலம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதுதான் பா.ம.க-விற்குப் பெரும் பலமாக இருக்கிறது.

தி.மு.க திண்ணைப் பிரசாரம்
தி.மு.க திண்ணைப் பிரசாரம்

அதேநேரம், அந்த சமூக மக்களுக்காக ஏற்கெனவே தனியாகச் சங்கம் அமைத்திருந்தவர், ஜெகத்ரட்சகன். அவருக்கும் இந்தப் பகுதியில் கணிசமான அளவில் ஆதவாளர்கள் இருக்கிறார்கள். பா.ம.க மற்றும் அ.தி.மு.க சார்பாக அந்த சமூக மக்கள் செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்கு தி.மு.க தரப்பிலிருந்து அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை களத்தில் இறக்க வேண்டும் என்று முடிவு செய்த தி.மு.க தலைமை, அதற்கு ஜெகத்ரட்சகனைத் தேர்வு செய்துள்ளது. கடந்த நான்கு நாள்களாகவே அந்த சமூகத்தின் முக்கியப் புள்ளிகளை வீடுதோறும் சென்று சந்தித்து வருகிறார்கள், தி.மு.க தரப்பினர். அ.தி.மு.க தரப்பில் சமூக வாக்குகளை வாங்கித் தரும் பொறுப்பை பா.ம.க நிர்வாகிகள் வசம் ஒப்படைத்துள்ளார், சி.வி.சண்முகம். அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு ஈடாக பா.ம.க நிர்வாகிளுக்கு இந்தத் தொகுதியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.