Published:Updated:

குவாரி விவகாரம்: “அமைச்சர் அப்படி பேசியிருந்தா நியாயம்தான்!”

துரைமுருகன், ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
துரைமுருகன், ஸ்டாலின்

ஆமோதிக்கும் துரைமுருகன்... விழிபிதுங்கும் ஸ்டாலின்!

‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். ஆனால், அடிக்கடி சறுக்கிக்கொண்டேயிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அ.தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுக்க நினைத்து, குவாரி விவகாரம் தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை ஒன்று ‘சொந்தச் செலவில் சூனியம் வைத்ததுபோல’ அவரின் கட்சித் தலைவர்களையே புரட்டிப்போட்டுத் தாக்க... ஆதாரத்துக்கே சேதாரமான நிலையில் விழிபிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் அறிக்கையைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகனையும், துணைப் பொதுச்செயலாளரான பொன்முடியையும் ‘நீங்க மட்டும் யோக்கியர்களா?’ என்கிறரீதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் வறுத்தெடுக்க... இருவரின் குடும்ப குவாரி பிசினஸ் விவகாரங்களும் வீதிக்கு வந்திருக்கின்றன.

வானூர் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ சக்ரபாணியின் மகன் பிரபு விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் கல் குவாரியை ஏலம் எடுத்துள்ளார். இந்த குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து ஸ்டாலின் விடுத்த அறிக்கைதான் தமிழக அரசியலைத் தகிக்கவைத்து, தி.மு.க தரப்பை தலைகுப்புறத் தள்ளியிருக்கிறது.

குவாரி விவகாரம்: “அமைச்சர் அப்படி பேசியிருந்தா நியாயம்தான்!”

தனது அறிக்கையில் ஸ்டாலின், ‘அரசு விதிகளின்படி பொது ஊழியர்கள் தங்களுக்கோ, தங்கள் உறவினர்களுக்கோ டெண்டர் எடுக்கக் கூடாது. அந்த விதிமுறைகளை மீறி அ.தி.மு.க எம்.எல்.ஏ சக்ரபாணியின் மகனுக்கு குவாரி உரிமம் வழங்கியிருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்வினையாற்றி, எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம், தி.மு.க கோட்டையைக் கலகலக்கச் செய்திருக்கிறார்.

‘‘ஸ்டாலின், சட்டம் தெரியாமல் பேசுகிறார். ‘பொது ஊழியர் என்பவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டத்துக்குப் புறம்பாக ஆதாயம் பெற்றாலோ, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாலோ குற்றம்’ என்றுதான் சட்டம் சொல்கிறது. அரசு ஏலங்களில், பொது ஊழியர்களின் உறவினர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று எந்தச் சட்டத்திலும் சொல்லவில்லை. இதைச் ‘சட்டப்புலி’யான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும்.

குவாரி விவகாரம்: “அமைச்சர் அப்படி பேசியிருந்தா நியாயம்தான்!”

சக்ரபாணியின் மகன், பொது ஏலத்தில் கலந்துகொண்டுதான் குவாரி உரிமையைப் பெற்றிருக்கிறார். ஆனால், இதையே குற்றமாகச் சொல்லி, என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார் ஸ்டாலின். ஒரு வாதத்துக்கு நான் ராஜினாமா செய்கிறேன் என்றே வைத்துக்கொள்வோம்... தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் உறவினர்களில் பலரும் டெண்டர் எடுத்திருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்களா? தி.மு.க பொதுச் செயலாளரான துரைமுருகனின் மகன் எம்.பி கதிர் ஆனந்த்தின் மனைவி சங்கீதாவின் பெயரில் இரண்டு மாதங்களுக்கு முன்புகூட காட்பாடி, அரும்பாக்கம் கிராமத்தில் இரண்டு குவாரிகள் ஏலம் எடுக்கப் பட்டிருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், தி.மு.க தலைவர் எங்கள்மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க அவரது கட்சியைச் சேர்ந்த பொன்முடிக்குத்தான் பொருந்தும். கடந்த தி.மு.க ஆட்சியின்போது கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடிதான், தன் மகன் கௌதம சிகாமணிக்கு செம்மண் குவாரி உரிமத்தை முறைகேடாக வழங்கினார். பொது ஏலத்தில் கலந்துகொள்ளாமல், தன் தந்தையின் கனிமவளத்துறைக்குத் தனிப்பட்ட வகையில் கடிதம் எழுதி குவாரியைப் பெற்றார் கெளதம சிகாமணி. இதைத்தான், `அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பது’ என்பார்கள். இதற்காகத்தான் பொன்முடி மீது வழக்கும் தொடுக்கப் பட்டிருக்கிறது’’ என்று கொட்டித் தீர்த்தார்.

குவாரி விவகாரம்: “அமைச்சர் அப்படி பேசியிருந்தா நியாயம்தான்!”

‘எடப்பாடியின் மறைமுக ஆசியுடன்தான் துரைமுருகனின் குடும்பம் சில தொழில் களைச் செய்துவருகிறது’ என்று ஏற்கெனவே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியநிலையில்... ஜூ.வி-யிலும் இது குறித்துக் ‘கோடிட்டு’க் காட்டியிருந்தோம். தவிர, பொன்முடி மீதான குவாரி சர்ச்சை குறித்தும் 25.10.2020 தேதியிட்ட ஜூ.வி-யில் “கெளதம சிகாமணி ஒன்றும் உத்தம சிகாமணி அல்ல!” என்கிற தலைப்பில் விரிவாகக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இப்படியான சூழலில்தான் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.

குவாரி விவகாரம்: “அமைச்சர் அப்படி பேசியிருந்தா நியாயம்தான்!”

டெண்டர் குறித்துப் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “தனது சொந்தக் கட்சியினரின் வில்லங்க வியாபாரங்கள் குறித்து ஸ்டாலின் ஒன்றுமே தட்டிக் கேட்பதில்லை. அத்துடன் நிறுத்திக்கொண்டாலாவது பரவா யில்லை... அவையெல்லாம் தனக்குத் தெரியாது என்பதைப்போல முன்யோசனை இல்லாமல் அறிக்கையை வாசிக்கிறார். பிரச்னையின் அடிவேர் எங்கே இருக்கிறது என்று அவர் யோசிப்பதில்லை அல்லது அவரைச் சுற்றியிருப்பவர்கள் யோசிக்க விடுவதில்லை. பல விஷயங்களில் ஸ்டாலின் சொதப்புவதற்கு இதுதான் காரணம்” என்றார்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இந்த பதிலடியைத் தொடர்ந்து தி.மு.க அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, ‘பொது ஊழியர்கள் குறித்து இந்திய தண்டனைச் சட்டமும், ஊழல் தடுப்புச் சட்டமும் என்ன சொல்கின்றன என்பதை அறியாமலேயே, ‘ஊழல் வெட்கமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பேசியிருக்கிறார், ‘சட்டப்புலி’ சி.வி.சண்முகம்’ என்று கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு துரைமுருகனிடம் பேசினோம். ‘‘அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன பேசினார் என்றே எனக்குத் தெரியாது. பொது ஊழியர் டெண்டர் எடுக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. பொது ஏலத்தில் யார் வேண்டுமானாலும் டெண்டர் எடுக்கலாம். இதில் என் குடும்பம், அடுத்தவர் குடும்பம் என்றெல்லாம் எதுவும் இல்லை. யார் அதிக தொகைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கு ஏலம் கொடுப்பதே சரியான நடைமுறைதான்.

பொது ஏலம் அல்லாமல், அரசாங்கத்திடம் நேரடியாக மனு போட்டு டெண்டர் எடுத்திருந்தால் அதைத்தான் ஃபேவரிட்டிசம் என்பார்கள். இதையேதான் சி.வி.சண்முகமும் பேசியிருந்தார் என்றால், அது நியாயம்தான். மற்றபடி அவர் என்ன பேசினார் என்று கேட்டுவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்’’ என்று இணைப்பைத் துண்டித்தார். டெண்டர் விஷயத்தில் துரைமுருகன் நம்மிடம் கூறியதைத்தான் சி.வி.சண்முகமும் பேசியிருந்தார். அதன்படி, அமைச்சரின் கூற்றை “அது நியாயம்தான்” என்று துரைமுருகன் ஆமோதிக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகி யிருக்கிறது.

சி.வி.சண்முகம்வைத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு பொன்முடியிடம் பேசியபோது, ‘‘அது ஒண்ணும் இல்லைங்க... என் விஷயத்துல பிரச்னை பண்ணினதே சி.வி.சண்முகம்தான். இப்போது அவரே இப்படிப் பண்ணலாமா? என்மீது தொடுக்கப்பட்ட அந்த வழக்கு இப்போதும் நடந்துவருகிறது’’ என்றார் சுருக்கமாக.

‘ஊசியைப் பார்த்து சல்லடை சொன்னதாம்... உன் முதுகுல ஓட்டை இருக்கு’ என்றொரு சொலவடை உண்டு. அப்படி இருக்கிறது இவர்கள் செய்யும் அரசியல்... அட போங்கப்பா!