Published:Updated:

நீட் தேர்வு: `இருப்பதையும் கெடுக்கும் செயலைதான் திமுக அரசு செய்கிறது!’ - சி.வி.சண்முகம் காட்டம்

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

'மோடி வந்தால் 'Go Back' என சொல்வதை விட, உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீங்கள் டெல்லி சென்று போராடி சட்டத்தை பெற்றுத்தந்தாள் நல்லது.' - சி.வி.சண்முகம்.

விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், ``நீட் தேவையில்லை என்பதுதான் அ.தி.மு.க, தி.மு.க கழகங்களின் நிலைப்பாடாக உள்ளது. நீட் என்பதை நாம் விரும்புகிறோமோ.. இல்லையோ! உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசாங்கம் இந்த சட்டத்தை 2017ல் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி இந்தியா முழுவதும் பொதுவான ஒரு சட்டமாக அது நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும். அதை எதிர்த்து அ.தி.மு.க அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று வரை வழக்கு நடைபெற்று வருகிறது. அதிலிருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

அப்படியானால், நீட் தேர்வில் இருந்து மாணவர்களை காப்பது எப்படி என்றால், இரண்டு வழிகள் தான் உள்ளது. நீட், நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. அதனால் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதை திரும்பப்பெற வேண்டும். அப்படி இல்லையெனில் விருப்பப்பட்ட மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளலாம் எனும் சட்டத்திருத்தத்தை கொண்டு வரலாம். இது நாடாளுமன்றத்தால் தான் கொண்டுவரப்பட வேண்டும். மாநில அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை. அப்படியே நாடாளுமன்றத்தால் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தில் செல்லுபடியாக வேண்டும். இதை தவிர்த்து வேறு வழி இல்லை.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இது சாதாரண மனிதர்களுக்கும் தெரியும். இதைத்தான் எங்கள் ஆட்சியின்போது சட்டமன்றத்திலேயே கூறினேன். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 'உங்களிடம் மனம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களிடம் திட்டம் உள்ளது. நாங்கள் நிறைவேற்றுவோம்' என்று சொன்னார். திட்டத்தை கூறுங்கள் நாங்கள் செய்கிறோம் என்றோம். அதற்கு ஏதும் பேசாமல் அமர்ந்துவிட்டார். அதை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியிலும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட்டை விலக்கிவிடுவோம்' என்றும் சொன்னார். ஆனால் மாணவர்கள் மத்தியில் இன்று குழப்பத்தை ஏற்படுத்தி, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளார். இந்த குழு அளிக்கும் பரிந்துரை, உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரே செல்லுபடியாகும் அதிகாரம் இருக்கிறதா..? இதை இந்த அரசு விளக்க வேண்டும்.

மாணவர்களை ஏமாற்றும் வேலையை இந்த அரசு செய்து கொண்டுள்ளது. போட்டி தேர்வுகள் இல்லாமல் 2006 முதல் 2016 வரை தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வெறும் 74 தான். நீட் தேர்வு வந்தபின், 2018 முதல் 2020 வரை சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 9 தான். ஆகவே மாணவர்கள் நலனுக்காக எங்கள் ஆட்சியிலும் குழு ஒன்றை அமைத்து, அதன் பரிந்துரைப்படி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினோம். அதனால் அரசு பள்ளியில் படித்த 450 மாணவர்கள் வரை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். கெட்டதிலும் ஒரு நல்லது. நீட் வந்ததால்தான் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். எங்கள் அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. இந்த ஆண்டும் 550 மாணவர்கள் வரை இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

"கொலை  மிரட்டல்!" சசிகலா மற்றும் ஆதரவாளர்கள்மீது சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார்!
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

நீட் இருந்தால்தான் இந்த இட ஒதுக்கீடு சாத்தியம். இல்லை என்றால் 7.5 சதவீதமும் அடிபட்டுவிடும். இங்கு மோடி வந்தால் 'Go Back' என்று சொல்வதை விட, உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீங்கள் டெல்லி சென்று போராடி சட்டத்தை பெற்றுத் தந்தால் நல்லது. அதை விட்டுவிட்டு இருப்பதையும் கெடுக்கும் செயலை தான் இன்றைய தி.மு.க அரசு செய்து கொண்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை இந்த இட ஒதுக்கீட்டில் ஒன்றாக இணைத்தால், அரசு பள்ளி மாணவர்கள் ஒருவருக்கும் இடம் கிடைக்காது. பொய் சொல்லி, ஏமாற்றி தான் ஆட்சிக்கு வந்து விட்டீர்களே பின் ஏன் மாணவர்களை குழப்புகிறீர்கள். ஒழுங்காக ஆட்சியை நடத்த பாருங்க. மருத்துவர்களுக்கு ஒழுங்கா சம்பளம் கொடுப்பது இல்லை, மின்சாரம் இல்லை அதை எல்லாம் சரி செய்யுங்கள்" என்றார்.

விழுப்புரம்:`சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் அம்மா சிறைக்குப் போனாங்க!' - சி.வி.சண்முகம்

பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி.சண்முகம், "டிடிவி தினகரனை வைத்து பினாமி கட்சி ஒன்று ஆரம்பித்தார்களே சசிகலா, அந்த கட்சியையே அவர்களால் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இவங்க அ.தி.மு.க-வை கைப்பற்றி விடுவார்களா! அதிமுக தொண்டர்களை தவிர யாரையும் நம்பி இல்லை. சசிகலா, அம்மா வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர்கள். அம்மா இப்போது இல்லை. இவங்க வேலையும் முடிஞ்சு போச்சு அவ்வளவுதான். தணிக்கைத்துறை அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக கூறும் திமுக, அவர்களின் ஆட்சியின் போது கனிமொழி மற்றும் ராசா மீது இந்திய தணிக்கை துறை 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்து சிறை சென்றார்கள். கீழமை நீதிமன்றத்தில் இன்று விடுதலை பெற்றிருக்கலாம், ஆனால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு விசாரணையில் உள்ளது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அந்த இருவரையும் ஏன் கட்சியில் வைத்துள்ளீர்கள்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

மின்சாரத்துறை இன்று சிறப்பாக செயல்பட்டுள்ளது. எல்லா அணிலையும் பிடிச்சிட்டாங்க. யாரும் அச்சப்படத் தேவையில்லை. மின்சாரத்துறை அணில் அமைச்சர் இன்றும் பேட்டி கொடுத்துள்ளார். 'தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணி நடந்துவிட்டது. அணில்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டது. மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இனி வரும்' என்று கூறியுள்ளார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு