Published:Updated:

"அம்மா பெயர்தான் பிரச்சினை என்றால்.. அம்பேத்கர் பெயர் வைத்துவிடுங்கள்" - சீறிய சி.வி.சண்முகம்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

"அன்று போல இன்றும், திமுக ஆட்சியை எதிர்த்து முதல் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் தான் நடக்கிறது. உங்கள் ஆட்சிக்கு இங்கு தான் சங்கு ஊதியிருக்கிறோம்" - சி.வி.சண்முகம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதைத் தொடர்ந்து, இன்று (26.07.2021) விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தார் சி.வி.சண்முகம். அதன்படி இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், "விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகமுள்ள மாவட்டங்கள். முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பிய மாவட்டங்கள். கல்வியில் மிக மிக பின் தங்கிய மாவட்டங்கள். இங்கு கல்வியில் மேம்பாடு வேண்டும் என்றும், கல்லூரி வேண்டும் எனவும் கேட்டபோது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார். விழுப்புரத்தில் மகளிர் கல்லூரியைத் தொடங்கி வைத்ததும், சட்டக்கல்லூரியை 100 கோடியில் கட்டிக் கொடுத்ததும் அம்மாவின் அரசுதான். நீண்டகால கோரிக்கையின் பேரில் கொண்டு வரப்பட்டது தான் அம்மா பெயரிலான இந்தப் பல்கலைக்கழகம். முன்பு பொன்முடி அமைச்சராக இருந்தபோது இங்கு பல்கலைக்கழகத்தை கொண்டு வர முயற்சி செய்தார். இப்போது வேண்டுமானால் இல்லை என அவர் கூறலாம்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தே.சிலம்பரசன்
`பெயர் வைப்பதற்காக ஒரு பல்கலைக்கழகமா?’ - ஜெயலலிதா பல்கலை விவகாரத்தில் பொன்முடி காட்டம்

இந்த அம்மா பெயரிலான பல்கலைக்கழகத்திற்கு முன்னோட்டமாக, நமது ஆட்சி வந்தபோது 2011-ம் ஆண்டிலேயே உயர்கல்விக்கான PG சென்டரைக் கொண்டு வந்தோம். சிறப்பாகச் செயல்பட்டு கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் எல்லாம் திறந்து வைத்தோம். ஆனால், பல்கலைகழகம் தூங்குவதில் மட்டும் சிக்கல் இருந்தது. பல வருட போராட்டங்களுக்கு பிறகு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். 110 விதியின்கீழ், 'இங்கு பல்கலைக்கழகம் தொடங்கப்படும்' என்று சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார்.

இங்குள்ள ஏழை, எளிய மாணவர்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தை இன்று பொன்முடி 'மூடுவோம்' என்கிறார். காரணம் என்ன கூறுகிறார்... 'துணைவேந்தர் நியமித்து விட்டார்கள். ஓட்டுக் கட்டிடத்தில் துவங்கிவிட்டார்கள். வேறு ஏதும் செய்யவில்லை' என்கிறார். விழுப்புரத்தைப் பிரித்து கள்ளகுறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இப்போதுதான் கட்டுகிறார்கள். அதற்காக அது செல்லாது என சொல்லி விடுவாரா..? கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி கவர்னர் ஒப்புதல் தந்ததும், 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு, இந்தப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமித்து விட்டோம். அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர், பல்கலைக்கழகத்தை துவங்கி வைத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவித்துவிட்டதால் எங்கள் அரசால் ஏதும் செய்ய முடியாமல் போய்விட்டது. இப்போது ஆட்சியும் மாறிவிட்டது. நாங்கள் என்னமோ பல ஆண்டுகளாக ஏமாற்றி வருவதை போல இன்று பொன்முடி சொல்லிக் கொண்டு வருகிறார். கல்வி, சுகாதாரம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. நிதி நெருக்கடி எனக் கூறி அதை செயல்படுத்தாமல் இருப்பது வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு செய்யும் துரோகம். இந்த பல்கலைக் கழகத்தை தொடர்ந்து நடத்துவதில் பொன்முடிக்கு என்ன கஷ்டம். இங்கு பிறந்து, வளர்ந்து, கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்தானே இவர். கல்வியின் அருமை பெருமைகளை தெரிந்தவர் தானே..! பொன்முடிக்கு வாழ்வு தந்த விழுப்புரம் மக்களை... நன்றிகெட்ட பொன்முடி மறந்துவிட்டார்.

பெயர் சர்ச்சையால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குகிறதா தி.மு.க?! - என்ன நடக்கிறது?
சி.வி.சண்முகம், பொன்முடி
சி.வி.சண்முகம், பொன்முடி

இங்கு இருக்கும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எல்லோருக்கும் 4 - 10 சதவிகிதத்தில் கமிஷன். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் சொன்னார்... 'கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன்' என்று. இன்று அவர்கள் செய்யப் போவதை அன்றே அவர் கூறிவிட்டார். துட்டு..துட்டு..மணி... என்பதுதான் இன்றைய அரசு. இன்னும் வரும் காலங்களில் என்னென்ன செய்வார்களோ!. ஏழை மாணவர்களின் வயிற்றில் ஏன் அடிக்கிறீர்கள். ஒரு 3 கோடியை ஒதுக்கி இந்த பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு திராணி இல்லாத தி.மு.க-விற்கு, 200 கோடி ரூபாயில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு மட்டும் எங்கிருக்கிறது பணம். நூலகம் என்பது தேவைதான். அதை வரவேற்கிறோம். நிதி இல்லை என்று கூறி இந்த பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு... அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஏன் இணைக்க முயற்சி பண்ணுறீங்க. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்ற போவதாக கூறுகிறார் பொன்முடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மாவின் பெயரில் இந்த பல்கலைக்கழகம் இருப்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாணவர்கள் வாழ்வில் மண்ணை அள்ளி போடுகிறார்கள். தயவுசெய்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. அம்மாவின் பெயரில் இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சனை என்றால், சட்டமேதை அம்பேத்கர் பெயரை வச்சிட்டு போங்க. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. பொன்முடிக்கு இந்த விழுப்புரம் மீது என்ன வெறுப்பு என தெரியவில்லை. அவர் தனியார் கல்லூரி வைத்திருக்கிறார். எதிர்காலத்தில் அதை தனியார் பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சி எடுக்கலாம். அப்போது அரசு பல்கலைக்கழகம் இங்கு இருந்தால் அதற்கு பிரச்னையாக இருக்கும் என எண்ணி இருப்பார். அவர் எதையும் வியாபார நோக்கத்துடன் தானே செய்வார்.!

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

அன்று போல இன்றும் தி.மு.க ஆட்சியை எதிர்த்து முதல் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் தான் நடக்கிறது. உங்கள் ஆட்சிக்கு இங்குதான் சங்கு ஊதி இருக்கிறோம்" என்றார் காட்டமாக. ஜெ.ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை மீண்டும் செயல்படுத்தக்கோரி சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் செய்திருந்த மனு தாக்கல், இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரலாம் என அனுமானிக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு