விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்திருக்கிறது. பாலியல் தொல்லை இல்லை என்று பச்சை பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர். ஆனால், இன்றைக்கு நாள்தோறும் தமிழகத்தில் கொலைச் சம்பவம் நடக்கின்றன. குடும்பத்துடன் எல்லாம் கொலைசெய்யப்படுகிறார்கள். முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்துவந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், இந்த ஆட்சியில் எங்கும் நடக்கின்றன. கடந்த 26, 27-ம் தேதிகளில் முதலமைச்சர் விழுப்புரம் வந்தார்.

அப்போது, விழுப்புரம் நகரில் பிழைப்பு தேடிவந்து, தங்கியிருந்த ஒரு வட மாநில குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, தொடக்கப் பள்ளியில் படித்துவந்திருக்கிறார். அவர் நான்கு சிறுவர்களால் கூட்டு பாலில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றமும் செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பள்ளியின் ஆசிரியரே காவல் நிலையத்தில் புகாரளித்தும், போலீஸ் வழக்கு பதியவில்லை. ஏனெனில், அன்று ஸ்டாலின் விழுப்புரத்தில் இருக்கிறார். ஸ்டாலின் விழுப்புரத்தில் இருந்தால் வழக்கு பதிய மாட்டார்களா இந்தக் காவல்துறையினர்... இப்போது அந்த விஷயம் வெளிவந்த பிறகு, அந்தச் சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஏன் இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் இது முதலமைச்சரின் கவனத்துக்கு அன்றே போகவில்லை... இல்லை, அவர் கவனத்துக்கு வந்தும் `நான் இருக்கும்போது இதை வெளியிட வேண்டாம். நான் விழுப்புரம் விட்டுப்போன பிறகு செய்தியாக்கி நடவடிக்கை எடுங்கள்' என்று முதலமைச்சரே உத்தரவிட்டாரா... எனவே, ஸ்டாலின் ஆய்வின் லட்சணம் இதுதான். ஸ்டாலினுடைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கின்ற பி.டி.ஆர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதில், 'சபரீசனும், உதயநிதியும் ரூ.30,000 கோடிக்கும் மேலாக சொத்து சேர்த்துவைத்திருக்கிறார்கள். அவற்றை என்ன செய்வது, எதில் முதலீடு செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்று பேசியிருக்கிறார். மற்றவற்றுக்கெல்லாம் வீர வசனம் பேசுகின்ற ஸ்டாலின், இதற்கு ஏன் இதுவரை பேசவில்லை.

இன்றைய காவல்துறை தவறு செய்பவர்களைக் கைதுசெய்கிறதோ இல்லையோ... அரசை விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினரைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் அடைக்கிறது. அதில் ஆர்வம் காட்டுகின்ற மு.க.ஸ்டாலின், உங்களுடைய நிதியமைச்சர் பேசியதாக சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியானதே... அதற்கென்ன நடவடிக்கை.
அந்த ஆடியோ பொய் என்றால், அதை வெளியிட்டவர்கள்மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யவில்லையே. ஏன் பி.டி.ஆர் அதன்மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை. அப்படியென்றால் அதில் உண்மை இருக்கிறது. ஆகவே, மக்களின் வரிப்பணம் 30,000 கோடி ரூபாயை ஸ்டாலினுடைய குடும்பம் கொள்ளையடித்திருக்கிறது. இது ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடைபெறுவதில்லை.
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் இல்லை. தமிழக பட்ஜெட் மூலதன முதலீட்டிலிருந்து 30,000 கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். கர்நாடகாவில் 40 சதவிகிதம் கமிஷன் என்றால், இந்த அரசு 28 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறது. கீழே இருக்கிற ஆட்களை எல்லாம் சேர்த்தால் அது 40 சதவிகிதம் வந்துவிடும். இந்த சதவிகிதம் மட்டுமில்லாமல், மொத்த பட்ஜெட்டிலேயே 10 சதவிகிதம் இந்த அரசு கொள்ளையடிக்கிறது. கருணாநிதியை மிஞ்சியிருக்கிறார் ஸ்டாலின். இதுதான் அவர் செய்திருக்கிற சாதனை. இதற்குதான் பேனா நினைவுச்சின்னமா... எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இதன்மீது விசாரணை நடத்த வேண்டும். உண்மை மக்களுக்குத் தெரிய வேண்டும்.

இந்த தி.மு.க அரசு, மக்கள் விரோத அரசு. பொதுமக்களின் சொத்துகளையும், பணத்தையும் கொள்ளையடிப்பதையே ஒரே கொள்கையாக வைத்து, இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது என்பதில்லை, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது என்பதை முதலில் இருந்தே சொல்லிவருகிறோம்" என்றார்.
அவரிடம் கர்நாடக - தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னை குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், "அங்கு யார் இருந்தது, அவரிடம்தான் கேட்கணும்" என்றார்.

மேலும், "இந்த அரசு ஒரு கோமாளி அரசு. அதிகாரத் திமிரில், மக்களைப் பற்றி சிந்திக்காமல், மக்கள் நலனைப் பற்றி சிந்திக்காமல், கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு புதிய சட்டத்தை இயற்றுகிறார்கள். அதற்கு கடுமையான எதிர்ப்பு வந்த உடனே திரும்பப் பெற்றுக்கொள்வதாக நடிக்கிறார்கள். 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தை நிறுத்திய ஸ்டாலின் அரசு, திருமணம் ஆகும்போது மதுபானம் போதும்... தாலி கட்டுவதற்கு முன் கணவன் - மனைவி இருவரும் குடியுங்கள் என்பதுபோல தற்போது ஓர் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. தாலிக்கு பதில் பிராந்தியைக் கொடுத்திருக்கிறது இந்த அரசு. இதுதான் இந்த அரசின் சாதனை" என்றார் காட்டமாக.
இது தொடர்பான வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.