Published:Updated:

``பொன்முடிக்கு என்னைப் பற்றி பேச அருகதை கிடையாது!" - சி.வி.சண்முகம் ஆவேசம்

சி.வி.சண்முகம்

"இன்று தி.மு.க-வின் ஏவல் ஆளாகவும், அடியாட்கள் துறையாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை மாறியிருக்கிறது" - சி.வி.சண்முகம்

``பொன்முடிக்கு என்னைப் பற்றி பேச அருகதை கிடையாது!" - சி.வி.சண்முகம் ஆவேசம்

"இன்று தி.மு.க-வின் ஏவல் ஆளாகவும், அடியாட்கள் துறையாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை மாறியிருக்கிறது" - சி.வி.சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம்

விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. அதனுடைய பணி, ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு தண்டனை வாங்கித்தருவது. அப்படிப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, டி.ஜி.பி கந்தசாமி நியமிக்கப்பட்டதிலிருந்து அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல பொய்யான, புனையப்பட்ட வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக பதியப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் நீதிமன்றத்திலே பார்ப்போம். ஆனால், இந்த லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு விதமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. தி.மு.க-வின் அமைச்சர்கள் 13 பேர் மீது இதே லஞ்ச ஒழிப்புத்துறையால் பதியப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள், குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. 

மு.க.ஸ்டாலின், சி.வி.சண்முகம்
மு.க.ஸ்டாலின், சி.வி.சண்முகம்

இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து அந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முனைப்பை காட்டாமல், அந்த வழக்குகளை நீதிமன்றத்திலிருந்து தள்ளுபடி செய்வதற்கான முயற்சியினை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக தொழில்துறை அமைச்சர் மீதிருந்த வழக்கிலிருந்து... நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது. தி.மு.க-வின் அமைச்சர் எனும் ஒரே காரணத்திற்காக... தண்டனையை பெற்று தந்திருக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறையே, கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து அவரை விடுவிக்க காரணமாக செயல்பட்டிருக்கிறது. 

இது மட்டுமன்றி, மற்ற அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகளையும் நீர்த்துப் போகச் செய்வதற்கான வழியினை 'கூடுதல் விசாரணை' என்ற பெயரிலே சட்டத்திற்குப் புறம்பாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று தி.மு.க-வின் ஏவல் ஆளாகவும், அடியாட்கள் துறையாகவும் மாறியிருக்கிறது. ஆனால், இதே லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆணையர்... முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடக்கும்போது, முதலமைச்சரை கோட்டையிலே சந்திக்கிறார். அவரின் அறிவுரையை பெற்று அதன்படி செயல்படுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறையே நியாயமாக விசாரணையை மேற்கொள்ளுங்கள். 

சி.வி.சண்முகம், பொன்முடி
சி.வி.சண்முகம், பொன்முடி

அதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக இயங்கக்கூடாது. ஆளுங்கட்சிக்கு ஒரு அளவுகோல், எதிர்க்கட்சிக்கு ஒரு அளவுகோல் என்பதை விட்டுவிட்டு தன்னிச்சையாக செயல்பட வேண்டும். கட்சியின் தலைமையிலிருந்து வழிநடத்துபவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவியேற்றத்தைதான் வாரிசு அரசியல் என்கிறோம். அந்தக் கட்சியில் கருணாநிதிக்குப் பின்னர் ஆளே இல்லையா... அன்பழகன், வீராசாமி துரைமுருகன் போன்றோர் இல்லையா... அவர்களுக்கு அந்த தகுதி இல்லையா, திறமை இல்லையா..? மு.க.ஸ்டாலினுக்கு மட்டும்தான் திறமை உள்ளதா! மு.க.ஸ்டாலினுக்குப் பின்னர் தற்போது அவரது மகன் உதயநிதி வந்திருக்கிறார். இதைத்தான் வாரிசு அரசியல் என்கிறோம். 

பொன்முடி, ஒரு டம்மி பீசு ஆகிப்போச்சு. என்னைப் பத்தி பேசினால்தான் அவரை பொறுப்பில் வச்சிருப்பார்கள். இல்லையெனில் இருக்கும் பதவியையும் பிடிங்கிக்கிட்டு விட்டுடுவாங்க. அவரைப் பத்தி பேசினா நிறைய பேசலாம். என்னை பத்தி அவர் பேசினா... பேசிட்டு போகட்டும். ஒழிஞ்சு போராரு விடுங்க. தி.மு.க-வை போன்று, அ.தி.மு.க-வில் யாருக்கும் ராஜ பரம்பரை மாதிரி பட்டம் கட்டவில்லை. கருணாநிதி இருக்கும்போது ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் இருக்கும்போது உதயநிதிக்கும் இளவரசு பட்டம் கட்டியது போல அ.தி.மு.க-வில் யாருக்கும் கட்டவில்லை.

சி.வி.சண்முகம் - விழுப்புரம்
சி.வி.சண்முகம் - விழுப்புரம்

என் அப்பா இறக்கும்போது, நான் கிளை-யில் சாதாரண உறுப்பினர். பின், படிப்படியாக வளர்ந்து வந்துள்ளேன். நடிகைகளோடு சுற்றிக்கொண்டிருந்து, பின் கூட்டிவந்து எங்களை கோட்டையில் அமரவைக்கவில்லை. என்னைப் பற்றி பேசி பொன்முடிக்கு அருகதை, தகுதி கிடையாது" என்றார் ஆவேசமாக.