Published:Updated:

``உங்க அப்பாவே கடைசிவரை பதவி கொடுத்தாரா? இல்லையே..." - ஸ்டாலின், உதயநிதியை விளாசிய சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் - விழுப்புரம்

"தாத்தா, அவரின் பிள்ளை முதலமைச்சர். பேரன், இப்போது அமைச்சர்... வரும் 'தை' மாதத்தில் துணை முதலமைச்சர். முதல்வரின் தங்கை எம்.பி., இப்படி அந்தக் குடும்பமே தமிழகத்தை ஆண்டு கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது." - சி.வி.சண்முகம்.

``உங்க அப்பாவே கடைசிவரை பதவி கொடுத்தாரா? இல்லையே..." - ஸ்டாலின், உதயநிதியை விளாசிய சி.வி.சண்முகம்

"தாத்தா, அவரின் பிள்ளை முதலமைச்சர். பேரன், இப்போது அமைச்சர்... வரும் 'தை' மாதத்தில் துணை முதலமைச்சர். முதல்வரின் தங்கை எம்.பி., இப்படி அந்தக் குடும்பமே தமிழகத்தை ஆண்டு கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது." - சி.வி.சண்முகம்.

Published:Updated:
சி.வி.சண்முகம் - விழுப்புரம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டம், வல்லம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கலந்துகொள்வதாக இருந்தது. இதற்கிடையே, திமுக-வினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அதிமுக - திமுக-வினர் இடையே கடும் சலசலப்பு ஏற்பட்டது. 

பட்டாசு வெடித்த திமுக-வினர்
பட்டாசு வெடித்த திமுக-வினர்

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கட்சியினர், காவல்துறையைக் கண்டித்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு வந்த சி.வி.சண்முகம் தமது கட்சியினரைச் சமாதானப்படுத்தி கூட்டத்தை விலகினார். பிறகு ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "இந்த திமுக ஆட்சி வந்ததிலிருந்து, முதலமைச்சர் அறிவித்த ஏதாவது ஒரு திட்டமாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா... கடந்த 10 ஆண்டுகளாக அம்மா அறிவித்த திட்டங்கள்தான் இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா குடிநீர், மானிய விலை ஸ்கூட்டர் போன்ற பல திட்டங்கள் இன்றைய ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளன. 

கருணாநிதியின் ஆட்சியில் மக்களுக்கு கலர் டி.வி கொடுத்தார்கள். 2,000 கோடி ரூபாய்க்கு கலர் டி.வி-யைக் கொடுத்துவிட்டு, ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் கேபிள் இணைப்பு மூலம் 7,000 கோடி ரூபாய் சம்பாதித்த குடும்பம் கருணாநிதி குடும்பம். இன்று அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த அரசுக்கு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற துப்பில்லை. மூளையே இல்லாத ஒரு நிர்வாகத்தை இந்த அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. அரசு இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை. இன்று விவசாயிகளுக்கு 'உரம்' கிடைப்பதில்லை. அதற்கு அரசாங்கத்திடம் உரம் இல்லை என்பது அர்த்தமில்லை. மத்திய அரசு தமிழகத்துக்குச் சேரவேண்டிய உரங்களை ஒதுக்கிவிட்டது. 

அதிமுக-வினர் சாலைமறியல்
அதிமுக-வினர் சாலைமறியல்

ஆனால், அவை கூட்டுறவுக் கடைகளுக்கு அனுப்பப்படுவதாக கணக்கு எழுதப்பட்டு, தனியார் கடைகளுக்குப் போய்விட்டன. உதாரணத்துக்கு 300 ரூபாய் ஒரு மூட்டை என்றால், 500 ரூபாய் என விற்கிறார்கள். நேரடிக் கொள்ளை நடக்கிறது. தமிழகத்துக்கு ஒரு முதலமைச்சர் இல்லை..! 

ஸ்டாலின் ஒரு கைப்பாவை, ஒரு பொம்மை, ஒரு ரிமோட் கன்ட்ரோல், அவருக்கு எதுவுமே தெரியாது. கீ கொடுத்தால் மட்டும் ஆடுவார். இந்த அரசாங்கத்தை இயக்குவதே துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தாமரை இவர்கள்தான்.

இந்த அரசின் ஒரே நோக்கம் பணம்... பணம்... துட்டு மணி... மணி..! சபரீசனுக்கு எந்த இடமும் பளிச்சென்று தெரிந்திடக் கூடாது. உடனே, நாளை காலையில் 'ஜீ ஸ்கொயர்' என்று அங்கு போர்டு வந்துவிடும். இந்த நாட்டுக்காகவும், சமுதாயத்துக்காகவும், சமூகநீதிக்காகவும், கடுமையாக உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்த உதயநிதி, இன்று அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார். இதுவரை அவரின் அப்பா கிழித்தார், இப்போது இவர் கிழிக்க வந்திருக்கிறார். இது என்ன நாடு... தாத்தா, அவரின் பிள்ளை முதலமைச்சர். பேரன் இப்போது அமைச்சர், வரும் 'தை' மாதத்தில் துணை முதலமைச்சர். முதல்வரின் தங்கை எம்.பி. இப்படி அந்தக் குடும்பமே தமிழகத்தை ஆண்டு, கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது.  

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

மக்களை விடுங்கள், திமுக-வுக்கு உதயநிதி என்ன கிழித்திருக்கிறார் என்று அமைச்சர் பதவி... மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை யார் அவர்... இன்று தமிழகத்தின் அமைச்சர். வெட்கக்கேடு... மானக்கேடு... இதுதான் சுயமரியாதை இயக்கமா... திமுக-வின் சுயமரியாதை, உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. `உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்குத் தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் கேட்போம்’ என்கிறார் பொன்முடி.

உதயநிதி, கனிமொழி, துர்கா ஸ்டாலின் காலைக் கழுவுவது எங்களின் வேலை இல்லை. அதிமுக-வினர் சுயமரியாதையோடு இருப்போம். சாதாரணத் தொண்டனாக இருந்து இன்று அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. உங்க ஆட்சியில் இது முடியுமா... திராவிட மாடல் என்கிறார்களே... தைரியம் இருந்தால் உங்கள் கட்சியில் பொதுக்குழு கூட்டி தேர்ந்தெடு பார்ப்போம். உங்க அப்பாவே சாகும் வரை உனக்கு பதவி கொடுத்தாரா... இல்லையே. நாங்கள் 'அம்மா அரசு' என்று சொல்வதுபோல், உங்களால் 'கலைஞர் அரசு' எனச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா... டெபாசிட்கூட கிடைக்காது. 

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

கருணாநிதியையே பார்த்த கட்சி அதிமுக. ஸ்டாலின் அல்ல, உதயநிதியெல்லாம் எங்கள் கால் தூசுக்குக்கூட சரிவர மாட்டார். இப்போதானே வந்திருக்கிறார். வா ராஜா வா... இனிமேதானே உன் ஆட்டமெல்லாம் இருக்கிறது... இன்று, இங்கே நீங்கள் கோஷம் எழுப்புவதுபோல் எங்களுக்கும் செய்யத் தெரியாதா... அமைச்சர் மஸ்தான் என்ன கோட்டைக்கா போகிறார்... டீக்கடைகளில்தானே இருக்கிறார்... எனவே எங்களுக்கும் இதையெல்லாம் பண்ணத் தெரியும். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். 

சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள்
சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள்

பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா உள்ள போதைப்பொருள்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. எனவே, பொதுமக்களே உங்கள் குழந்தைகளைக் கண்காணியுங்கள். இல்லையேல், இந்த ஆட்சி முடிவதற்குள் இளைஞர் சமுதாயம் சீரழிந்துவிடும். இந்த அரசு, ஒரு கஞ்சா அரசு" என்றார் ஆவேசமாக. இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்துக்காக சி.வி.சண்முகத்தை வரவேற்க, சாலையோரமாக பேனர் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியிருந்தது.