Published:Updated:

``அதிமுக சின்னத்தை முடக்கிய கயவன் ஓ.பி.எஸ்; டம்மி சி.எம் ஸ்டாலின்" - சி.வி.சண்முகம் காட்டம்

சி.வி.சண்முகம்

"மகாராஷ்டிராவில் ஆட்சி போனதிலிருந்து, ஸ்டாலினுக்குத் தூக்கம் போச்சு. அதேபோல இங்கு ஒரு ஷிண்டே வரப்போகிறார்" - சி.வி.சண்முகம்

``அதிமுக சின்னத்தை முடக்கிய கயவன் ஓ.பி.எஸ்; டம்மி சி.எம் ஸ்டாலின்" - சி.வி.சண்முகம் காட்டம்

"மகாராஷ்டிராவில் ஆட்சி போனதிலிருந்து, ஸ்டாலினுக்குத் தூக்கம் போச்சு. அதேபோல இங்கு ஒரு ஷிண்டே வரப்போகிறார்" - சி.வி.சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம்

அதிமுக-வின் 51-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் நேற்று இரவு விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சி.வி.சண்முகம், "கருணாநிதியிடம் கணக்கு கேட்ட காரணத்துக்காக திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏனெனில், அவர்களுக்குக் கணக்கு கேட்டால் பிடிக்காது, வசூல் பண்ணுவது மட்டும்தான் தெரியும். தன் சொந்தக் கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியாத ஒரு கட்சியின் தலைவராக, முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். இப்போது புரிகிறதா... உங்களின் தந்தை, தான் சாகும்வரை ஏன் உங்களைக் கட்சியின் தலைவராக அறிவிக்கவில்லை என்று.

விழா மேடை - விழுப்புரம்
விழா மேடை - விழுப்புரம்
தே.சிலம்பரசன்

உன்னுடைய திறமை அவ்வளவுதான். அது உங்கள் அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது. "காலையில் எழுந்திருக்கும்போதே திமுக-வினரான நீங்கள் என்ன பண்ணுவீர்களோனு தெரியலை. எனக்குத் தூக்கமே வரலை. நாகரிகமாக நடந்துக்கோங்க" என்று திமுக பொதுக்குழுவில் சொல்கிறார் ஸ்டாலின். இதைத்தானே நாங்களும் மேடை போட்டுச் சொன்னோம்... 'இந்த முதலமைச்சருக்கு நிர்வாகம் தெரியவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' என்றுதானே சொன்னோம்... அதையேதான் உங்களின் ஸ்டாலினும் சொல்கிறார். "என்ன நடக்குதுன்னே தெரியலை. யாருமே மதிக்க மாட்டேங்கிறீர்கள்" என்கிறார். நாங்கள் மேடை போட்டுப் பேசினால் காவல்துறை எங்கள்மீது வழக்கு போடுகிறது. அதையே பொதுக்குழுவில் சொன்ன ஸ்டாலின் மீது என்ன வழக்கு போடப்போகிறீர்கள்... தமிழக டி.ஜி.பி-க்கு தைரியம் இருக்கிறதா..?

இங்கே இருக்கும் காவல்துறை அதிகாரி, என்னைக் கைதுசெய்துவிட்டுத்தான் தூங்குவாராம். உன் தூக்கத்தை நான் ஏன் கெடுக்க வேண்டும், கைது பண்ணிக்கோங்க. அதற்காக அஞ்சுபவன் அதிமுக-காரனும் அல்ல, இந்த சண்முகமும் அல்ல. 

இன்று கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சிமென்ட் கம்பெனி நடத்துவது எல்லாமே ஸ்டாலினின் பினாமிகள், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மு.க.ஸ்டாலின் - சி.வி.சண்முகம்
மு.க.ஸ்டாலின் - சி.வி.சண்முகம்

இன்றைய ஆட்சியில், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உயிர்காக்கும் மருந்துகள்கூட இல்லை. ஸ்டாலின் சொல்கிறாரே, "மத்தளத்துக்கு இரண்டு பக்கங்கள்" என்கிற வேலையைப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு, மருந்துகளை கொள்முதல் செய்து தருவதற்குக்கூட முடியாததற்கு ஏன் ஒரு சுகாதாரத்துறை அமைச்சர்... பொதுவாக, மருத்துவக் கழகத்தின் மூலமாகத்தான் மருந்துகளைக் கொள்முதல் செய்ய வேண்டும். அந்தக் கழகத்தைக் கலைத்துவிட்டால் தனியார் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். 'காலாவதியான மருந்துகளை சப்ளை செய்வது சபரீசன்தான்' என்று முன்பு சட்டமன்றத்தில் ஒருமுறை குற்றச்சாட்டு வைத்தார் சேகர் பாபு. அதை இதோடு ஒப்பிட்டால், ஒட்டுமொத்த மருந்துப்பொருள்களையும் இந்தக் குடும்பமே கொள்முதல் செய்யப்போகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

மேடையில் சி.வி.சண்முகம் - விழுப்புரம்
மேடையில் சி.வி.சண்முகம் - விழுப்புரம்

எடப்பாடியார் சொல்வதுபோல, இன்று தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர். டம்மி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொள்ளையடித்த பணத்தை சினிமாதுறையில் முதலீடு செய்து வெள்ளையாக்கும் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்திலுள்ள நிலங்களையெல்லாம் ரியல் எஸ்டேட் என்று வளைத்துக்கொண்டிருக்கும் சபரீசன் மூன்றாவது முதலமைச்சர். இவர்களைக் கட்டுப்படுத்தும் சூப்பர் முதலமைச்சர் அவரது துணைவியார். இதைவிட வெளியில் தெரியாத முதலமைச்சர்கள்... குறிப்பிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். நிர்வாகம் தெரியாத பொம்மை முதலமைச்சரைவைத்து பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருப்பது அந்த அதிகாரிகள்தான்.

ஸ்டாலின் மாய உலகத்திலே இருக்கிறார். அவரை அவரே சொல்லிக்கொள்கிறார், 'இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர், என்று. ஆமாம், திறமையற்ற முதல்வரில் முதலிடம். நவீன முறையில் கொள்ளையடிப்பதில் இவர்களைப்போல யாரும் இல்லை. இன்று திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக, எம்.பி நிலைக்குழுவின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவராக 2ஜி புகழ் அம்மா கனிமொழியைப் போட்டிருக்கிறார்கள். 'பாப்பா கனிமொழி' என்றால் கோச்சிப்பாங்க, அதனால் 'அம்மா கனிமொழி'. அதேபோல 'பிஜேபி-யை தமிழகத்தில் நுழையவிட மாட்டோம்' என்று பேசுபவர்கள், டெல்லியிலே காவி உடையை போட்டுக்கொள்கிறார்கள்.

மோடி, ஸ்டாலின், கனிமொழி
மோடி, ஸ்டாலின், கனிமொழி

இங்கே எதிர்ப்பதுபோல நடித்து... டெல்லியில், மறைமுகமாக உறவு வைத்துக்கொண்டிருக்கும் திமுக, இன்றைக்கு கனிமொழிக்குப் பதவி வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதிமுக ஆட்சியில், மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்ததாக வரலாறே கிடையாது. நீட் தேர்வு குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்திலேயே பட்டியலிடப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என்றால், மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் அந்த வழக்கை இந்த அரசு அன்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால், "நீட்தேர்வு வழக்கை விசாரிக்க வேண்டாம். தேதி தள்ளி வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கையெழுத்து போட்டு வழக்கறிஞருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஓராயிரம் ஓ.பி.எஸ் வந்தாலும் அதிமுக-வை ஏதும் பண்ண முடியாது. டீக்கடை வைத்திருந்தவரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியது அதிமுக. ஓ.பி.எஸ்., அம்மாவின் அமைச்சரவையில் அமைச்சராக ஆவதற்கு 55 ஆண்டுகளாகின. ஆனால், நான் 34 வயதிலேயே அமைச்சராகப் பதவியேற்றவன். இன்று 234 தொகுதிகளிலும் கூட்டத்தை நாங்கள் நடத்தியிருக்கிறோம். உனக்கு தைரியம் இருந்தால், திராணி இருந்தால் ஒரு கூட்டத்தை நடத்திக்காட்டு பார்ப்போம். உங்களுக்கு ஏது தொண்டர், வேணுமென்றால் திமுக தொண்டர்கள்தான் வருவார்கள். ஏனெனில், திமுக-வின் கீ தானே இவர். இவருக்கு எம்.எல்.ஏ., மந்திரி, முதலமைச்சர் பதவியை வழங்கியது திறமையைப் பார்த்து கொடுத்தார்களா... யார் கொடுத்தது... டி.டி.வி.தினகரன். தனக்குக் கைக்கடக்கமான ஒருவர் வேண்டும் என்பதற்காக, சசிகலாவிடம் சொல்லி முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டவர்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இன்று அம்மா, எம்.ஜி.ஆர் என்று நடிக்கிறாரே ஓபிஎஸ்... நடிகர் சிவாஜி இருந்திருந்தால் தூக்குப்போட்டு இறந்திருப்பார். அம்மா படத்துக்கு செருப்பு மாலை அறிவித்தவர் இந்த ஓ.பி.எஸ். ஆனால் இன்று நடிக்கிறார். முதலமைச்சர் பதவி இல்லை என்றதும், முதலமைச்சராக்கிய சசிகலா மீது கொலை வழக்கைச் சுமத்தியது இந்த ஓ.பி.எஸ்-தான். 2017-ல் ஒன்றாக இணைந்தபோது, இந்தக் குடும்பம் கட்சியில் இணையக் கூடாது என கட்டளையிட்டது ஓ.பி.எஸ். ஆனால், இன்றைக்கு சசிகலா நல்லவர், உத்தமி... அன்றைக்கு அவர் கொலைகாரி..!

அதிமுக சின்னத்தை முடக்கிய கயவன், நம்பிக்கை துரோகி இந்த ஓ.பி.எஸ். இதுவரை அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தவர்கள் நன்றாக இருந்ததாகச் சரித்திரமே இல்லை. விழுப்புரத்தில் ஓர் அமைச்சர் 'ஓசி... ஓசி...' என்கிறார். அவர் செத்த பாம்பு. அவரைக் கட்சியில் டம்மி பீஸாகத்தான் வைத்திருக்கிறார்கள். அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு இன்று மரியாதையே இல்லை. கொள்ளையடித்து கொடுப்பவர்கள்தான் திமுக-வில் ஆட்சி அதிகாரத்தைச் செலுத்த முடியும். பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதிலிருந்து... 'எப்போது தன் நாற்காலி போகுமோ' என்ற பயம் ஸ்டாலினை வாட்டி வதைக்கிறது. அதனால்தான் 'தூக்கம் வரலை' என்கிறார்.

``அதிமுக சின்னத்தை முடக்கிய கயவன் ஓ.பி.எஸ்; டம்மி சி.எம் ஸ்டாலின்" - சி.வி.சண்முகம் காட்டம்

மகாராஷ்டிராவில் ஆட்சி போனதிலிருந்து, ஸ்டாலினுக்குத் தூக்கம் போச்சு. அதேபோல இங்கு ஒரு ஷிண்டே வரப்போகிறார். அதனால், நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த பாடி தாங்குமா... தாங்காதா என எனக்குத் தெரியவில்லை. எனவே மக்களுக்கு விரைவில் நல்ல காலம் வரும்" என்றார் ஆவேசமாக.