Published:Updated:

`ஜம்மு-காஷ்மீர் விஷயங்கள் தவறாகப் போகின்றன'- தலைவர் பதவியில் மீண்டும் சோனியா காந்தி!

மலையரசு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம்

சோனியா காந்தி
சோனியா காந்தி

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடுத்து தனது தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார் ராகுல் காந்தி. ஆனால், அவரின் ராஜினாமாவை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. இருந்தும் தன்தலைமையில் சந்தித்த முதல் தேர்தலிலே படுதோல்வி அடைந்ததால் ராஜினாமா நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகாமலிருந்தார். அவரை சமாதானப்படுத்த பல முயற்சிகள் நடந்தன.

சோனியா காந்தி
சோனியா காந்தி

அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். எதற்கும் அசையாத ராகுல், தான் ராஜினாமா செய்துவிட்டதாகவும் காங்கிரஸுக்குத் தேவையான இளம் மற்றும் திறமையான தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள் என்றும், தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூறிவிட்டார்.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், காங்கிரஸின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை நடந்துவந்தது. கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ``புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வில் நானும் ராகுலும் கலந்துகொள்வது சரியாக இருக்காது. காங்கிரஸ் தலைவர் தேர்வில் தங்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது” என சோனியா காந்தி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர் காரிய கமிட்டி நிர்வாகிகள். அதன்படி, சோனியா காந்தியே இடைக்கால காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். இதனை உறுதிப்படுத்திய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் ``புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை சோனியாவே இடைக்கால தலைவராக செயல்படுவார்'' எனக் கூறினார்.

கடந்த 1998ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை என 19 ஆண்டுகள் காங்கிரஸின் தலைவர் பதவியை வகித்த பெருமைக்குரியவர் சோனியா. 2017-ல் உடல்நிலையை கருத்தில் கொண்டு தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக தலைவர் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணித்துளிகள் முன் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ``அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கு மத்தியில் செயற்குழுவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

ஜம்மு-காஷ்மீரில் விஷயங்கள் மிகவும் தவறாகப் போகின்றன என்று சில தகவல்கள் வந்துள்ளன. எனவே நாங்கள் தலைவர் தேர்வை ஒத்திவைத்துவிட்டு ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதம் செய்தோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் தெளிவுபடுத்துவது முக்கியம்" எனக் கூறினார்.