Published:Updated:

12 மணிநேர விவாதம்... முடிவுக்கு வந்த 77 நாள் சர்ச்சை... காங்கிரஸ் கூட்டத்தில் என்ன நடந்தது?

மலையரசு

இந்த முடிவை ஒட்டுமொத்த காரிய கமிட்டி உறுப்பினர்களும் ஒருமனதாக எடுத்துள்ளனர். இரண்டு ரவுண்டுகளாக சுமார் 12 மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

ராகுலின் ராஜினாமாவை அடுத்து அவரின் தாய் சோனியாவே காங்கிரஸின் தலைவர் என்ற சிம்மாசனத்தில் (இடைக்காலம்) அமரவுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ராகுல் இந்தப் பதவியில் இருந்தாலும் அவர் தலைமையில் சந்தித்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பதவி விலகும் முடிவுக்கு வந்தார். ஆனால், அதைக் கட்சி நிர்வாகிகள் ஏற்க மறுத்தாலும் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

காரிய கமிட்டி கூட்டம்
காரிய கமிட்டி கூட்டம்

இதனால் நேற்று காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு சோனியா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 77 நாள் (ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்த நாளிலிருந்து) சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவை ஒட்டுமொத்த காரிய கமிட்டி உறுப்பினர்களும் ஒருமனதாக எடுத்துள்ளனர். இரண்டு ரவுண்டுகளாக சுமார் 12 மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

12 மணி நேரத்தில் கூட்டத்தில் என்ன நடந்தது?

காலை 11 மணி - கூட்டம் கூடியவுடன் ராகுல் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என சீனியர் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், தன் முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ராகுல்.

சோனியா காந்தி-ராகுல் காந்தி
சோனியா காந்தி-ராகுல் காந்தி

மதியம் 12.30 மணி - நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், மாநிலங்கள் வாரியாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். காரிய கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்து, காங்கிரஸின் அடுத்த தலைவர் பற்றிய கருத்தைக் கேட்டனர். முன்னதாக இந்த 5 குழுக்களும் தனித்தனியாகக் கூடி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. கட்சியின் பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், சட்டசபைத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் இந்தக் குழுக்கள் ஆலோசனை நடத்தின. இதில் டெல்லியில் இருந்தவர்களிடம் நேரிலும், இல்லாதவர்களிடம் தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் பெறப்பட்டன.

இதையடுத்து, அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பாதியில் வெளியேறினர். ``புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வில் நாங்கள் கலந்துகொள்வது சரியாக இருக்காது. காங்கிரஸ் தலைவர் தேர்வில் தங்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது'' எனக் கூறி இருவரும் வெளியேறியதாகக் கூறப்பட்டது.

பிற்பகல் 2 மணி - மாநிலத் தலைவர்களுடன் நடந்த ஆலோசனையில் பலரும் ராகுல் ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சிலர் ராகுலுக்குப் பதிலாக பிரியங்கா காந்தி வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். அனைத்துத் தரப்பு விளக்கம் பெற்றவுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

இரவு 8 மணி - இரண்டாவது ரவுண்டாகக் கூட்டம் மீண்டும் தொடங்கியதும் சோனியா, பிரியங்கா, மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் மீண்டும் பங்கேற்றனர். ஆனால், இதில் ராகுல் பங்கேற்கவில்லை.

இரவு 9 மணி - நிர்வாகிகளின் அழைப்பின்படி ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்துகொண்டார். 45 நிமிடம் வரை விவாதத்தில் பங்குபெற்றார்.

இரவு 10 மணி - விவாதத்தை முடித்துக்கொண்டு கிளம்பும்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், ``அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கு மத்தியில் செயற்குழுவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது ஜம்மு-காஷ்மீர் பிரச்னைகள் தொடர்பாக நிறைய தவறான தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனால் தலைவர் தேர்வை ஒத்திவைத்துவிட்டு ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதம் செய்தோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் தெளிவுபடுத்துவது முக்கியம்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இரவு 10.30 மணி - ராகுல் கிளம்பியதும் வெளியில் வந்த குலாம் நபி ஆசாத், ``சோனியா காந்தியை, கட்சியின் தலைவராகத் தேர்வு செய்துள்ளோம்'' என ஒற்றை வரியில் தகவல் சொன்னார்.

இரவு 11 மணி - குலாம் நபி ஆசாத்தின் தகவலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உறுதிப்படுத்தினார். `புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில், சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகச் செயல்படுவார்' என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.