Published:Updated:

`30 ஆண்டு போராட்டத்தை திசைதிருப்பிய ஒரே ஒரு திருத்தம்’ -காவிரி விவகாரத்தில் கொந்தளிக்கும் கட்சிகள்

காவிரி
காவிரி

மத்திய அரசு, காவிரி ஆணையத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது, தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல, கோதாவரி ஆற்று மேலாண்மை வாரியம், கிருஷ்ணா ஆற்று மேலாண்மை வாரியம் மற்றும் தேசிய நீர் தகவல் மையம் உள்ளிட்டவைகளும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்திருப்பது, தமிழகத்தின் ஜீவாதார உரிமையைப் பறிக்கும் செயல் எனவும், முதலமைச்சர் உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மத்திய அரசு அறிக்கை
மத்திய அரசு அறிக்கை

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் தனது அறிக்கையில், `மத்திய அரசு, காவிரி ஆணையத்தை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பது அநீதியானது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அ.தி.மு.க அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்துவைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டி.எம்.சி நீரை கோட்டைவிட்டது. காவிரி நடுவர் மன்றம் தந்த “காவிரி மேலாண்மை வாரியத்தையும்” கை நழுவவிட்டது.

தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நடத்திய 'காவிரி உரிமை மீட்புப் பயணத்தின்' காரணமாகவும், உச்ச நீதிமன்றத்தில் எழுந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சமாளிக்கவும், 'காவிரி வரைவுத் திட்டத்தை' அறிவித்தது மத்திய பா.ஜ.க அரசு. காவிரி வரைவுத் திட்டத்தின் அடிப்படையில், 'காவிரி மேலாண்மை வாரியம்'அமைக்காமல், 'காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்' அமைக்க அ.தி.மு.க அரசு, மத்திய பா.ஜ.க அரசுக்கு மனமுவந்து ஒப்புதல் கொடுத்தது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் முழு நேரத் தலைவரை நியமிக்காமல், மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறையின் செயலாளரையே 'பொறுப்புத் தலைவராக' நியமித்து, இன்றுவரை மத்திய பா.ஜ.க அரசு இந்த அமைப்பையே முற்றிலும் முடக்கிவிட்டது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

மேகதாது அணை கட்டும் திட்டத்தைத் தடுக்கவோ, தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவோ, தமிழ்நாட்டின் நீர் உரிமையை நிலைநாட்டவோ இந்த ஆணையமும், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் எதுவுமே செய்யவில்லை. தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டது. தமிழகக் காவிரி நதிநீர் உரிமையை ஒவ்வொரு கட்டமாக விட்டுக்கொடுத்து - நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றின் பயன்களைத் தமிழக விவசாயிகள் அனுபவிக்க விடாமல் செய்த குற்றத்தை அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது.

இது போதாது என்று, இப்போது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையே மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து, அது தன்னாட்சி அமைப்பு அல்ல... மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட கைகட்டி நிற்கும் அமைப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தட்டிப்பறிக்கும் செயல். வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். ஆகவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பிறப்பிக்கப்பட்டுள்ள 24.4.2020-ம் தேதியிட்ட அரசிதழை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால், மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும். முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்துள்ள முடிவைக் கைவிட வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் பறிக்கும் விதமாக இந்திய நீர்வளத்துறை திருத்த விதிகள் என்ற பெயரில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய நதிநீர் கட்டுப்பாட்டு விதிகள், முப்பதாண்டு காலம் தமிழகம் போராடியதன் விளைவாகக் கிடைத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்னும் உரிமையை, ஒரே ஒரு திருத்தத்தின் மூலம் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் கொண்டுசெல்ல முனைந்துள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

சீமான்
சீமான்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கேற்ப, தன்னாட்சி அமைப்பாக சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், பகுதி அளவே சுதந்திரமாகச் செயல்படக்கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது ஆளும் பா.ஜ.க அரசு. இது, காவிரி நதிநீர் உரிமையில் மத்திய அரசுகள் தமிழகத்திற்கு இழைத்த துரோகங்களின் தொடர்ச்சியாகும். தற்போது, அந்தத் துரோக வரலாற்றின் நீட்சியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் மீதமுள்ள தன்னாட்சித் தன்மையையும் தகர்த்து மத்திய அரசு தன்வயப்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து தன்வயப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசு, அதற்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கக்கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு