Published:Updated:

நிவர்: `2015 வெள்ளத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை'- ஸ்டாலினின் குற்றச்சாட்டு சரிதானா?

``2015 பெருவெள்ளத்தின்போது அ.தி.மு.க அரசின் தோல்விகள் பற்றித் தனியாக சி.ஏ.ஜி ஓர் அறிக்கையே கொடுத்தது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட குறைகளை - எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை, இன்றளவும் அ.தி.மு.க அரசு கடைப்பிடிக்கவில்லை'' என்கிறார் ஸ்டாலின

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``2015 பெருவெள்ளத்திலிருந்து அ.தி.மு.க அரசு தேவையான பாடம் கற்றுக்கொள்ளவில்லை'' என அதிரடியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.கஸ்டாலின். மேலும், அவர்,``புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி ரொக்க நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கிட வேண்டும்'' என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த இரண்டு நாள்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை மையம்கொண்டிருந்த நிவர் புயல், ஒருவழியாகக் கரையைக் கடந்து, தற்போது முழுவதுமாக வலுவிழந்துவிட்டது. தமிழக அரசின் சார்பில் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் களத்தில் இறங்கி அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதையும் நாம் தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம். சென்னை மட்டுமல்லாமல், கடலூருக்கும் நேரில் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம், ``நிவர் புயல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் ஓரளவுக்கு திருப்தியாகத்தான் இருக்கின்றன'' என்கிற ஒருசில குரல்களைக் கேட்க முடிகிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது ஒருபுறமிருக்க, சென்னையில் வேளச்சேரி, பீர்க்கன்காரணை உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கிய நிலையிலே இருக்கிறது. மின் விநியோகமும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மக்கள், தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பதையும் பார்க்க முடிகிறது. தவிர, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், நீரில் நெற்கதிர்கள் மூழ்கி சேதமாகியிருப்பதையும் பார்க்கிறோம். இந்தநிலையில்தான், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கடுமையான குற்றச்சாட்டுகளை இந்த அரசின் மீது முன்வைத்திருக்கிறார்.

``நிவர் புயலால் மழை பாதிப்புக்குள்ளான கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளை நேற்றும், ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை இன்றும் என 11 சட்டமன்றத் தொகுதிகளில், உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கி, இரு தினங்களாக மக்களைச் சந்தித்திருக்கிறேன். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கும்போது, கடந்தகால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்திலிருந்து எவ்வித பாடத்தையும் அ.தி.மு.க அரசு கற்றுக்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் ஒரே குரலில் சொன்னதையும் கேட்க முடிந்தது.
மு.க.ஸ்டாலின், தலைவர், தி.மு.க
இந்த விவகாரம் குறித்து இரண்டு தரப்பிலும் கேட்டோம்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (தி.மு.க)

``நன்றாகப் படிக்கும் ஒரு குழந்தை தேர்வில் முப்பத்தைந்து மதிப்பெண் எடுத்து பாஸாகிவிட்டான் என்பதைக் கொண்டாட முடியாது. அதேபோல்தான், அரசாங்கம் செயல்படவே இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. போதுமான அளவில் செயல்படவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு. நமக்கு கஜா, தானே, 2015 வெள்ளம் எனப் பல படிப்பினைகள் இருக்கின்றன. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் சுட்டிக்காட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டிய விஷயங்களை இந்த அரசு சரி செய்திருக்கிறதா என்பதே எங்கள் கேள்வி. அப்படிச் செய்திருந்தால், அது குறித்த ஓர் அறிக்கையை இந்த அரசு வெளியிடுமா?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்னும் மின் விநியோகம் இல்லை. நீர்நிலைகளைத் தூர்வாரியது ஒருசில இடங்களில் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. ஆனாலும், கடந்த வெள்ளத்தின்போது நின்ற அளவு தண்ணீரே இன்னும் பல இடங்களில் நிற்கிறது. 2015 வெள்ளத்தின்போது மக்கள் பட்ட அதே துயரத்தைத்தான் தற்போதும் அனுபவிக்கிறார்கள்.2011-ம் ஆண்டு, கிரேட்டர் சென்னையாக மாற்றம் செய்யப்பட்டபோது, புதிதாகச் சேர்த்த 50 வார்டுகளில், இன்னும் மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை பணிகள் முழுமையடையவில்லை. அமைக்கப்பட்ட கால்வாய்களும் எளிதாகப் பாதிக்கப்படும் அளவில்தான் இருக்கின்றன. அதைத்தான் எங்கள் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாங்கள் நிச்சயமாகச் சொல்வோம், இந்த அரசு போதுமான அளவில் செயல்படவில்லை என்பதே உண்மை'' என்கிறார் ஆணித்தரமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை செல்வராஜ் (அ.தி.மு.க)

''நிவர் புயலில் சேதாரம் குறைவாக இருப்பதும், மக்கள் பாதுகாக்கப்பட்டதும் இந்த அரசு எடுத்த சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்தான்.

24 மணி நேரமும் அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து பல சிறப்பான பணிகளை முன்னெடுத்துவருகிறார் முதல்வர். செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பேரிடர் முகாம்களுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகிறார். கடலூருக்குச் சென்றிருக்கிறார். தொடர்ச்சியாக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார். அவர் மட்டுமல்ல, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்து களத்திலும் அதிகாரிகளுடன் தொடர்பிலும் இருக்கின்றனர். அதிகாரிகள் பலரும் மூன்று நாள்களாக வீடுகளுக்கே செல்லாமல் பணியாற்றிவருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்கள் மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் இந்த அரசு சிறப்பான பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அதனால்தான், சென்னையின் பெரும்பாலான இடங்களில் இந்தமுறை தண்ணீர் தேங்கவில்லை. உதாரணமாக, கொசஸ்தலை ஆறு பயணிக்கும், விருகம்பாக்கம், ராயபுரம், வில்லிவாக்கம், வடபழனி, எண்ணூர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் தூர்வாரப்பட்டு, தடுப்பணைகள் கட்டப்பட்டு, ஆண்டுக்கு ஒரு டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்பட்டு குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக தமிழக அரசு, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கி, செலவு செய்திருக்கிறது. தவிர, அடையாறு முதல் கோவளம் வரை தண்ணீர், குடியிருப்புப் பகுதிக்குள் வருவதைத் தடுத்து, சரியாகக் கடலுக்குச் செல்லும் வகையில் சென்னை மாநகராட்சியின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

அம்பத்தூர் உட்பட சென்னை மாநகராட்சியுடன் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பகுதிகளில், கழிவுநீர் வாய்க்கால்கள் சரியான வகையில் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால்தான், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் செல்லவில்லை. பல பகுதிகளிலிருந்து வரும் தண்ணீரைச் சேமிக்க, பெருங்குடியில் 20 கோடி ரூபாய் செலவில் குளம் தூர்வாரப்பட்டது. தற்போது அந்தக் குளம் நிரம்பியிருக்கிறது. தி.நகரில் முன்புபோல் தண்ணீர் தேங்காமல் உடனடியாக இந்தமுறை நீர் வடியக் காரணம், இந்த அரசு கட்டிய வாய்க்கால்தான். இவ்வளவு பல நடவடிக்கைகள் எடுத்தும் அரசு எதுவும் செய்யவில்லை எனச் சொல்வது, `தேர்தல் வருகிறது; இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது’ என்கிற ஒரே காரணத்தால்தான்.

தஞ்சை : கஜா டு நிவர் புயல்... பாதிப்பிலிருந்து தப்பிய டெல்டா - நிம்மதியில் மக்கள்!
சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையிலும் - மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையிலும் வெள்ளத் தடுப்புக்காக - மழைநீர்க் கால்வாய்களுக்காக - மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் `ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களுக்காக ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி என எதிலும் `கமிஷன்’ அடிப்பது எப்படி என்பதில் மட்டுமே உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கவனம் செலுத்தினாரே தவிர, சென்னை மாநகரத்தைப் பற்றி அவர் துளிகூடக் கவலைப்படவில்லை. அதை முதலமைச்சர் பழனிசாமியும் எப்போதும்போல் கண்டுகொள்ளவில்லை.
மு.க.ஸ்டாலின், தலைவர், தி.மு.க

எதிர்க்கட்சித் தலைவர், மேயராக இருந்து பணியாற்றியவர். பட்ஜெட் விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், உள்ளாட்சித்துறை அமைச்சர் மீது பொத்தாம் பொதுவாக குற்றம்சுமத்துகிறார். எந்தத் துறையில், எந்தப் பணியில், எந்த இடத்தில், எவ்வளவு ஊழல் என அவர் குறிப்பிட்டு ஆதாரத்தோடு சொன்னால், அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்'' என்றார் அவர்.

சுப.உதயகுமார்
சுப.உதயகுமார்

நிவர் புயலில், தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி, ஸ்டாலினின் குற்றச்சாட்டு சரிதானா?

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர், முனைவர் சுப.உதயக்குமாரிடம் பேசினோம்,

``2015 வெள்ளத்துடன் ஒப்பிடும்போது, இந்தமுறை தமிழக அரசு சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. முதல்வரும் நேரடியாகக் களத்துக்குச் சென்றிருக்கிறார். தொடர்ந்து கண்காணித்தும் வருகிறார்கள். தற்போது அரசைக் குற்றம்சாட்டும் ஸ்டாலின், மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதே பல பணிகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அவரும் அதைச் செய்யவில்லை.

தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே வளர்ச்சி என்கிற பெயரில் பல சீரழிவுகளைச் செய்திருக்கின்றன. அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் நீர் செல்லும் பாதைகளை அழித்திருக்கின்றனர். தமிழ் நிலம் சார்ந்த, சூழலியல் சார்ந்த சிந்தனைகள் இல்லாமல் ஐரோப்பிய பாணி அரசியலைக் காப்பியடித்திருக்கின்றனர். குளத்துக்கு மேலே பஸ் ஸ்டான்ட் கட்டுவது, மேம்பாலம் கட்டுவது எனப் பல குளறுபடிகளைச் செய்திருக்கின்றனர். காமராஜர் காலத்திலேயே அது தொடங்கிவிட்டாலும், அப்போது நீர் மேலாண்மை ஓரளவுக்குச் சரியாக இருந்தது. ஆனால் தற்போது, முன்னேற்றம் என்கிற பெயரில் அவர்களையும், அவர்களுக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்களையும் மட்டுமே முன்னேற்றிக்கொண்டனர். அவர்கள் இயற்கையைப் பற்றியெல்லாம் கவலையேபடுவதில்லை. அதனால்தான், எவ்வளவு நடவடிக்கைகளை எடுத்தாலும் நம்மால் சில அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடிவதில்லை'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு