இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தலாய் லாமாவிடம் ஆசீர்வாதம் பெற அவர் இருக்கும் மேடைக்குச் செல்கிறார். அப்போது தலாய் லாமா, சிறுவனின் உதட்டில் விளையாட்டாக முத்தமிடுகிறார். அதைத் தொடர்ந்து, சிறுவன் அங்கிருந்து புறப்பட நகரும்போது, அவன் கையைப் பிடித்துக்கொண்டு... அவரின் நாக்கை நீட்டி அதில் முத்தமிடச் சொல்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில், தலாய் லாமா இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், "சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சிறுவன், அவனின் குடும்பம் மட்டுமின்றி உலக நண்பர்கள், சகோதரர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். என்னுடைய செயல் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொது இடங்கள், கேமராக்கள் முன்பும், நான் சந்திக்கும் மக்களை விளையாட்டுத்தனமான முறையில் அடிக்கடி கிண்டல் செய்வதுபோல, இப்போதும் இது நடந்துவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.