காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் சத்தீஸ்கரில், பெனேதரா மாவட்டத்தின் பிரான்பூர் கிராமத்தில் கடந்த 8-ம் தேதியன்று பள்ளிக் குழந்தைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட வகுப்புவாத மோதலில் உள்ளூர்வாசி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின்னர் கடந்த 10-ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பு மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்தது. அதற்கடுத்த நாளே கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இரண்டு முஸ்லிம் ஆண்கள் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

இந்த நிலையில், பா.ஜ.க இதில் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாகவும், பா.ஜ.க தலைவர்களின் மகள்கள் முஸ்லிம்களைத் திருமணம் செய்தால், அது லவ் ஜிஹாத் இல்லையா என முதல்வர் பூபேஷ் பாகல் நேற்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பூபேஷ் பாகல், ``இரண்டு குழந்தைகளுக்கிடையேயான சண்டை மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. அதோடு இந்தச் சம்பவம் ஒரு மனிதனின் உயிரைப் பறித்திருக்கிறது. இதை நியாயப்படுத்த முடியாது. ஆனால், பா.ஜ.க இதில் அரசியல் ஆதாயத்தைப்பெற முயல்கிறது. பா.ஜ.க-வினர் லவ் ஜிஹாத் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் மகள்கள் முஸ்லிம்களைத் திருமணம் செய்தால், அது மட்டும் லவ் ஜிஹாத் இல்லையா... சத்தீஸ்கர் பா.ஜ.க-வின் மூத்த தலைவரின் மகளிடம் ஒருமுறை கேளுங்கள், இது லவ் ஜிஹாத் இல்லையா?

அவர்களின் மகள்கள் செய்தால் காதல், மற்றவர்கள் செய்தால் லவ் ஜிஹாத்தா... அவர்கள் தங்களின் மருமகன்களை அமைச்சர், எம்.பி-க்கள் என ஆக்குகிறார்கள், மற்றவர்களை மட்டும் வெவ்வேறு சட்டங்களின்கீழ் நடத்துகிறார்கள்" என பா.ஜ.க-வைச் சாடினார்.
முதல்வர் பூபேஷ் பாகேலின் இத்தகைய பேச்சுக்கு பதில்வினையாற்றிய பா.ஜ.க பொதுச்செயலாளர் ஓ.பி.சௌத்ரி, ``முதல்வரின் இந்தக் கருத்து, அவர் லவ் ஜிஹாத்தின் தீவிர ஆதரவாளர் என்று காட்டுகிறது. இந்துக்கள் மீதான அவரின் வெறுப்பை இது காட்டுகிறது. ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மக்களும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்" என்றார்.