Published:Updated:

``பூங்காவே ஒழுங்காக இல்லை... தமிழகம் அமைதிப் பூங்காவா?”- தி.மு.க., அ.தி.மு.க. சட்டசபை 'தெறி'ப்புகள்!

அ.சையது அபுதாஹிர்

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2016-ம் ஆண்டின் புள்ளி விவரத்தின்படி, களவுபோன சொத்துகளை மீட்பதில் 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது.

சட்டசபை
சட்டசபை

காவல் துறை மானியக்கோரிக்கை என்றாலே காரசார விவாதத்திற்குப் பஞ்சம் இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அசுர பலத்தோடு தி.மு.க ஒருபுறம் இருப்பதால், இந்த மானியக்கோரிக்கை அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் குறித்தும், காவல் துறைக்கு அரசு அளிக்கவுள்ள சலுகைகள் குறித்தும் இந்த மானியக்கோரிக்கையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அதைத் தாண்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளும், அதற்கு ஆளும் தரப்பில் பதிலடியும் சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தின.

சட்டமன்றம்
சட்டமன்றம்

காவல் துறை மானியக்கோரிக்கையில் தி.மு.க சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, “முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. தமிழகக் காவல் துறையும் விசாரணை நடத்தி, இப்போது சி.பி.ஐ. வரை விசாரணை சென்றுள்ளது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு இல்லத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் ஒரு நிருபர் முடிந்தால், 'கைதுசெய்து பாருங்கள், இதில் யாருக்கு சம்பந்தம் உண்டு என்று எனக்குத் தெரியும்' என்று சொல்கிறார். தமிழகக் காவல் துறையினர் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு விவகாரம் குறித்து இப்போது எதுவும் பேச முடியாது. காரணம், அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க கையொப்பமிட்டது யார் என்பதை தமிழகமே அறியும். இப்போது அந்த வழக்கைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம்” என்று பதில் அளித்தார். இதற்கு பெரியசாமி, “தவறு செய்பவர்களைத் தமிழகக் காவல் துறை கண்டுகொள்வதே இல்லை” என்று சொல்ல, அதற்கு முதல்வர், “தமிழக காவல் துறையைக் குற்றம்சொல்வதே தி.மு.க-வினருக்கு வாடிக்கையாகிவிட்டது. நிறைய வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றச் சொல்கிறீர்கள். ஆனால், தமிழக காவல் துறை சிறப்பாகச் செயல்படுகிறது. குறிப்பாக, ஸ்காட்லாந்து போலீஸிற்கு இணையாகத் தமிழக போலீஸ் செயல்பாடு உள்ளது” என்றார்.

முதல்வர்
முதல்வர்

அதேபோல் தி.மு.க உறுப்பினர் பொன்முடி, “தமிழகத்தில் உள்ள பூங்காக்களின் நிலையே சரியில்லாமல் உள்ளது. இதில் முதல்வர், 'தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது' என்று எப்படிச் சொல்கிறீர்கள்” என்றார். உடனே முதல்வர், “தமிழகம் உண்மையில் அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கிறது. குற்றமே நடக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதற்குப் பின் காவல் துறை மானியக்கோரிக்கையின் மீதான தனது பதிலுரையில் முதல்வர், “கடந்த 8 ஆண்டுகளாக அரசு அளித்துவரும் அறிவுரைகளாலும், எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளாலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள்மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகள் எடுத்து, குற்ற நிகழ்வுகளைத் தடுத்து, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், மத மற்றும் வகுப்புப் பூசல்கள், பயங்கரவாத மற்றும் தீவிரவாதச் செயல்கள் ஏதுமின்றி தமிழ்நாட்டில் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர். மற்ற மாநிலத்தைக் காட்டிலும் நம்முடைய மாநிலத்தில் குற்றம் குறைந்துதான் இருக்கிறது என்பதைப் புள்ளி விவரத்தோடு சொல்கிறேன்.

பொன்முடி
பொன்முடி

நமது மாநிலத்தில் தாக்கலான சொத்து சம்பந்தமான குற்றங்கள் கடந்த 2016-ம் ஆண்டு 23,650 மட்டுமே ஆகும். ஆனால், நமது அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசத்தில் 25,311-ம், தெலங்கானாவில் 27,946-ம், கர்நாடகாவில் 37,873-ம், மகாராஷ்டிராவில் 94,826-ம் மற்றும் ராஜஸ்தானில் 53,402 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளாகக் கொலை உள்ளிட்ட சொத்து சம்பந்தமாகத் தாக்கலான 1,75,297 வழக்குகளில், 1,23,499 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதாவது, 71 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் களவுபோன 66.5 சதவிகித சொத்துகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2016-ம் ஆண்டைய புள்ளி விவரத்தின்படி, களவுபோன சொத்துகளை மீட்பதில் 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய நான்கு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது” என்று தி.மு.க உறுப்பினர்களுக்கு பதிலளித்தார்.