Published:Updated:

``மாங்காய் புளித்ததோ... வாய் புளித்ததோ!” - ஸ்கோர் செய்த செல்லூர் ராஜு... கோட்டைவிட்ட ஸ்டாலின்!

அ.சையது அபுதாஹிர்

ஆளும்கட்சியினர் நாம் செய்த தவற்றைவைத்து நக்கல் செய்யும்போது, அதற்குப் பதிலடி கொடுக்காமல் எதற்காகத் தலைவர் அதை ஒப்புக்கொண்டு பதிலளித்தார். இது அவைக்குறிப்பிலும் இடம்பெற்றுவிட்டதே என்று புலம்புகிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக சட்டசபையின் மானியக்கோரிக்கை குறித்த கூட்டத்தொடர் நாளையோடு நிறைவடைகிறது. இன்று, முதல்வர் வசம் உள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்கான மானியக்கோரிக்கை நடைபெற்றது.

எடப்பாடி
எடப்பாடி

இதில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் பேசினார்கள். காவல் துறை மானியக் கோரிக்கையின்போது தி.மு.க உறுப்பினர் பொன்முடி பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``வரும் 2021-ம் ஆண்டும் அ.தி.மு.க அரசுதான் அமையும்" என்று பேசினார். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ``மேலே இருக்கிற சக்கரம் கீழேபோகும். கீழே இருக்கிற சக்கரம் மேலேவரும். முதல்வருக்கு இது தெரியும்” என்று ஆட்சி மாற்றம் நிகழும் என்பதை உவமையாக உணர்த்திப் பேசினார்.

அதற்கு உடனே பதிலளித்த முதலவர், ``ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட வாங்க முடியாத நீங்கள், இப்போது எப்படி வெற்றி பெற்றீர்கள், மக்கள் உங்களுக்கு ஏமாந்து வாக்களித்துவிட்டனர்” என்றார். ஸ்டாலின் எழுந்து, ``நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு எங்களுடைய வளர்ச்சிதான் காரணம்“ என்றார். அதற்கு முதல்வர், ``நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தனித்தனியாகத் தேர்தல் வந்திருந்தால் எங்களுடைய வெற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டீர்கள்” என்று பதில் சொன்னார்.

சட்டசபை
சட்டசபை

இதற்குப் பதிலடி தரும் விதமாகப் பேசிய ஸ்டாலின், ``வரக்கூடிய காலத்தில் தி.மு.க ஆட்சி அமைக்கும். எங்களுடைய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கலைஞருடைய பாணியில் சொன்னால், `சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' ” என்று மறுபதில் அளித்தார். அப்போது முதல்வருக்குப் பதிலாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து ஸ்டாலினுக்குப் பதிலளித்தார். ``எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்று நான் கூறமாட்டேன். பொது வங்கியிலும் கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தீர்கள். தி.மு.க-வின் இந்த வாக்குறுதி நிறைவேற்றக்கூடியதா... நாங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிள்ளைகள். செய்யப்போவதைத்தான் சொல்வோம்.

2010-ம் ஆண்டில் ரசாயன உரத்துக்கான மானியத்தை ரத்து செய்தது உங்களுடைய அரசும், உங்கள் அமைச்சரும்தானே... ஒரு மெட்ரிக் டன் 4,000 ரூபாய் விற்றதை, 24,000 ரூபாயாக உயர்த்தி அதற்கு மானியம் அளிப்போம் என்று கூறியது மக்களை ஏமாற்றும் செயல்தானே... அதேபோல் இப்போது மக்களை ஏமாற்றி வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றுள்ளீர்கள்” என்று பதிலடி கொடுத்தார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

ஸ்டாலின் மேடையில் பேசியபோது, ``வாய் புளித்ததோ... மாங்காய் புளித்ததோ” என்கிற பழமொழியைச் சில நேரம் ``மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ” என்று மாற்றிப் பேசியிருக்கிறார். அதைச் சுட்டிக்காட்டி செல்லூர் ராஜு இப்படி பதிலளித்தார். இதற்கு எழுந்து பதிலளித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், `` `மாங்காய் புளித்ததோ.. வாய் புளித்ததோ' என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய வாக்குறுதிகளைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்" என்றார். ஆனால், ஸ்டாலினின் இந்தப் பதிலால் தி.மு.க உறுப்பினர்கள் அப்செட்டாகிவிட்டார்கள். ஆளும்கட்சியினர் நாம் செய்த தவற்றைவைத்து நக்கல் செய்யும்போது, அதற்குப் பதிலடி கொடுக்காமல் எதற்காகத் தலைவர் அதை ஒப்புக்கொண்டு பதிலளித்தார். இது அவைக்குறிப்பிலும் இடம்பெற்றுவிட்டதே என்று புலம்புகிறார்கள். நாளை இதற்கு தி.மு.க தரப்பில் பதிலடி தரப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.