Published:Updated:

சசிகலா:`ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணி!' - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

எடப்பாடி  - சசிகலா
எடப்பாடி - சசிகலா

ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவருகின்றனர்.

அ.தி.மு.க சார்பில் மாவட்டம்தோறும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் பகீர் ரகமாக இருக்கின்றன.

சசிகலாவின் ஆடியோ வெளியீடுகளுக்கு பதிலடி தரும்விதமாக கடந்த 14-ம் தேதி, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் என 15 பேர் அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு அனுப்பிவருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலுள்ள விஷயங்கள் குறித்து முன்னணி நிர்வாகி ஒருவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்,

``அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த அம்மாவை ஊழலுக்கு உடந்தையாகச் செயல்படவைத்து, தண்டனை பெற்றுக்கொடுத்த விஷமக்காரி. அம்மாவால் இரண்டுமுறை கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவர். அம்மா மறையும் வரையில், அவரைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கவில்லை. அவரே தன்னுடைய வாக்குமூலத்தில் உயிர் இருக்கும்வரை என் உறவினர்களுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என உறுதி கொடுத்தவர். ஆனால், அவர்களுடன் மீண்டும் இணைந்து கட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறார். தொண்டர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாராவது அவருடன் தொலைபேசியில் பேசியது தெரிந்தால் தலைமையின் அனுமதி இல்லாமல், மாவட்டச் செயலாளர்களே நடவடிக்கை எடுக்கலாம்

விழுப்புரம்:`சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் அம்மா சிறைக்குப் போனாங்க!' - சி.வி.சண்முகம்

நாட்டு மக்களின் வரிப்பணத்தை நயவஞ்சமாகக் கொள்ளைக் கூட்டம்போல் கூட்டுச் சேர்ந்து சதி செய்து, கொள்ளையடித்ததால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுக்காலம் சிறையில் கம்பி எண்ணிவிட்டு, இப்போது வந்து கழகத்தைக் களங்கப்படுத்த நினைக்கும் சசிகலாவைக் கண்டிக்கிறோம்'' எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ''உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி, அதிமுக-வை அபகரிக்கும் கொள்ளைக்காரி, ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணி போன்ற வார்த்தைகளும் தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு