Published:Updated:

`ஜெயலலிதா சொத்துகள் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது?’ - நீதிபதிகள் கேள்வி

கலிலுல்லா.ச
கே.ஜெரோம்

``மக்களால் நான்; மக்களுக்காக நான் என்ற ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது?” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Deepa
Deepa

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நிர்வாகியாக நியமிக்க வேண்டும், ஜெயலலிதாவின் சொத்துகளில் பூர்வீக சொத்துகளைத் தவிர மற்றவை பொது மக்களுக்கு சேர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

deepa ma
deepa ma

இது தொடர்பாக விசாரிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா, தீபக் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், ``மக்களால் நான்; மக்களுக்காக நான் என்ற ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு வழங்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினர். அப்போது, ``ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் எங்களை அழைக்கவும் இல்லை; அனுமதிக்கவுமில்லை. நாங்கள்தான் ஜெயலலிதாவின் வாரிசுகள். எங்களிடம் எதுவும் கேட்காமல், அவர்களாகவே போயஸ்கார்டன் இல்லத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டுக்கு மாற்றிவிட்டனர். ஏழைகளின் நலனுக்காக ஜெயலலிதாவின் சொத்துகள் சில பகுதிகளைப் பயன்படுத்துவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.

deepa ma
deepa ma

ஜெயலலிதாவின் வாரிசுகள் அடிப்படையில், எல்லா சொத்துகளையும் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். டிரஸ்ட் அமைத்து நாங்கள் அதை ஏழைகளுக்குக் கொடுப்போம்” என்று தீபா, தீபக் இருவரும் நீதிமன்றத்தில் உறுதியளித்தனர். இதையடுத்து நீதிபதிகள், ``போயஸ்கார்டனுக்குள் தீபா, தீபக் இருவரையும் உள்ளே அனுமதிக்கவேண்டும்” என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.