தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தீபக் ஜேக்கப், `நான் ஏற்கெனவே இங்கு இரண்டாண்டுகள் உதவி ஆட்சியராகப் பயிற்சி பெற்றிருக்கிறேன். தற்போது மீண்டும் நான் இங்கு திரும்பி வந்திருப்பது என்னுடைய தாய் வீட்டுக்கு வந்ததுபோல் இருக்கிறது' என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பத்திரப்பதிவுத்துறைத் தலைவராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முறைப்படி தீபக் ஜேக்கபிடம் பதவியை ஒப்படைத்தார். பின்னர் அவர் புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும், உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் தீர்க்கப்படும். மாவட்டத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், செய்தியாளர்கள் நேரடியாக எனது கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்... உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுபானம் அருந்தி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை அறிக்கையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2014-15-ம் ஆண்டில் தஞ்சாவூரில் உதவி ஆட்சியராகப் பயிற்சி பெற்றிருக்கிறேன். நான் மாவட்ட ஆட்சியராக மீண்டும் இங்கு திரும்பி வந்திருப்பது, என்னுடைய தாய் வீட்டுக்கு வந்ததுபோல் இருக்கிறது.
தஞ்சாவூர், காவிரி டெல்டா மாவட்டம் என்பதால், விவசாயிகள் கோரிக்கை, பாசன வசதிகள் குறித்த அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் ஆய்வுசெய்து தீர்க்கப்படும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தேவைகள், குறைகள், காலிப் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.