Election bannerElection banner
Published:Updated:

தேர்தல் 2021: பிடியை இறுக்கும் தி.மு.க... 2011, 2016-ல் காங்கிரஸ் செய்ததும், 2021-ல் தவறியதும்?!

குலாம் நபி ஆசாத் - கருணாநிதி சந்திப்பு
குலாம் நபி ஆசாத் - கருணாநிதி சந்திப்பு

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் கருத்துகளைப் பதிவுசெய்வது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில்கூட மூத்த தலைவர் கபில் சிபல், `காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருக்கிறது’ என்று அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

தமிழகத்திலுள்ள தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் தங்களின் கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க கூட்டணியிலுள்ள தே.மு.தி.க அதிக அளவில் இடங்களை கேட்பதால், பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் இருக்கிறது. இன்று மாலை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. தி.மு.க-வில் காங்கிரஸ் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் தி.மு.க கொடுக்கும் இடங்களை பெற்றுக்கொள்ள தயாராகவே இருப்பதுபோல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், காங்கிரஸ் மட்டும் விடாப்பிடியாக கடந்த 2016 தேர்தலில் பெற்ற இடங்களைப்போல இந்த முறையும் பெற்றே தீருவோம் என்றும் விடாப்பிடியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா (ஹரியானா ), தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ் (கர்நாடகா), ஸ்ரீவல்லபிரசாத் (ஆந்திரா) ஆகியோரை காங்கிரஸ் தலைமை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவாக அறிவித்தது.

முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தநிலையில், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை தி.மு.க தருவதற்குத் தயாராக இல்லை என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்தன. 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தேனியைத் தவிர்த்து எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்தநிலையில், தற்போது காங்கிரஸ் வசம் ஏழு தொகுதிகள் இருக்கின்றன. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆறு சட்டமன்றத் தொகுதிகள் கொடுக்கப்பட்டாலும், மொத்தம் 42 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தலைமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால் தி.மு.க யோசிப்பதற்கு ஒரே ஒரே காரணம், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைத்த அளவிலான தொகுதியை (41 தொகுதிகள் பெற்று எட்டில் வெற்றிபெற்றது காங்கிரஸ்) ஒதுக்கியிருந்தால், தி.மு.க ஆட்சியைப் பிடித்திருக்கும் என்பது அடிமட்ட தி.மு.க தொண்டனின் கருத்தாக இன்றும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

ஆனால், காங்கிரஸ் கடந்த 2011 மற்றும் 2016-ல் தி.மு.க-விடம் பெற்ற சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு முக்கியக் காரணம் என்ன என்பதைக் கருத்தில்கொள்வது தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்று. 2011, 2ஜி ஊழல் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட காலகட்டம். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் தலைமையிலான குழு 63 தொகுதிகளைக் கேட்டுப் பெறுகிறது. ஜெயலலிதாவின் தீவிர பிரசாரத்தால், எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க இழந்தது. காங்கிரஸ் வெறும் ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது.

2014 நாடாளுமன்றத் தேர்தல் காட்சிகள் முற்றிலுமாக மாறுகின்றன. தி.மு.க-வும் காங்கிரஸும் தனித்துப் போட்டியிடுகின்றன. 2ஜி அலை அந்தத் தேர்தலிலும் இரு கட்சிகளையும் பாதித்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் `மறப்போம் மன்னிப்போம்’ என்ற ரீதியில் மீண்டும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உருவானது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களை தி.மு.க தலைமை வழங்குகிறது. 2011-ம் ஆண்டு தோல்வி, 2014 கூட்டணிப் பிரிவு , 2ஜி உள்ளிட்ட மனக்கசப்புகளை தாண்டி காங்கிரஸ் அத்தனை இடங்களை வாங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் குலாம் நபி ஆசாத்!

இன்று காங்கிரஸ் நியமித்திருக்கும் கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா (ஹரியானா மாநில தேர்தலில் எதிர்க்கட்சி முதல்வர் வேட்பாளரை வீழ்த்தியவர்) , தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ் (கர்நாடகாவில் தொடர்ந்து ஒரே தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானவர்), ஸ்ரீவல்லபிரசாத் (ஆந்திரா) ஆகியோர் அவரவர் மாநிலங்களில் அதிகாரம் படைத்த, முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் குலாம் நபி ஆசாத் தி.மு.க மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோருக்கு நன்கு அறிமுகமான நபர் என்பதால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. ஆனால், தற்போது தேசிய அரசியலில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் மற்ற மாநிலத் தலைவர் யாரிடமும் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள் என்பதால்தான் தி.மு.க எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத் தனது பிடியை இறுக்கிக்கொண்டே வருகிறது என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

கலைஞர்
கலைஞர்

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் கருத்துகளைப் பதிவு செய்வது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில்கூட மூத்த தலைவர் கபில் சிபல், `காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்திருக்கிறது’ என்று அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

கன்னியாகுமரியில் பேசும் ராகுல் காந்தி
கன்னியாகுமரியில் பேசும் ராகுல் காந்தி

ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியும் எந்த இடத்திலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று குறிப்பிட்டுப் பேசவில்லை. தி.மு.க., காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால் அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையாகத்தான் இருக்கும் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு