Published:Updated:

தமிழகத்துக்கு படையெடுக்கும் டெல்லி பாஜக விஐபி-க்கள்! - பிளானும் பின்புலமும் என்ன?

நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித் ஷா

தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தைக் குறிவைத்து பா.ஜ.க பல்வேறு வியூகங்களை வகுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்துக்கு படையெடுக்கும் டெல்லி பாஜக விஐபி-க்கள்! - பிளானும் பின்புலமும் என்ன?

தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தைக் குறிவைத்து பா.ஜ.க பல்வேறு வியூகங்களை வகுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published:Updated:
நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித் ஷா

``2019 நாடாளுமன்றத் தேர்தல்போல இந்த முறை விட்டுவிட மாட்டோம்... தனியா நின்னாக்கூட 10 தொகுதிகள் நிச்சயமாக ஜெயிப்போம். 2024 தேர்தல்'ல எங்களோட இலக்குல தமிழ்நாடும் முக்கியமான இடத்துல இருக்கு. அதுக்கான வேலைகளை இப்போதே தொடங்கிட்டோம். நட்டாஜி சுற்றுப்பயணம், மத்திய அமைச்சர்கள் வருகைன்னு அடுத்தடுத்து பல திட்டங்கள் இருக்கு'' என மிகவும் உற்சாகமாகப் பேசுகிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா

2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பா.ஜ.க-வில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு இரண்டுநாள் சுற்றுப்பயணமாக, கடந்த வியாழக்கிழமை வந்தடைந்தார் ஜெ.பி.நட்டா. மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றார். நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதுஒருபுறமிருக்க, இந்தமுறை தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தைக் குறிவைத்து பா.ஜ.க பல்வேறு வியூகங்களை வகுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கடந்தமாதம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பை ஆய்வு செய்தார். அதேபோல, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜிதேந்தர் சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டவர்களும் தமிழ்நாட்டுக்கு வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்னும் அடுத்தடுத்த நாள்களில் மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தை நோக்கி படையெடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - எல்.முருகன்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - எல்.முருகன்

இந்த நிலையில், மத்திய அமைச்சர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்து பா.ஜ.க வட்டாரத்தில் பேசினோம். ``ஹைதராபாத்துல நடந்த எங்க கட்சியோட செயற்குழு கூட்டத்துல அமித் ஷா தெளிவாச் சொல்லிட்டாரு. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுக்க ஆரம்பிச்சு வேலைகளைத் தொடங்கிட்டோம். கடந்த தேர்தல்'ல குறைவான வாக்குகள் வித்தியாசத்துல வெற்றிவாய்ப்பை இழந்த 144 தொகுதிகளைக் குறிவைச்சு, மத்திய அமைச்சர்களுக்கு அந்தத் தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு வேலைகள் நடந்துட்டு இருக்கு. அதுபோக, இந்தியா முழுவதும் எங்க கட்சி பலகீனமா உள்ள மாநிலங்கள்தான் எங்கள் அடுத்த இலக்கு. தமிழ்நாடும் அந்த லிஸ்டில் இருக்கு. இந்தமுறை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கூட்டணியில நின்னாலும் சரி, தனியா நின்னாலும் எட்டுத் தொகுதிகள் எங்களோட இலக்கு. கோயம்புத்தூர், சிவகங்கை , கன்னியாகுமரி, ஈரோடு, இராமநாதபுரம், தென்காசி, மதுரை, நீலகிரி இந்த எட்டுத் தொகுதியில அதிக கவனம் செலுத்த முடிவு செஞ்சிருக்கோம்.

பாஜக
பாஜக

இந்த எட்டுத் தொகுதிகளுக்கும் தனித்தனியா ஒரு மத்திய அமைச்சர் நியமிக்கப்படுவாங்க. அங்க பா.ஜ.க-வோடு திட்டங்களை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறது, நிதியுதவி செய்யுறது போன்ற வேலைகளை மேற்பார்வையிடுவாங்க. வடகிழக்கு மாநிலங்கள்'ல கட்சியை வலுப்படுத்த இந்த யுக்தி எங்களுக்குப் பெரியளவுல கைகொடுத்துச்சு. அது தமிழ்நாட்டுலயும் கைகொடுக்கும்னு நம்புறோம். கடந்த சட்டமன்றத் தேர்தல்'ல நான்கு இடங்களோடு எங்க கணக்தைத் தொடங்கின மாதிரி இந்தமுறை எட்டுத் தொகுதிகளோடு கணக்கைத் தொடங்குவோம். நட்டாஜியோட தமிழகப் பயணம் மக்கள் மத்தியில எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துச்சுன்னு தெரியல, ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகளை ரொம்பவும் உற்சாகமடைய வச்சிருக்கு. ஒவ்வொரு அணிகளைச் சேர்ந்த தலைவர்களையும், பூத் கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகளையும் சந்திச்சு நட்டாஜி பேசியிருக்கார். நிச்சயமா எங்க ஆட்கள் இன்னும் தீவிரமா களப்பணியில இறங்குவாங்க. கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல கோட்டைவிட்ட மாதிரி இந்தமுறை விடமாட்டோம்'' என்கிறார்கள் நம்பிக்கையாக.