Published:Updated:

``எங்களைக் காப்பாற்றுங்கள்!'' - போராட்டத்தில் குதித்த 20,000 போலீஸார்; திணறும் தலைநகரம்

வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் பல போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் டெல்லியில் பல போலீஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போலீஸ் போராட்டம்
போலீஸ் போராட்டம் ( ANI )

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல், போலீஸ்காரருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்னை நடந்துள்ளது. பின்னர் அந்த வழக்கறிஞரை சில போலீஸார் தனியாக அழைத்துச்சென்று அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவரை மீட்கப் பிற வழக்கறிஞர்கள் சென்றபோது வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் போராட்டம்
போலீஸ் போராட்டம்
ANI

காவலர்களின் இந்தச் செயலைக் கண்டித்து அதே நாள் நீதிமன்ற வாயிலில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு, தாக்குதல், கலவரம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 20 போலீஸ்காரர்கள், 8 வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸ்காரர்கள்தான் முதலில் எங்களைத் தாக்கினார்கள் என வழக்கறிஞர்களும், வழக்கறிஞர்கள்தான் முதலில் தாக்கினார்கள் எனக் காவலர்களும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டு அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களையும் வெளியிட்டனர். வழக்கறிஞர்கள் கூறியது போல் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தங்கள் மீதான குற்றச்சாட்டை காவலர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

சாதாரண பார்க்கிங் பஞ்சாயத்து! - டெல்லி நீதிமன்றத்தை அதிரவைத்த கலவரம்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதி உதவி அறிவித்தது. இந்த நிலையில், இன்று காலை டெல்லி சாகெட் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒரு காவலரை, வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. வழக்கறிஞரின் இந்த நடவடிக்கை போலீஸ்காரர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

வழக்கறிஞர்களின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும், பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய எங்களுக்கே பாதுகாப்பு இல்லை என வலியுறுத்தியும் டெல்லியில் உள்ள ஆயிரக்கணக்கான போலீஸார் இணைந்து இன்று டெல்லி கமிஷனர் அலுவலகத்துக்கு நீதி கேட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு கமிஷனரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் கமிஷனர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். `காவலர்களைக் காப்பாற்றுங்கள்; நாங்களும் மனிதர்கள்தான்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டு வருகின்றனர்.

``பொதுமக்களைப் பாதுகாக்கும் இடத்தில் இருக்கும் நாம், ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். நாம் சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அது நம் கடமை. இதையே அரசும் மக்களும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே, காவலர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தும் காவலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

போலீஸ் போராட்டம்
போலீஸ் போராட்டம்
Twitter/@arvindgunasekar

வழக்கறிஞர், கண்மூடித்தனமாகக் காவலரைத் தாக்கியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அந்த வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களே திடீர் போராட்டத்தில் குதித்துள்ளது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் 20,000 போலீஸ்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.