Published:Updated:

கொரோனா வைரஸ்: `ஆக்ஸிஜனுக்குக்காகப் பரிதவிக்கும் தலைநகரம்’ - இதுதான் டெல்லியின் நிலை!

டெல்லி
டெல்லி ( AP )

`கொரோனா தொற்று உறுதியாகும் சதவிகிதம் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24-லிருந்து 30-ஆக உயர்ந்துள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துக்கொண்டுவரும் நிலையில், மகராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 161 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

`மத்திய அரசுக்கு நன்றி!’

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் மருத்துவமனை மெத்தை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் கெஜ்ரிவால்.

டெல்லியில் தற்போது வெறும் 100-க்கும் குறைவான ஐசியூ மெத்தைகளே இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்று உறுதியாகும் சதவிகிதம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24-லிருந்து 30-ஆக உயர்ந்துள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். தற்போது மத்திய அரசு உதவி செய்துவருவதாகவும், அந்த உதவிக்கு மிக்க நன்றி எனவும் அவர் நேற்று தெரிவித்தார்.

நேற்று மாலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் தொலைபேசியில் பேசியதாகவும் மருத்துவமனை மெத்தை, ஆக்ஸிஜனின் தேவை மிக அதிக அளவில் இருப்பதாக அவரிடம் குறிப்பிட்டதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவிடம் பேசியதாகவும், மெத்தை தேவைகள் குறித்து உதவி கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு மருத்துவமனைகளிலுள்ள 10,000 மெத்தைகளில் தற்போது வெறும் 1,800 மெத்தைகள்தான் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் இதை 7,000-ஆக உயர்த்த வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால்.

டெல்லியில் கொரோனா தொற்று மிக மோசமாக உள்ள நிலையில் அங்கு ஏற்கெனவே வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வார இறுதி நாள்களில் முக்கிய மார்கெட்டுகள் மூடியிருந்தன. பெரும்பாலான சாலைகளிலும் ஆள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
Matias Delacroix/ap

டெல்லியிலுள்ள காமன்வெல்த் கேம்ஸ் வில்லேஜ், யமுனா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ரவுஸ் அவென்யூவிலுள்ள அரசுப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் கிட்டத்தட்ட 1,500 மெத்தைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை நாளையோ அல்லது நாளை மறுநாளிலிருந்தோ இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் உதவிக்கு நன்றி எனப் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், சிறிது நேரத்தில் டெல்லிக்கு வழங்கப்பட வேண்டிய ஆக்ஸிஜன் விநியோகம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டினார்.

``டெல்லியில் தீவிர ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துவருவதால் வழக்கத்தைவிடக் கூடுதலான ஆக்ஸிஜன் விநியோகம் தேவைப்படுகிறது. ஆனால் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பதற்கு பதிலாக வழக்கமான விநியோக அளவும் குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பங்கு பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, டெல்லியில் அவசரநிலையில் ஆக்ஸிஜன் தேவை” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

கொரோனா வைரஸ்: `ஆக்ஸிஜனுக்குக்காகப் பரிதவிக்கும் தலைநகரம்’ - இதுதான் டெல்லியின் நிலை!

டெல்லியில் முதலாம் அலையைக்காட்டிலும் தற்போது நிலைமை பன்மடங்கு மோசமாகியுள்ளது. இங்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பெரும் சிரமங்களை மக்கள் சந்தித்துவருகின்றனர்.

குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலைமை மோசமாகிவருவதாகச் செய்திகள் பல தெரிவித்த நிலையில், டெல்லியில் 100-க்கும் குறைவான ஐசியூ மெத்தைகளே உள்ளன என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் பத்து மாநிலங்களின் பட்டியலில் டெல்லியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நேற்று (18-04-2021) காலை நிலவரப்படி 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு