
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகிற 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன.
இந்தியத் தலைநகர் டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சிக் கட்டிலில் யார் அமரப்போகிறார் என்பது 11-ம் தேதி தெரிந்துவிடும். வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய மூன்று கட்சிகளுக்கும் பல வழிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை முன்வைத்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஆம் ஆத்மி முயல்கிறது. 1998-க்குப் பிறகு 22 ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடித்துவிட முடியாமல் பா.ஜ.க-வும் அரசியல் வனவாசத்தில் தவித்து வருகிறது. இதனால் எப்படியாவது டெல்லியில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க-வும் குறியாக உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியிலே ஆம் ஆத்மி வளர்ந்திருக்கிறது. 15 ஆண்டுகள் (1998 - 2013) வரை தான் அலங்கரித்த டெல்லியில் இழந்த செல்வாக்கை மீட்டுவிட காங்கிரஸும் போராடுகிறது.
சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், மாநில தேர்தல்களில் பா.ஜ.க-வின் தொடர் சரிவுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் பல வழிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பா.ஜ.க 50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்கள் ஒரே முறையில் வாக்களிப்பதில்லை என்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.

கட்சிகள் என்னென்ன உத்திகளைக் கையாள்கின்றன?
ஆம் ஆத்மி:
களத்தில் பிரதான போட்டி ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க-வுக்கும்தான் என்று அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன. முதல்முறை ஆட்சி அமைப்பதில் சறுக்கியதற்குப் பிறகு, 2015-ல் 67 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது.
ஊழலற்ற ஆட்சி என்பதை மையப்படுத்திய லோக்பால் இயக்கத்தில் வளர்ந்த ஆம் ஆத்மி கட்டமைப்புகளில் முதலீடு செய்வோம் என்பதை முன்வைத்து ஆட்சியில் அமர்ந்தது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் டெல்லி அரசு செய்துவந்த முதலீடுகளை அதிகரித்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியது. மொஹல்லா சுகாதார நிலையங்களை டெல்லி முழுவதும் திறந்தது. காங்கிரஸ் கட்சியைக் குறிவைப்பதைப் போல பா.ஜ.க-வால் ஆம் ஆத்மியை குறிவைக்க மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை.
ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் செய்துவந்த நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆம் ஆத்மி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.
பா.ஜ.க:
22 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சியில் இல்லையென்றாலும் தனக்கான இடத்தையும் வாக்கு சதவிகிதத்தையும் பா.ஜ.க தக்கவைத்தே வந்துள்ளது. அடுத்த மாநிலத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி தேர்தல் பிரசாரத்தில் உள்ளூர் விவகாரங்களைக் காட்டிலும் தேசிய விவகாரங்களுக்கே பா.ஜ.க முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பிரசாரப் பேரணிகளில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி ராமர் கோயில், குடியுரிமை திருத்தச் சட்டம், அதற்கு எதிரான போராட்டங்கள் ஆகியவையே அதிகம் முன்னிறுத்தப்படுகின்றன.
ஷாகின் பாக்கில் நடைபெற்று வருகிற சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களை காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஊக்குவித்து வருவதாக பா.ஜ.க குற்றம் சாட்டிவருகிறது. ஆம் ஆத்மியும் காங்கிரஸும் வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டையும் பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
ஆனாலும் ஆம் ஆத்மியின் நலத்திட்டங்களுக்குப் போட்டியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவோம் எனவும் பா.ஜ.க தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.


Also Read
மீண்டும் ஜெயிப்பாரா கெஜ்ரிவால்?
காங்கிரஸ்:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடம்பிடித்தது. டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காங்கிரஸ் பிரசாரத்துக்குத் தலைமை வகித்தால் தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. டெல்லியில் ஷீலா தீக்ஷித்தின் தனிப்பட்ட செல்வாக்கு அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது
ஆனால் ஷீலா தீக்ஷித்தின் எதிர்பாராத மறைவு தேர்தல் கணக்குகளை மாற்றிப்போட்டது. காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரிய அளவில் துடிப்புடன் செயல்படவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
முதல்வர் வேட்பாளர்?
தேர்தல் களத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் இரண்டுமே முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது அந்தக் கட்சிகளுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. டெல்லிக்கு முதல்வர் வேட்பாளரை நிறுத்திவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா என்று அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க-வுக்கு சவால் விடுத்துள்ளார். இது ஆம் ஆத்மிக்கு சாதகமாகவும் அமையலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியிலும் போக்குவரத்து மற்றும் காற்று மாசு முக்கிய இடம்பெற்றுள்ளது. டெல்லியின் காற்று மாசைப் போக்க இரண்டு கோடி மரங்களை நடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் டெல்லியின் காற்று மாசு குறைக்கப்படும் என பா.ஜ.க அறிவித்துள்ளது. டெல்லி பட்ஜெட்டில் 25 சதவிகிதம் காற்று மாசைக் குறைப்பதற்குச் செலவிடப்படும் எனக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தேசிய அளவிலான மாற்றாக உருவாகும் என்று கருதப்பட்ட ஆம் ஆத்மி டெல்லிக்குள்ளே சுருங்கிப்போனது. வீழ்த்த முடியாத சக்தியாக விளங்கிய பா.ஜ.க அடுத்தடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் சரிவுகளைச் சந்தித்தன. கடும் சரிவிலிருந்த காங்கிரஸ் கட்சி சமீபத்திய தேர்தல்களில் சற்று எழுச்சிக் கண்டுள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அது அனைத்துத் தரப்பாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது.