Published:Updated:

பாரத் ஜோடோ யாத்திரைப் பேச்சு; விளக்கம் கேட்டு ராகுல் காந்தியின் வீட்டுக்குள் சென்ற டெல்லி போலீஸார்!

ராகுல் காந்தி

45 நாள்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கேட்டு, ராகுல் காந்தியின் வீட்டுக்கு டெல்லி போலீஸார் சென்றிருக்கின்றனர்.

Published:Updated:

பாரத் ஜோடோ யாத்திரைப் பேச்சு; விளக்கம் கேட்டு ராகுல் காந்தியின் வீட்டுக்குள் சென்ற டெல்லி போலீஸார்!

45 நாள்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கேட்டு, ராகுல் காந்தியின் வீட்டுக்கு டெல்லி போலீஸார் சென்றிருக்கின்றனர்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்தில் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க கோரி வருகிறது. இதனால் நாடாளுமன்றம் முடங்கியது. பா.ஜ.க தொடர்ச்சியாக ராகுல் காந்திக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது, `இன்னும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகள், சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்' என்று தெரிவித்திருந்தார். காஷ்மீரில் யாத்திரை சென்றபோது ராகுல் காந்தி இதைத் தெரிவித்திருந்தார். அவர் பேசி 45 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், `பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களைக் கொடுங்கள், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என்று கூறி ராகுல் காந்திக்கு டெல்லி போலீஸார் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

வீட்டுக்கு வெளியில் பாதுகாப்புப் படையினர்
வீட்டுக்கு வெளியில் பாதுகாப்புப் படையினர்

அதற்கு ராகுல் பதிலளிக்காத நிலையில், இன்று காலையில் டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் ராகுல் காந்தியின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அவர்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த விவரங்களை ராகுல் காந்தியிடம் கேட்க வந்திருப்பதாகக் கூறியிருக்கின்றனர். உடனே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜெய்ராம் ரமேஷ் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.

ராகுல் காந்திக்கு எதிராக எந்தவிதமான புகார் அல்லது நோட்டீஸும் கொடுக்காமல் போலீஸார் வந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது ஒரு வகையான துன்புறுத்தல் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். `ராகுல் காந்தி இன்றைக்கு பதிலளிக்கவில்லையெனில் மீண்டும் நோட்டீஸ் அனுப்புவோம்' என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது முக்கியக் குற்றச்சாட்டு என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கெரா, ``பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாள்களாகிவிட்டன. இப்போது கேட்கவேண்டிய அவசியம் என்ன... என்னைக்கூட வீட்டுக்குள் நுழையவிடவில்லை" என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் வீட்டுக்குள் போலீஸார் நுழைந்திருப்பதால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியின் வீட்டுக்கு வெளியில் அதிக அளவில் கூடியிருக்கின்றனர். ``பிரதமருக்கும், அதானிக்குமிடையிலான உறவு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால்தான் மத்திய அரசு இது போன்று போலீஸாரைக் கொண்டு துன்புறுத்துகிறது" என்று காங்கிரஸ் சாடியிருக்கிறது.