காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட உதவியாளரான பி.பி.மாதவன் என்பவர்மீது டெல்லி உத்தம்நகர் போலீஸார், ஜூன் 25 அன்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் பாலியல் வன்கொடுமை மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில், ``மாதவன் (71 வயது ) என்பவர் வேலை வாங்கித்தருவதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி ஒரு பெண்ணை (26 வயது) பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாக அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார். இந்த விஷயத்தை போலீஸில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மிரட்டப்பட்டிருக்கிறார். மேலும் போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்'' என தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், அரசியல்ரீதியாக பழிவாங்கும் வகையில் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்று மாதவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் டெல்லியில் வசிப்பதாகவும், அவருடைய கணவர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்துவந்ததாகவும், அவரின் கணவர் 2020-ல் இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவரின் தனிப்பட்ட செயலாளர் மீது பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
