Published:Updated:

துக்டே துக்டே கும்பல்... அனுராக் தாக்கூரின் முழக்கம் - பி.ஜே.பியை அலறவிடும் சாகேத்!

அமித் ஷா - சாகேத் கோகலே - அனுராக் தாக்கூர்
அமித் ஷா - சாகேத் கோகலே - அனுராக் தாக்கூர்

விசித்திரமான போராட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்கி சர்ச்சையில் சிக்கியிருக்கிறது டெல்லி காவல்துறை.

பெரும் குழப்பத்தில் தவிக்கிறது டெல்லி காவல்துறை. பிப்ரவரி 2 அன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், ``தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்!" என்று முழக்கமிட்டுப் போராட்டம் நடத்துவதற்குக் காவல்துறை அனுமதி வாங்கியுள்ளார் செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான சாகேத் கோகலே. அவருக்கு அனுமதி வழங்கியதே டெல்லி காவல்துறையின் பெரும் குழப்பத்துக்குக் காரணம்.

டெல்லியில் தற்போது மாநிலத் தேர்தல் பிரசாரங்கள் அனல் பறக்கின்றன. பி.ஜே.பி-க்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் ஒன்றில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ``தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்!" என்று முழக்கமிட்டார். அவருடன் சேர்ந்து அப்பகுதி பி.ஜே.பி-யினரும் அதையே முழக்கமாக வெளிப்படுத்தினர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனுராக் தாக்கூரை நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். எனினும் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் அனுராக் தாக்கூர் பேசியிருக்கிறார் எனவும், அவர்மீது காவல்துறை நடவடிக்கை தேவை எனவும் பல்வேறு குரல்கள் எழுந்தன. அனுராக் தாக்கூர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், அனுராக் தாக்கூர் கூறியது போலவே, டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டார்.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

இந்த நிகழ்வுக்குப் பிறகு, அனுராக் தாக்கூரின் கருத்துக்கு ஆதரவாக டெல்லி காவல்துறை செயல்படுகிறது என்ற சர்ச்சை எழுந்தது. டெல்லியைச் சேர்ந்த செயற்பாட்டாளரான சாகேத் கோகலே டெல்லி காவல்துறை, இணையமைச்சருக்கு ஆதரவாக செயல்படுவதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த விரும்பினார். இதையடுத்து, அவர் டெல்லியின் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்குச் சென்று, ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதிப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறும் கடிதம் அளித்திருந்தார். அந்தக் கடிதத்தில் அவர், ``தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்!" என்று அனுராக் தாக்கூர் கூறிய அதே முழக்கத்தைப் போராட்டத்தில் கூறப் போவதாகக் கூறியிருந்தார். காவல்துறை அந்த முழக்கத்துக்கு அனுமதியும் அளித்தது.

இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் விவரிக்கும் சாகேத் கோகலே, ``காவல் நிலையத்தில் காவலர்கள் `குடியுரிமை திருத்தத்துக்கு எதிரான போராட்டமா?' என்று கேட்டனர். `இல்லை, மதவாத சக்திகளுக்கு எதிராகவும், ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராகவும் போராட்டம்' என்று கூறினேன். காவலர்கள், `ஜாமியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம்' என்று அதைப் புரிந்துகொண்டார்கள். எனக்குப் போராட்டம் நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை. அனுராக் தாக்கூரின் சர்ச்சைக்குரிய முழக்கத்தைக் காவல்துறை அங்கீகரிக்கிறது என்பதை எழுத்துபூர்வமாக வாங்கவே நான் இதைச் செய்தேன்" என்று கூறியுள்ளார்.

அதையடுத்து, சாகேத் கோகலேவுக்கு டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. டெல்லியில் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால், இந்த முழக்கத்தோடு போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை எனவும், தேர்தலுக்குப் பிறகு போராட்டம் நடத்தலாம் எனவும் கூறப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ``தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் இந்த முழக்கத்துக்கு அனுமதியில்லை என்று டெல்லி காவல்துறை கூறுகிறது. அப்படியானால் அனுராக் தாக்கூர் ஏன் கைதுசெய்யப்படவில்லை?" எனக் கேட்டுள்ளார். இதுவே டெல்லி காவல்துறையின் குழப்பத்துக்குக் காரணம்.

தற்போது சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தனது போராட்டத்துக்குக் காவல்துறை அனுமதி வழங்கியதா எனவும், அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்ன என்றும் எழுத்துபூர்வ சான்று வாங்குவதற்காகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

`துக்டே துக்டே கும்பல்' குறித்த ஆர்.டி.ஐ பதில்
`துக்டே துக்டே கும்பல்' குறித்த ஆர்.டி.ஐ பதில்
`சொன்னால் கேட்காதவர்களுக்கு தோட்டாக்களின் மொழி புரியும்!’ - யோகி ஆதித்யநாத் மீண்டும் சர்ச்சை

சாகேத் கோகலே தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். இதற்கு முன்னர், கடந்த மாதம், டெல்லி பிரசாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `துக்டே துக்டே கும்பல்' என்று குறிப்பிட்டு வந்தார். சாகேத் கோகலே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு `துக்டே துக்டே கும்பல்' எனக் குறிக்கப்படுபவர்கள் யார், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் யார் யார், அந்த அமைப்பு எங்கு தொடங்கியது, அதன் உறுப்பினர்கள் ஏன் இன்னும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை' எனக் கேள்வி எழுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு, `துக்டே துக்டே கும்பல் பற்றி எங்களிடம் தகவல் இல்லை' என்று கூறியது.

தற்போது டெல்லி காவல்துறை மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாகேத் கோகலே கோரிக்கை விடுத்துள்ளார். அனுராக் தாக்கூரின் சர்ச்சைக்குரிய முழக்கத்துக்குப் பிறகு, 3 முறை துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடந்துவிட்டன. மேலும், நாடாளுமன்றத்தில் அனுராக் தாக்கூர் பேசும்போது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், ``துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துங்கள்!' என்று முழக்கமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனுராக் தாக்கூர் சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு