Published:Updated:

டெல்லி வன்முறை வழக்கு: ``தலைவர்கள் பெயர் சேர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்''- சி.பி.எம் கனகராஜ்!

டெல்லி வன்முறை
News
டெல்லி வன்முறை

சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் டெல்லி வன்முறை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கும், சி.ஏ.ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே வடக்கு டெல்லி பகுதியில் மோதல் ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. அந்த வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார் 108 பேர் காயமடைந்தனர். இரண்டு போலீஸார் உயிரிழந்தனர். அந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீஸ், அது தொடர்பாக 751 எஃப்.ஐ.ஆர்-களைப் பதிவுசெய்திருக்கிறது. 1,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், ஆவணப்பட இயக்குனர் ராகுல் ராய் ஆகியோரின் பெயர்கள் திடீரென்று கடந்த வாரம் சேர்க்கப்பட்டன. இது குறித்த செய்தி அரசியல் வட்டாரத்தை அதிரவைத்தது. பல்வேறு மட்டங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகு, `யெச்சூரி உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்படவில்லை’ என்று டெல்லி போலீஸ் தரப்பிலிருந்து மறுப்பு வந்தது. இன்னொருபுறம், டெல்லியில் வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக `உபா’ சட்டத்தின் கீழ் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் உமர் காலித் கடந்த ஞாயிறன்று (செப். 13) கைதுசெய்யப்பட்டார். டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட உமர் காலித்திடம் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அவரது செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மத்திய பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தேசிய கல்விக் கொள்கை, இ.ஐ.ஏ 2020 உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துவருகிறது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகிறது. தற்போது, `கொரோனா தொற்றுப் பரவலையும், மரணங்களையும் கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதை அம்பலப்படுத்தும்விதமாகவும், மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் ஆகஸ்ட் 20 - 26 தேதிகளில் அகில இந்திய எதிர்ப்பு வாரம் கடைப்பிடியுங்கள்’ என்று தங்கள் கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் யெச்சூரி பெயர் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

யெச்சூரி
யெச்சூரி

சீதாராம் யெச்சூரியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் பேசினோம்.

``சீதாராம் யெச்சூரி போன்ற மக்களுக்காகப் போராடும் மதிப்புமிக்க ஒரு கட்சியின் தலைவர்மீது வன்முறைக்கு சதிசெய்தார் என்றெல்லாம் குற்றம்சாட்டுவதன் பின்னணியில் அடிப்படையான ஒரு காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். மத்தியில் ஆளுகிற பா.ஜ.க-வுக்கு `ஜனநாயகம்’ என்கிற கருத்துருவில் துளியும் நம்பிக்கை கிடையாது. ஜனநாயகத்தை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் `ஆர்கனைசர்’ பத்திரிகையில் அதை வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார்கள். 30.11.1949 மற்றும் 25.01.1950 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ்களில், `தற்போது இருக்கும் அரசமைப்புச் சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை’ என்று எழுதியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அதில், `மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசமைப்புச்சட்டமாக இருக்க முடியும். ஜனநாயகம் என்பது மேற்கத்திய கருத்துரு. அது, இந்தியாவுக்கு ஒத்துவராது’ என்றும் எழுதியிருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க-வின் உண்மையான முகம். இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது வலுவான ஒரு கட்டமைப்புடன் இருப்பதன் காரணமாக, அவர்களால் அதை நிராகரிக்க முடியவில்லை. ஆகையால், அந்தக் கட்டமைப்புக்கு உள்ளே இருந்துகொண்டு, அதைச் சிதைக்கும் வேலையைச் செய்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு கூற்றின் மீதும் அவர்கள் தொடர்ச்சியான தாக்குதலை நடத்திவருகிறார்கள். யாரெல்லாம் தங்களை விமர்சிக்கிறார்களோ, எதிர்க்கிறார்களோ அவர்கள்மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகள் தொடுப்பது, அவர்களைச் சிறையில் தள்ளுவது போன்ற மோசமான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்.

கனகராஜ்
கனகராஜ்

யாரையும் இவர்கள் சட்டப்படி நடத்துவது கிடையாது. நீதிமன்றத்தைக்கூட அவர்கள் சட்டப்படி நடத்தவில்லை என்பதுதான் உச்சபட்சம். மத்திய ஆட்சியாளர்களின் இந்த மோசமான அணுகுமுறையை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாக வந்து ஊடகங்கள் முன்பாகச் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள், இப்போது அதைவிட ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகிறார்கள். `நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், சர்வதேச அளவல் மதிக்கத்தக்க அறிவுஜீவியாக இருந்தாலும் எங்களை எதிர்த்துக் குரல் எழுப்பினால் அவர்களை இப்படித்தான் நடத்துவோம்’ என்ற வெளிப்பாடுதான் யெச்சூரி, ஜெயதி உள்ளிட்டோர் மீதான வழக்குகள். டெல்லி வன்முறையில் முக்கியப் பங்குவகித்தவர்கள் என்ற செய்திகள், ஆதாரங்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. பா.ஜ.க-வைச் சேர்ந்த கபில் மிஸ்ராவுக்கும், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் அதில் என்ன பங்கு இருக்கிறது என்பது பற்றிய ஆதாரங்கள் வெளியில் வந்துள்ளன. அவர்கள்மீது எந்த வழக்கும் கிடையாது. ஆனால், அந்த வன்முறைக்கு எதிராக நின்றவர்கள் மீது வழக்கு என்றால், மத்தியில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மதிப்புமிக்க தலைவர்களையும், கல்வியாளர்களையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும், `தேசத்துரோகிகள்’ என்று முத்திரை குத்திவிட்டு, வழக்குகள் போட்டுவிட்டு, சிறையில் தள்ளிவிட்டு, குற்றப் பின்னணி கொண்டவர்களை அவர்கள் அரவணைத்துக்கொள்கிறார்கள். எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தவராக இருந்தாலும், அவர்களைக் காப்பாற்றுவோம் என்ற அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், கல்வெட்டு ரவி, நெற்குன்றம் சூர்யா போன்ற `சுட்டுப் பிடிக்கலாம்’ என்ற அளவுக்கான குற்றங்களைச் செய்திருக்கிற `ஏ ப்ளஸ்’ குற்றப் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியிலேயே சேர்த்துக்கொள்கிறார்கள். அதன் மூலமாக சட்டத்துக்கும் நீதிக்கும் அவர்கள் சவால்விடுகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய உறவினரும், புகழ்பெற்ற பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்டே, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் போன்றவர்கள் தங்களை விமர்சித்தால், `நகர்ப்புற நக்சல்கள்’ என்று அவர்களை சிறையில் தள்ளுவோம் என்று பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. யெச்சூரி, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக முதலில் சொல்லிவிட்டு, அவர்கள் குற்றம்சாட்டப்படவில்லை என்று பிறகு மறுக்கிறார்கள். ஏனென்றால், இப்போது குற்றப் பட்டியலில் சேர்த்துவிட்டு, டெல்லி வன்முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தப்பட்டிருந்தது என்று பிற்காலத்தில் ஒரு நாள் சொல்வதற்கான ஆதாரங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடு இது.

வரவர ராவ்
வரவர ராவ்

கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது இன்று, நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்ட இயக்கம் இது. சுதந்திரத்துக்குப் பிறகும்கூட, எங்கள் இயக்கம் எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது. பா.ஜ.க ஆட்சியில் இப்படியெல்லாம் செய்வார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இப்போது அமலில் இருக்கிறது. இதை நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார் கனகராஜ்

இடதுசாரிகளின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான வானதி சீனிவாசனிடம் பேசினோம். ``ஆதாரமில்லாமல் யார் மீதும் இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்காது. அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் என்கிறபோது, ஆதாரம் இல்லாமல் அவர்கள்மீது குற்றம்சாட்டவோ, வழக்கு பதிவு செய்யவோ வாய்ப்பே இல்லை. ஆதாராமில்லாமல் அப்படியொரு நடவடிக்கையை அரசு எடுக்கிறது என்று அவர்கள் கருதினால், அவர்களுக்கான வாய்ப்பு நீதிமன்றத்தில் நிச்சயமாக வழங்கப்படும். நம் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளின் பின்னால் யார் இருந்தாலும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றவர்களுக்கு டெல்லி வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுவார்களேயானால், அவர்கள் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வைக்கலாமே!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள் என்பதாலேயே அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நன்கு படித்தவர்களும் குற்றவாளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஒருவர் தவறு செய்தால், அவரின் படிப்பு மற்றும் பிற தகுதிகள் காரணமாக சட்டத்திலிருந்து அவரை எப்படி விலக்க முடியும்... சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே... தாங்கள் பின்பற்றக்கூடிய, நம்பக்கூடிய சித்தாந்தத்துக்கு மாற்றாக ஓர் அரசு இருக்கிறது என்ற எண்ணத்தில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வாய்ப்பு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

அரசியல் சாசனத்தை பா.ஜ.க அரசு ஏற்கவில்லை என்றும், மனுஸ்மிருதியை மட்டுமே நம்புவதாகவும் சொல்லப்படும் குற்றச்சாட்டு வெறும் கற்பனையானது. அரசியல்ரீதியில் எந்தப் பயன்பாட்டிலும் இல்லாத ஒன்றை இவர்கள் கற்பனையாகக் கூறுகிறார்கள். கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. `ஆர்கனைசர்’ பத்திரிகையில் எழுதப்பட்டதை பா.ஜ.க எந்த இடத்தில் சொல்லியிருக்கிறது? பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலோ, பா.ஜ.க தலைவர்களின் உரைகளிலோ எங்குமே அந்தக் கருத்து கிடையாது. எனவே, ஆதாரமில்லாதவற்றை மனம்போனபோக்கில் அவர்கள் பேசுகிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் நெருக்கடிநிலையைவிட ஒரு மோசமான நடவடிக்கை இருக்க முடியாது. அந்த நெருக்கடிநிலை காலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து போராடியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் ஜனசங்கமும். அப்படிப்பட்ட நாங்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான கருத்துகளை ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம்.

ஆர்.எஸ்.எஸ் என்பது எங்கள் தாய் அமைப்பு. சித்தாந்தரீதியாக அதனுடன் இணைந்திருக்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராக இருந்ததில்லை. அது, தனக்கென்று ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டதும் இல்லை. இந்த நாட்டின் இயல்பு, இந்த நாட்டின் தனித்தன்மை, இந்த நாட்டின் கலாசாரம், இந்த நாட்டின் பண்பாடு, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டு மக்களின் ஒற்றுமை ஆகியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அஜெண்டாவாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

எனவே, ஆர்.எஸ்.எஸ் குறித்து மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு நாங்கள் உடன்பட முடியாது. இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் எதிராக யார் செயல்பட்டாலும், எந்தவிதமான தயவுதாட்சண்யமும் இல்லாமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை’’ என்றார் வானதி சீனிவாசன்.

இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் சீதாராம் யெச்சூரி, `சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராகப் பேசுவது என்பது இந்திய அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமை. இது போன்ற வழக்குகளால் என்னை அச்சுறுத்திவிட முடியாது’ என்று கூறியிருக்கிறார்.