Published:Updated:

எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த அங்கீகாரம்... திடீர் ட்விஸ்ட்டும் அரசியல் கணக்குகளும்..!

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி

எடப்பாடியின் சிக்னலைப் புரிந்துகொண்ட டெல்லி தலைமை, எங்கள் தரப்பிடம் நேரடியாகவே பேசியது. இது ஓ.பி.எஸ்-ஸுக்கு மட்டுமல்லாமல் தமிழக பா.ஜ.க-வுக்குப் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது.

எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த அங்கீகாரம்... திடீர் ட்விஸ்ட்டும் அரசியல் கணக்குகளும்..!

எடப்பாடியின் சிக்னலைப் புரிந்துகொண்ட டெல்லி தலைமை, எங்கள் தரப்பிடம் நேரடியாகவே பேசியது. இது ஓ.பி.எஸ்-ஸுக்கு மட்டுமல்லாமல் தமிழக பா.ஜ.க-வுக்குப் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, மோடி

இந்தோனேசியாவில் சமீபத்தில் நடந்த ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஜி20 அமைப்பின் விதிமுறைகளின்படி, இந்த முறை ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இதற்கான மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. அதன்படி, இந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டிச.5-ம் தேதி (இன்று) டெல்லியில் நடைபெறுகிறது. முன்னதாக, இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும், முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ - இந்தியப் பிரதமர் மோடி
இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ - இந்தியப் பிரதமர் மோடி

அதன்படி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பிய கடிதத்தில், ``அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அதாவது, ஜூலை 11-ல் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடியின் பதவியை, டெல்லி தலைமை இதுவரை ஏற்றுக்கொள்ளாமல்தான் இருந்தது. அதேபோல, பொதுக்குழு முடிந்து நான்கு மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தாததால், அவரின் பதவி காலாவதியாகிவிட்டது என்று பன்னீர் தரப்பினர் கூறிவருகின்றனர். இந்த நிலையில், இடைக்காலப் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பது தமிழ்நாடு அரசியலில் புதிய ட்விஸ்ட்-ஆக கவனிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி & நிர்வாகிகள் கைது
எடப்பாடி பழனிசாமி & நிர்வாகிகள் கைது

இது குறித்து எடப்பாடிக்கு நெருக்கமான சில சீனியர் அமைப்புச் செயலாளர்களிடம் பேசினோம்.

"எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை ஏற்றுக்கொள்வதில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-விலேயே மாறுப்பட்ட கருத்து இருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக, அக்டோபர் 19-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியபோது, எடப்பாடி உள்ளிட்ட சீனியர்களைக் கைதுசெய்தது தி.மு.க அரசு. அப்போது எடப்பாடியை நேரில் சந்தித்து கூட்டணிக் கட்சியினரான ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’த் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் சென்னையில் இருந்தும் நேரில் வந்தோ, போனில் தொடர்பு கொண்டோ ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதேபோல, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் பலத்தை தி.மு.க-வினாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்க, கொங்கில் அ.தி.மு.க-வைச் செயலிழக்கவைத்து, தன்னை முன்னிலைப்படுத்த தமிழக பா.ஜ.க தலைமையும் முயல்கிறது. அதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க புள்ளிகள் டெல்லிக்குச் சில தவறான தகவல்களைக் கொடுத்துள்ளனர். அதாவது 'எடப்பாடிக்கு செல்வாக்கு இருந்திருந்தால் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே நமக்கு வெற்றி கிடைத்திருக்கும். அவருக்கென்று தனி செல்வாக்கு இல்லை.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

எனவே, உட்கட்சிப் பிரச்னையை மையமாக வைத்து இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி, அவரை 10 சதவிகித வாக்குகளுக்குள் சுருக்கிவிடலாம். தே.மு.தி.க., த.மா.கா., பா.ம.க., அ.ம.மு.க., பன்னீர் அணி, இதர கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து தேர்தலை நாம் சந்திக்கலாம்' என்பதுதான் அவர்கள் கணக்கு. இது போன்ற பல தவறான கருத்துகள் மேலிடத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. இதை உண்மை என்று கருதியதாலோ என்னவோ, பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சந்தித்துப் பேச எடப்பாடி முயன்றபோதெல்லாம், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான், அ.தி.மு.க-வின் உள்கட்டமைப்பு குறித்து பிரகடனம் செய்யும் விதமாக, நாமக்கல்லில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் மத்தியில் ‘அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி’ என எடப்பாடி சூளுரைத்தார். எடப்பாடியின் இந்த சிக்னலைப் புரிந்துகொண்ட மேலிடம், எங்கள் தரப்பிடம் நேரடியாகவே பேசியது. `எங்களைப் பொறுத்தவரை 2026-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்காக இருக்கிறது. உங்களுக்குத்தான் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
நா.ராஜமுருகன்

இந்த நேரத்தில், தவறான வழிகாட்டுதலால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி அ.தி.மு.க-வை பலவீனப்படுத்த முயன்றால், அதனால் உங்களுக்குத்தான் பெரும் பாதிப்பு’ என்று கூறி, தேர்தல் புள்ளிவிவரங்களையும், ஓ.பி.எஸ்-ஸின் செல்வாக்கு குறித்த டேட்டாக்களையும் டெல்லிக்குக் கொடுத்தோம். இந்த நிலையில்தான் டெல்லி தலைமை இறங்கி வந்து, எடப்பாடிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அங்கீகரித்திருக்கிறது" என்றனர் விரிவாக.

எடப்பாடிக்குச் சாதகமான டெல்லியின் இந்த நகர்வு, ஓ.பி.எஸ் மட்டுமல்லாமல் தமிழக பா.ஜ.க-வுக்குப் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.