Published:Updated:

டெல்லி வன்முறை: விடைதெரியவேண்டிய 7 கேள்விகள்!

டெல்லியில் அரங்கேறிய கொடூர வன்முறையில் விடை தெரியாத பல்வேறு கேள்விகள் உள்ளன.

1
Delhi Violence ( Photo: AP )

வன்முறையில் ஈடுபட்டது யார்?

தலைநகர் டெல்லி வன்முறைக் காடாக மாறியுள்ளது. டெல்லியில் அரங்கேற்றப்பட்ட வன்முறைகள் பிரிவினை கால வன்முறையை நினைவுபடுத்துவதாகவும் 1984-ல் டெல்லியில் அரங்கேறிய சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை நினைவுபடுத்துவதாகவும் உள்ளதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. அசோக் விகார் பகுதியில் இருந்த மசூதி தாக்கப்பட்டது, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர், சிசிடிவி கேமராக்கள் காவல் துறையினராலே உடைக்கப்பட்டது. தற்போதுவரை 56 பேர் உயிரழந்துள்ளதாகவும் மேலும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

டெல்லி கலவரத்தின்போது காவல்துறையும் டெல்லி நிர்வாகமும் நடந்துகொண்ட விதம் பலராலும் கண்டிக்கப்பட்டது. டெல்லி காவல்துறை தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டித்திருந்தது. 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் போன்றதொரு சம்பவத்தை மீண்டும் அரங்கேற விடமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவிக்கும் அளவுக்கு காவல்துறை மெத்தனமாக செயல்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் அரங்கேற்றப்பட்ட வன்முறை நம்முன்னே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

டெல்லி கலவரம்

பிப்ரவரி 24-ம் தேதிதான் டெல்லியில் வன்முறை அதிகமானது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் அமைதியான வழியில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாள்களுக்கும் மேல் நடைபெற்ற வன்முறையில் தற்போதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சொத்துகள், வாகனங்கள், வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கின்றன. வீதிகளில் இருந்தவர்களின் பெயர் கேட்டு வன்முறையாளர்கள் தாக்கியிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் வன்முறையில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். அப்படியெனில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளியிலிருந்து வந்துள்ளார்களா என்கிற கேள்விக்கு தற்போதுவரை பதில் இல்லை.

2
டெல்லி வன்முறை

கலவரத்தில் துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்து வந்தன?

டெல்லி கலவரத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. கலவரம் நடந்த பல்வேறு இடங்களில் காவல்துறை உரிய நேரத்தில் வரவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்து வந்தன. கலவரக்காரர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.

3
( ஓவியம்: அரஸ் )

டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் ஏன் மெத்தனமாக அணுகுகிறது?

உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து முடிக்கிற வரையில் சட்டத்தைச் செயல்படுத்த தடைவிதித்திருந்தாலே இந்த அளவுக்கு போராட்டங்கள் வெடித்திருக்காது என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. இந்த நிலையில், ஜாமியா தொடங்கி சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் நீதிமன்றங்கள் தயக்கம் காட்டியே வந்தன. தற்போது டெல்லி வன்முறை தொடர்பான சில வழக்குகளை ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைத்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

4
நீதிபதி முரளிதர்

நீதிபதி முரளிதரின் திடீர் பணியிட மாற்றம் ஏன்?

சி.ஏ.ஏ விவகாரத்தில் நீதித்துறை மெத்தனமாக நடந்துகொள்வதாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிற அதே நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த பரபரப்பான விசாரணையும் நடைபெற்றது. நீதிபதி முரளிதர் தலைமையிலான அமர்வு வன்முறையைத் தடுக்கத் தவறியதாக டெல்லி காவல்துறையையும் டெல்லி நிர்வாகத்தையும் கடுமையாகச் சாடியது. ஆனால், அன்றைய தினமே நீதிபதி முரளிதரை பஞ்சாப் உயர்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. கொலிஜியம் பரிந்துரைத்த பணியிட மாற்றம்தான் என்றாலும் மத்திய அரசு விமர்சித்த அன்றைய தினமே பணியிட மாற்ற உத்தரவு வந்தது பழிவாங்கும் நடவடிக்கை எனப் பலராலும் கண்டிக்கப்பட்டது.

நீதிபதி முரளிதர் அமர்வு காட்டிய அவசரத்தை, அதே வழக்கை அடுத்து விசாரித்த அமர்வு காட்டவில்லை. 1984 போன்ற வன்முறையை அனுமதிக்க மாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவிக்க, வன்முறையைத் தங்களால் தடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த முரண்பட்ட அணுகுமுறையுமே பலராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

5
டெல்லி காவல்துறை

டெல்லி காவல்துறை ஏன் மெத்தனமாக செயல்படுகிறது?

வன்முறை உருவாவதற்கான சூழ்நிலை நிலவுவதாக காவல்துறை உணர்ந்தால் அந்தப் பகுதிகளில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், டெல்லி வன்முறையின்போது காவல்துறை போதிய அளவில் இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், சில வீடியோக்களில் காவல்துறையினரே சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. காவல்துறை கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பா.ஜ.க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு டெல்லி காவல்துறை தற்போது வரை தயக்கம்காட்டி வருகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் கடிந்துகொண்டபோதும் கூட எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மேலும் கால அவகாசம் கோரியுள்ளது. வெறுப்பு பேச்சு மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை இந்த அளவுக்குச் சென்றிருக்காது எனப் பல முன்னாள் காவல்துறை அதிகாரிகளுமே தெரிவித்துள்ளனர். பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா பேசிய வீடியோவில் சில காவல்துறை அதிகாரிகளுமே தென்பட்டனர். வன்முறை தற்செயலாக உருவானது இல்லை என்றும் கூறப்படுகிறது. திட்டமிடப்பட்ட வன்முறையைத் தடுக்க டெல்லி காவல்துறை தவறியதோடு, வன்முறைக்குப் பிறகான நடவடிக்கைகளையும் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

6
மோடி - அமித் ஷா

மோடி, அமித் ஷா ஏன் மௌனம் காக்கின்றனர்?

டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி வன்முறை தொடர்பாக பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கலவரம் பாதித்த பகுதிகளையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்தான் சென்று பார்வையிட்டார். கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

பிரதமர் மோடியும் டெல்லி வன்முறை தொடர்பாக மேம்போக்காகவே பேசியுள்ளார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. டெல்லி வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

7
அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன?

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொள்வதை ஆம் ஆத்மி கட்சியினர் தவிர்த்தே வந்தனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகாவது அவர்கள் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களில் தலை காட்டுவார்கள் எனச் சொல்லப்பட்ட ஆரூடங்களும் பொய்த்துப்போயின. தற்போதுமே ஆம் ஆத்மியும் டெல்லி அரசும் டெல்லி வன்முறை தொடர்பாக வலுவான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. மாறாக அமைதி காக்க வேண்டும் என்றே கோரி வருகிறது. சி.ஏ.ஏ - என்.ஆர்.சி தொடர்பாகவும் ஆம் ஆத்மி தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்காத நிலையில் டெல்லி வன்முறையிலும் மௌனம் காப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு