Published:Updated:

பயிர்க்காப்பீடு: `காலநீட்டிப்புக்கு எல்.முருகன் வழிவகை செய்யவேண்டும்!' - டெல்டா விவசாயிகள் கோரிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மத்திய அமைச்சர் எல்.முருகன்
மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க இணை அமைச்சர் எல்.முருகன் போன்றவர்கள் முயற்சி செய்தால், மிக எளிதாக காலநீட்டிப்பு பெற்றுத் தர முடியும்.

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு நவம்பர் 15-ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காலக்கெடு விதித்திருக்கின்றன. ஆனால், தொடர் கனமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான விவசாயிகளால் முழுமையாகக் காப்பீடு செய்ய முடியாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. அதனால், டிசம்பர் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதை மறுத்துவிட்டன. இது தொடர்பாகத் தமிழக அரசு அந்நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியும் கூட எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், மத்திய அரசில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் இந்த விவகாரத்தில் காலநீட்டிப்புக்கு வழிவகை செய்யவேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்வது வழக்கம். விவசாயிகள் தங்கள் நெற்பயிர்களைக் காப்பீடு செய்தால்தான், இயற்கை சீற்றங்கள், பூச்சி, நோய்த்தாக்குதல்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெற்று, ஏற்பட்ட நஷ்டத்தை ஓரளவுக்காவது ஈடு கட்ட முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், இந்த ஆண்டு குறுவை நெற்பயிர்களுக்குப் பயிர் இன்சூரன்ஸ் திட்டமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறுவை அறுவடை நேரத்தில் பெய்த கனமழையால், பல விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்தும் கூட, அவர்களால் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டது. சம்பா, தாளடி நெற்பயிர்களுக்காவது இன்சூரன்ஸ் செய்து விடலாம் என நினைத்திருந்த நேரத்தில் அதற்கும் வழியில்லை.

திருவாரூர்: தொடர் கனமழை, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள 24 மணி நேர காவல் மீட்புக்குழுக்கள்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், ``தொடர் கனமழையால் குறுவை அறுவடையில் காலதாமதம். அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதிலும் பிரச்னை. இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் கணினி சிட்டா பெற முடியாத வகையில் ஒரு மாதத்துக்கும் மேலாக, அத்தார்களான இணையதளம் முடக்கி விட்டது. கடந்த பத்து நாள்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால், விவசாயிகள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

டெல்டா விவசாயிகள்
டெல்டா விவசாயிகள்

இதனால், அனைத்து விவசாயிகளாலும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர் இன்சூரன்ஸ் செய்ய இயலாது எனவும், டிசம்பர் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். தமிழக அரசு, இது தொடர்பாகப் பயிர் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியும், காலநீட்டிப்பு செய்யப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கச் செயல். கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஏன் மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் இதற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, மத்திய அரசில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க இணை அமைச்சர் எல்.முருகன் போன்றவர்கள் முயற்சி செய்தால், மிக எளிதாக காலநீட்டிப்பு பெற முடியும். இவர்களுடைய கட்சிதானே மத்தியில் ஆட்சி செய்கிறது. அதுவும் எல்.முருகன் மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் நிலையில், அவருக்கு இது மிகவும் எளிதான காரியம். பயிர் இன்சூரன்ஸ் திட்டம் என்பது, பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் என்றுதான் அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. இதில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலைத் தீர்த்து வைப்பது இவர்களுடைய கடமைதானே.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

தமிழக பிரச்னைகளை அறிந்த நிர்மலா சீதாராமன் தான் மத்திய நிதி அமைச்சராக இருக்கிறார். இவர்கள் இருவரும் மத்திய அரசில் இவ்வளவு செல்வாக்குடன் இருந்தும் கூட, விவசாயிகளுக்கு உதவி செய்ய இவர்களுக்கு மனம் வரவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் தமிழக மக்களின், குறிப்பாக விவசாயிகளின் மனதில் பாரதிய ஜனதா கட்சியால் இடம்பிடிக்க முடியவில்லை. அக்கட்சியைச் சேர்ந்த எல்.முருகன் மிகவும் இளம் வயதில் மத்திய அமைச்சராகி இருக்கிறார். எனவே, அவர் விவசாயிகள் நலனில் மிகுந்த துடிப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டு, பயிர்க் காப்பீட்டுக்குக் கால நீட்டிப்பு பெற்றுத் தர வேண்டும்" என்றார்.

சம்பா பயிர் காப்பீடு: `டிசம்பர் 15 வரை அவகாசம் வேண்டும்! - டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு