Published:Updated:

வீடுகள் இடிப்பு; முதியவர் தீக்குளிப்பு: பற்றியெறியும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் - என்ன நடக்கிறது?

ராஜா அண்ணாமலைபுரம்

`பக்கிங்காம் கால்வாயின் ஆக்கிரமிப்பு' எனும் பெயரில் கடந்த ஒரு வாரமாக, சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால், சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டுவருகின்றன.

வீடுகள் இடிப்பு; முதியவர் தீக்குளிப்பு: பற்றியெறியும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் - என்ன நடக்கிறது?

`பக்கிங்காம் கால்வாயின் ஆக்கிரமிப்பு' எனும் பெயரில் கடந்த ஒரு வாரமாக, சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால், சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டுவருகின்றன.

Published:Updated:
ராஜா அண்ணாமலைபுரம்

`பக்கிங்காம் கால்வாயின் ஆக்கிரமிப்பு' எனும் பெயரில் கடந்த ஒரு வாரமாக, சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகள் இடிக்கப்பட்டுவருகின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகளால், நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுக்காப்போடு சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டுவருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர். மேலும், முதியர் ஒருவர் தீக்குளித்து இறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

ராஜா அண்ணாமலைபுரம் வீடுகள் இடிப்பு
ராஜா அண்ணாமலைபுரம் வீடுகள் இடிப்பு

ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் அந்த மக்கள். அத்தனை ஆண்டுகளாக மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு முறையாக தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் போன்றவற்றைச் செலுத்திவருகின்றனர். இந்த நிலையில், ராஜீராய் என்பர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தற்போது அவர்களின் வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்துவருகின்றனர். மேலும், வீடிழந்த மக்களுக்கு பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தப் பகுதியில் ஏற்கெனவே 2015-ல் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கால்வாய் ஆக்கிரமிப்பு என்று இடிக்கப்படும்போது கால்வாயிலிருந்து இவர்களின் வீடுகள் சற்றுத் தொலைவில் இருப்பதால் இவர்களை வெளியேற்ற மாட்டோம் என்று அரசுத் தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், வீடுகள் இடிப்பதை எதிர்த்து போராடிவரும் மக்கள் தங்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு ஆந்திரா செல்ல முடிவெடுத்தனர். இவ்வாறு முயற்சி செய்த மக்களை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இந்நிலையில் 8.5.2022 அன்று வீடுகள் அகற்றுவதை எதிர்த்து அப்பகுதி முதியவர் கண்ணையா தீக்குளித்தார். உயிருக்குப் போராடும் நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அடுத்த நாள் காலை அதாவது, 9.5.2022 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் செய்தி அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தீக்குளித்த கண்ணையா
தீக்குளித்த கண்ணையா

இது குறித்து அப்பகுதியில் வசித்துவரும் மோகன், ``30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் பகுதி அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால் தனிப்பட்ட நபரால் போடப்பட்ட வழக்கின் பேரில் எங்களை வெளியேற்ற முயல்கின்றனர். எங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. குப்பைகளைப்போல் சென்னைக்கு வெளியே உள்ள பெரும்பாக்கத்திலும், நாவலூரிலும் தூக்கி எறியப் பார்க்கிறார்கள். ஆதார் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை ஒப்படைத்துவிட்டு அகதிகள்போல் ஆந்திரா மாநிலம் செல்ல முயன்றோம். அப்படிச் செல்லவும் முடியாமல் எங்களை போலீஸார் தடுத்துவிட்டனர்" என்று வருத்தத்துடன் கூறினார்.

ராஜா அண்ணாமலைபுரம் வீடுகள் இடிப்பு
ராஜா அண்ணாமலைபுரம் வீடுகள் இடிப்பு

தீக்குளித்து உயிரிழந்த கண்ணையனின் குடும்ப நண்பர் பத்மா, ``கடந்த பத்து நாள்களாக இங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை. இங்கு யார் வீட்டிலும் சமைப்பதில்லை. பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு படிக்கும் சூழலோ, மனநிலையோ இல்லை. காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இங்குள்ளவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி, பொருள்களையெல்லாம் தூக்கிப்போட்டு வீட்டை இடிக்கிறார்கள். செல்போன் பயன்படுத்தினாலும் காவல்துறையினர் மிரட்டுகின்றனர். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு எங்களை நிலைகுலைய வைக்கின்றனர். பெண்கள், முதியவர் என்றும் பாராமல் தள்ளுவதும் அடிப்பதுமாக அவர்களின் அராஜகம் தொடர்கிறது" என்று கண்கலங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, நகர்ப்புற வாழ்வுரிமை நில உரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த செபாஸ்டியன், ``தனிப்பட்ட நபர் போட்ட வழக்கின் பெயரில் வீடுகள் அகற்றப்படுகின்றன என்று எடுத்துக்கொள்ள முடியாது. தனிப்பட்ட நபர் போட்ட வழக்கை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படும் ராஜா அண்ணாமலைபுரம் ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்ன்பகுதி என அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியை அகற்றக் கூடாது, அங்குள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று 2021-ல் போடப்பட்ட G.O சொல்கிறது. இந்த G.O வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீடுகளை இடிக்க முற்படுவது மக்கள் வாழ்வுரிமை மீதான தாக்குதல்.

எத்தனையோ அரசு ஆக்கிரமிப்புகள் இருக்கையில் அப்பாவி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அவர்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு அகற்றினால் குழந்தைகளின் கல்வியும், மக்களின் வாழ்வாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீட்டு கட்டடங்களை நிரப்பவே இவ்வாறு சென்னையில் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள மக்களைத் தொடர்ந்து வெளியேற்றிக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே உள்ள கட்டடங்களை நிரப்பினால்தான் மீண்டும் கட்டடங்களை எழுப்ப முடியும் என்ற எண்ணத்தில் இவ்வாறு அரசு செயல்படுகிறது. இன்னும் எத்தனையோ இழப்புகளை நாம் சந்திக்கப்போகிறோம்" என்றார்.

நகர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பு - செபஸ்டின்
நகர்ப்புற குடியிருப்பு - நிலவுரிமைக் கூட்டமைப்பு - செபஸ்டின்

அதேபோல, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த சித்திரகலா, ``தற்போது மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறந்தவரின் குடும்பத்துக்காக 50 லட்சம் வழங்க வேண்டும், இதுவரை இடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளை இடிக்கக் கூடாது. இடித்த வீடுகளில் உள்ளவர்களுக்கு பக்கத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் வீடு வழங்க வேண்டும். மக்களிடம் கடுமையாக நடந்துகொண்ட காவல் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராடுவதாக தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் சி.பி.எம் மாநிலப் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சீமான், தே.மு.தி.க பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இடிக்கப்பட்ட வீடுகள்
இடிக்கப்பட்ட வீடுகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அப்பகுதி மக்களுக்கு கொடுத்துள்ள கடிதத்தில், `அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதி' என்பதை மேற்கோள் காட்டியுள்ளனர். இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் அங்குள்ள மாணவர்களின் மனநிலையை பாதித்திருக்கிறது. மேலும் 250 வீடுகள் இடிப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் குவித்திருப்பதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism